Friday, July 16, 2021

MAHA PERIYAVAA STORIES

 "வயோதிக காலத்ல பெத்தவாளைக் காப்பாத்த வேண்டியது   பிள்ளேளோட கடமை. அம்மா, அப்பா ஶாபம் குடுத்தா... பின்னால வர்ற குடும்பமே வீணாப் போய்டும்!"

 

மஹாபெரியவர் நமக்குக் காட்டித் தந்த எத்தனை எத்தனையோ உபதேசங்களில் மிகவும் முக்யமானது, பெற்றத் தாயை கடைசி வரையில் பேணிக் காப்பது. அவளுடைய இறுதி மூச்சு வரை அவளுக்குச் சந்தோஷமாகவும், பக்தியுடனும் கைங்கர்யம் செய்வது.

 

ஆதிசங்கரர், மஹாபெரியவர், ரமணர், வள்ளலார், சேஷாத்ரி ஸ்வாமிகள், விசிறி ஸ்வாமிகள் போன்று, நம்மை எல்லா பந்தங்களிலிருந்தும் விடுவித்துக் கொள்ளச் செல்லும் மஹான்கள் எல்லோருமே ஏனோ, தங்கள் இறுதிப் பயணத்திற்குச் சற்று முன்னர் தன்னைப் பெற்றவளை நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.

 

முற்றும் துறந்த முனிவர்க்கே பெற்ற தாய் என்பது விடுபட முடியாத விஷயம் போலும்.

 

நம்மைப் போன்ற பாமரர்கள், பெற்ற தாயை எவ்வாறு பேண வேண்டும் என்பதற்கு நிறைய நிகழ்ச்சிகள் மூலம் நம் மஹாபெரியவா நமக்கு உணர்த்தியிருக்கிறார். அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்று:

 

பெரியவாளிடம் ஒரு பக்தர் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு கொஞ்சம் தயங்கி நின்றார். என்னவோ கேட்பதற்கு தயங்கி மயங்கி நின்றார்.

 

"என்ன?" என்பது போல் பெரியவா பார்த்தார்.

 "இல்ல....வந்து....

எங்கம்மாக்கு புத்தி ஸ்வாதீனம் இல்ல......"

 

பெரியவா எதுவும் பேசாமல் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

"... வாஸக் கதவை தொறந்து போட்டுட்டு எங்கியாவது போய்டறா! அப்றம் அங்க இங்க அலஞ்சு தேடிக் கண்டு பிடிக்க வேண்டியிருக்கு! ஆத்துல வேற யாருமே இல்ல.''

 

அதற்கு மேல் பேச அவருக்கு வரவில்லை. பின்னர், சுதாரித்தவராய்..

 

"அதுனால,..........""அதுனால..."அம்மாவ....மடத்துல கொண்டு வந்து விட்டுடலாமா?.....

இழுத்தார்.

 

சந்திரனைப் போல குளிர்ச்சியான பெரியவாளின் திருமுகம் சட்டென்று கடுமையானது.

 

''நல்லவேளை....

எங்கியாவது கண்காணாத காட்டுலக் கொண்டு போய் விட்டுடலாமான்னு கேக்காம, அந்த மட்டுல, எங்கிட்ட கொண்டு வந்து விடலாமான்னு கேக்கத் தோணித்தே ஒனக்கு!"

 

பெரியவா சற்றுக் கடுமையாகவும், மிகுந்த வேதனையோடும் கூறினார்.

 

சுற்றியிருந்தவர்கள் மிகுந்த பரபரப்பானார்கள்.

 

"தாயாருங்கறது தெய்வம்!.

'தாயாருக்கு மேல் தெய்வமில்லே; ஏகாதஸிக்கு மேல் வ்ரதமில்லே' ன்னு பழமொழியே உண்டு.

 

என்ன பண்றது? தாயார்கள் பாடு இந்த மாதிரி ஆயிடுத்து!." என்று வ்ரக்தியான குரலில் சொல்லிக் கொண்டே எழுந்து உள்ளே போய் விட்டார்.

 

சுற்றியிருந்தவர்கள் பதறிவிட்டார்கள். இந்தப் பொல்லாத மனிதன் பெரியவரின் மனம் நோகும்படியாகச் செய்து விட்டாரே என்று அனைவருக்கும் மிகுந்த மன வருத்தம் உண்டாயிற்று.

 

பக்தரோ..."ச்சே! என்ன மோசமா  செஞ்சுட்டேன்! பெரியவாகிட்டயா இப்டி பேசிட்டேன்!"

தவித்துவிட்டார்!

 

அதோடு, தன் தவறை உணர்ந்தும் விட்டார்.

 

பெரியவா கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தார்.

"பெரியவா க்ஷமிக்கணும். எங்கம்மாவைப் பத்தி தப்பாப் பேசிட்டேன்", கெஞ்சினார்.

 

அந்த பக்தரின் கல் மனம் உடைந்து கரையத் தொடங்கியது. தன் தாயின் மேல் பரிவும் பாசமும் பெருகத் தொடங்கியது. இதுதான் மஹான்களின் சகவாசத்தால் நமக்கு ஏற்படும் குண மாற்றம் போலும்.

 

ஶாந்தமே ரூபமான பெரியவா அவரை முன்னிட்டு, நம் எல்லோருக்கும், முக்யமாக, 'பெரியவாதான் எல்லாம்! 'என்று வெறுமனே வாய் வார்த்தையாக மட்டுமே சொல்லிக் கொண்டு, அவர் சொல்லும் எதையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் அலையும் நம்மைப் போன்றவர்களுக்குமான முக்யமான உபதேஸத்தை அருளினார்.

 

"வயோதிக காலத்ல பெத்தவாளைக் காப்பாத்த வேண்டியது   பிள்ளேளோட கடமை;"

 

"அம்மா, அப்பா ஶாபம் குடுத்தா... பின்னால வர்ற குடும்பமே வீணாப் போய்டும்! தனியா ஒன்னால அம்மாவை கவனிச்சுக்க முடியலேன்னா...ஒரு ஆஸாமியை ஒத்தாஸைக்கு வெச்சுக்கோ...."

 

"பத்துக் கொழந்தேள்னாலும், அம்மாக்காரி கஷ்டமோ, நஷ்டமோ, வளக்கலையா?பாவம் ஏதோ கர்மா. புத்தி ஸ்வாதீனத்ல இல்லேன்னா. தொரத்தி விட்டுடுவேளா எங்கியாவது? மனுஷாளுக்கும், ம்ருகத்துக்கும் அப்றம் என்ன வித்யாஸம்? இதே நீ பெத்த கொழந்தைன்னா..இப்பிடிக் கேப்பியா ?"

 

பெரியவாளின் அந்தக் கோபமில்லாத கோபம் அந்தப் பகுதியையே கடும் அமைதியில் தள்ளியது. அனைவருக்கும் உடல் நடுங்கியது.

 

தாயைத் தனியே விட நினைத்த அந்த மனிதர் நிலைகுலைந்து போனார். மனதில் பய வெள்ளம் புரண்டோடத் தொடங்கியது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இதுதான் போலும்.

 

"மன்னிச்சிடுங்கோபெரியவா. பெரியவா மனஸை ரொம்ப நோகடிச்சுட்டேன். அம்மாவை நல்லபடி பாத்துக்குவேன். ஸத்யம்...."

 

பெரியவாளின் கோபம் இளகத் தொடங்கியது. குழந்தைகளின் வாழ்வில் ஒரு தாயின் பங்களிப்பை சிலாகித்துச் சொல்லத் தொடங்கினார்:

 

"ஸந்தோஷம்.....லோகத்ல, எத்தனையோ கொழந்தேள் அனாதையா திரியறதுகள். அம்மாங்கறவ நம்மளுக்கு அந்த அனாதைப் பட்டம் கெடைக்காம பரம உபகாரம் பண்ணியிருக்கா.....அவளோட வ்ருத்த தஸைல, அதாவது அவளோட கடைசி காலத்துல, அவளை நல்ல படியா கவனிச்சுக்கற பாக்யம் எல்லாருக்கும் கெடைக்காது....

ஒனக்கு அந்த அனுக்ரஹம் கெடச்சிருக்கு...."

 

ஆஸீர்வாதம் செய்தார், தாயினும் சாலப் பரியும் மஹாபெரியவா.

 

கண்களில் கண்ணீரோடு, தன் அம்மாவுக்கு நல்லதொரு பிள்ளையாக, திரும்பிப் போனார் அந்த பக்தர்.

 

இதைப் படிக்கும் அனைவரும் நம்மைப் பெற்றவளை, இனிவரும் காலங்களிலாவது எந்தவொரு மன வருத்தத்துக்கும் ஆளாக்காமல், அம்மா என் அண்ணா வீட்ல இருக்கா, தங்கை வீட்ல இருக்கா, அவளுக்குப் பத்துப் பேர் கூட இருக்குற முதியோர் இல்லம்தான் ஒத்துவரும் என்று ஒதுக்கிவிடாமல், நம்முடனே அவளை வைத்து அவளைப் பராமரித்து அவளுக்குச் செய்யும் கைங்கர்யத்தை மஹாபெரியவருக்குச் செய்யும் கைங்கர்யமாகச் செய்தால், நம் இல்லங்களில் மஹாபெரியவாளும், மஹாலக்ஷ்மியும் வாசம் செய்யத் தொடங்குவார்கள் என்பது சத்தியம்.

 

என்றேனும் ஒருநாள் மஹாபெரியவாளின் தரிசனமும் நமக்குக் கிடைக்கக் கூடும்.

 

மஹாபெரியவாளின் திருவடிக்கே...

Ashada Navaraathiri Festival 2021 - Tanjore - Sixth Day decoration

SRI MAHA VARAHI - NAVATHANIYA ALANGARAM


Source : https://m.dinamalar.com/temple_detail-amp.php?id=115203