Devotional Content

 நோய்களை தீர்க்கும் புண்ணிய தலமாக விளங்கும் திருத்தேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்.

 

நோய்களை தீர்க்கும் புண்ணிய தலமாக விளங்கும் திருத்தேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

 


கற்கடம் என்றால் நண்டு. நண்டு பூசித்த தலமாதலால் ஈஸ்வரர் கற்கடேஸ்வரர் ஆனார். தற்பாேது இக்கோவில் நண்டான்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஊர் திருந்துதேவன்குடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தார். தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை கோமுகம் இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது.

 

இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதை கண்காணித்த பொழுது நள்ளிரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலர் ஒன்று கோமுகம் வழியே ஈசனிடம் செல்வதுகண்டு வியந்தபோது உன்னால் நண்டாக சாபம் பெற்ற கந்தர்வனே மலர் கொண்டு பூசித்தான்.

 

உன்னை கண்டு பயந்து ஒளிந்து கொண்டுள்ளான் என ஈசனிடம் இருந்து அசரீரி கேட்டது. ஆடி அமாவாசை பூர நட்சத்திரத்தன்று காறாம் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்யும் போது லிங்கத்திருமேனியின் பிளவில் இருந்து பொன் நிற நண்டு வந்து காட்சி அளிக்கும் என்று வசிஷ்டமகாத்மியம் நூலில் கூறப்பட்டுள்ளது.

 

6-2-2003இல் கும்பாபிஷேக முதல் நாள் யாகபூசையின் போது யாககுண்டத்தை நண்டு வலம் வந்த அதிசயம் நடந்ததை கண்டதாக கூறப்படுகிறது.மன்னர் ஒருவர் கடும்நோயால் பாதிக்கப்பட்டு இவ்வாலய ஈசனை வேண்டி குணம் அடைந்தார். அம்மன்னன் பிரதிஷ்டை செய்த அம்மனே அருமருந்தம்மை ஆகும்.

 

இது நோய் தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய் சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாக கருதப்படுகிறது. கோவில் வெளிப்புர சுவற்றில் மருத்துவர் மருந்து தயாரிப்பது போன்ற புடைப்புச்சிற்பம் காணப்படுகிறது.

 

அமைவிடம்

திருத்தேவன்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவில் திருவிசநல்லூர் அருகில் அமைந்துள்ளது.

 

வழிபட்டோர்

நண்டு பூசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

 நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில்.

 

நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும்.

 

NARASIMMAR TEMPLE

கோவில் அமைப்பு

 

இக்கோயிலின் மூலவர் நரசிம்மர் ஆவார். தாயார் நாமகிரி தாயார் ஆவார். நாமக்கல் மலையும் அதன்மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் கோட்டையாக உள்ளது. மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும் மலைமேல் கோட்டையின் உள்ளே வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ளார். இப்படி மூன்று அவதாரம் பெற்றிருப்பினும், நரசிம்மரே இங்குப் பிரதானம்.

 

முதலில் கோயிலுக்கு முன்னே அனுமார் கிழக்குத் திசை நோக்கியவராக 18 அடி உயரத்தில் காட்சி தருகிறார். அடுத்து நரசிம்மர் நாமகிரித் தாயாருடன் உள்ள சந்நிதி. நரசிம்மர் மிகவும் கம்பீரமாகப் பெரிய சிம்மாசனம் ஒன்றின் மீது அமர்ந்து உள்ளார். நரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உள்ளார். திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களில் இடம் பெற்றுள்ளனர்.

 

நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரில் ஒரு சாளரத்தின் வழியே அனுமாரைக் காணலாம். ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரது பாதங்களைப் பார்த்து இருப்பதுபோல் அமைந்துள்ளது. கோட்டையின் மேற்குப்புறம் அரங்கநாதரைத் தரிசிக்கலாம். அரங்கநாதர் கார்க்கோடகன் மேல் தெற்கே தலையும் வடக்கே காலும் நீட்டிச் சயனித்திருப்பதைக் காணலாம்.

 

காலடியில் சங்கரநாராயணரைக் காணலாம். சற்றுப் பின்னால் அரங்கநாயகி தாயாரைக் காணலாம்.கீழே இறங்கி வந்தால் கமலாலயம். அது அனுமனுக்குத் தாகம் தீர்த்தது. அடுத்து மலையேறினால் வரதராஜரைத் தரிசிக்கலாம்.

 

இரண்யனை வதம் செய்த நரசிம்மர் யாரும் நெருங்க இயலாதபடி உக்கிரம் பொங்கக் காட்சி தந்ததைக் கண்டு பிரகலாதன் வேண்டுதலுக்கு இணங்க சாந்தமூர்த்தியாகி சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர, திருமகள் தனது நாயகனைப் பிரிந்ததால் இந்தக் கமலாலயத்தில் தவம் புரிய, சஞ்சீவி மலையைச் சுமந்து வந்த அனுமன் கண்டகி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம நரசிம்மரையும் எடுத்துக் கொண்டு வர, இந்தக் கமலாலயத்தைக் கண்டதும் தனது தாகம் தீர்த்துக் கொள்ள நினைத்து நரசிம்மரைக் கையிலிருந்து கீழே வைக்க, தாகம் தீர்ந்ததும் நரசிம்மரைத் தூக்கினால் நரசிம்மர் வரவில்லை.

 

எவ்வளவு முயன்றும் அனுமனால் முடியவில்லை. இங்கே தான் நரசிம்மரை நினைத்து லட்சுமியும் தவம் புரியவே, அவளுக்கு நரசிம்மர் அருள் புரியவே இங்கே தங்கி விட்டதாகக் கூறுவர். அற்புதச் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட நாமக்கல் நரசிம்மர் வரம் தரும் விஷ்ணுவாகக் கருதப்படுகிறார். நரசிம்மரைக் கூப்பிய கரங்களுடன் சேவித்தவாறு அருள்மிகு ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தவண்ணம் எழுந்து அருள்கின்றார்.

 

கல்வெட்டு

 

இந்தத் தலத்துக் கோயில்கள் குடைவரைக் கோயில்கள். 1300 ஆண்டுகளுக்குமுன் மகேந்திர வர்மன் குடைந்து அமைத்தவை. அதியேந்திர விஷ்ணு கிரகம் என்று இத்தலத்தைப் பற்றிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விழாக்கள்

 

நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி ஆகியவை இங்கு நடைபெறுகின்ற விழாக்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.

 

ராமானுஜம் தொடர்பு

 

கணித மேதை ராமானுஜம் இத்திருக்கோயிலின் நாமகிரி தாயாரின் பக்தர். ராமானுஜம் அவர்களுக்குக் கனவில் கணித சூத்திரங்களுக்கு நாமகிரி தாயார் விடை தந்துள்ளார். கடினமான கணக்குகளுக்குக் கனவில் விடை கண்டு, உடனே எழுந்து அவற்றின் வழிமுறைகளை எழுதுவது கணித மேதை ராமானுஜத்தின் வழக்கம்.

x

 

திருமண வரம் அருளும் குன்றத்தூர் முருகன் 

 

தென் தணிகை என்றால் பலருக்கும் தெரியாது. குன்றத்தூர் என்றால் உடனே புரிந்துவிடும். குன்று இருக்கும் ஊர் என்பதால் அதற்குக் குன்றத்தூர் என்று பெயர் உண்டானது என்கிறார்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமல்லவா... அதற்கு ஏற்ப இங்குள்ள குன்றிலும் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கிறார். அந்தக் கோயிலுக்குதான் தென் தணிகை என்று பெயர்.

 அசுர சக்திகள் என்பவை மனிதர்களின் ஆன்மாவை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்று மலங்களைக் குறிப்பவை மும்மலங்களையும் சம்ஹாரம் செய்த குமரக்கடவுளை வழிபட்டால், அவற்றிலிருந்து விடுபட்டு, பிறவாப் பேரின்ப நிலையை அடையலாம் என்பது தத்துவம்.

 

 குன்றத்தூர் சுப்பிரமணியர்

ஆணவ மலமாகிய சூரபத்மனை திருச்செந்தூரில் நீரின் மார்க்கமாகவும், கண்ம மலமாகிய சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்தில் நிலத்தின் மார்க்கமாகவும், தாருகாசுரனை திருப்போரூரில் ஆகாய மார்க்கமாகவும் சம்ஹாரம் செய்தாராம் முருகன்.

 திருப்போரூரில் தாருகாசுரனை சம்ஹாரம் செய்த குமரக்கடவுள், திருத்தணிகை செல்லும் வழியில் குன்றத்தூரில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவர் வழிபட்ட இறைவன், 'கந்தழீஸ்வரர்' என்ற பெயரில் குன்றத்தூரின் மலையடிவாரத்தில் தனிக்கோயில் கொண்டு அருள்கிறார்.

 பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் அவதரித்தது இந்தத் தலத்தில்தான். அவரது விருப்பப்படி இரண்டாம் குலோத்துங்கச் சோழன் இந்தக் கோயிலை எழுப்பியதாகச் சொல்கிறார்கள்.

 சேக்கிழார் பெருமான் தினமும் குன்றத்தூர் குமரனை வழிபடுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார். அதை நினைவுகூரும் வகையில், மலையடிவாரத்தில் சேக்கிழாருக்குத் தனிச் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சேக்கிழார் குருபூஜையின்போது, முருகப் பெருமான் மலையிலிருந்து சேக்கிழார் சந்நிதிக்கு எழுந்தருளி, அவருக்கு தரிசனம் கொடுப்பது மரபாக இருக்கிறது. முருகனின் ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை, தை மாதக் கிருத்திகை, கந்தசஷ்டி விழா, மற்றும் பல விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

 

 குன்றத்தூர் முருகன்

84 படிகள் கொண்ட மலைக் கோயிலின் சிறப்புகள் ஏராளம்.


இங்குள்ள விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், பைரவர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை, வில்வ மரத்தடி விநாயகர் ஆகியோரின் சந்நிதிகள் பழைமையும் பெருமையும் வாய்ந்தவை.

 இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமண வரம் கிடைக்கும். இங்குவந்து தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். மேலும் சொந்த வீடு வேண்டும் பக்தர்களுக்கு விரைவில் அந்தக் கனவு பலிக்கிறது என்கிறார்கள்.

 இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பு கருவறையின் அற்புதமும் அதன் கோபுர அமைப்பும். மேலும் இங்குள்ள வில்வ விநாயகரும் மாறுபட்ட அற்புத தோற்றத்தில் அருள் பாலிக்கிறார்.               

             


 

விஸ்வாமித்திரருக்கென தனிக்கோவில்



இராமாயண கால சிறப்பு பெற்றதும்,  நவக்கிரக பரிகார ஸ்தலங்களுள் ஒன்றான  கூடம்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற ஊரில் அருள்புரியும். அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலை பத்தி இப்பப் பதிவில் பார்க்கலாம். இக்கோவிலின் மிக முக்கியமான சிறப்பு என்னன்னா.., விஸ்வாமித்திரருக்கென தனிக்கோவில் தமிழகத்துலயே இங்குதான் இருக்கு.


கலியுகமான இக்காலத்தில் வாழும் நமக்கு நிமிடத்திற்கு நிமிடம் பிரச்சனைதான். என்றைக்கு பிரச்னை என்ற ஒன்று வந்ததோ அன்றே தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் செய்யப்படும் நவக்கலச அபிஷேகம் நவகிரகங்களின் தோஷங்களில் இருந்து விடுபடச் செய்கிறது.


விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். .ஆனால், விஸ்வாமித்திர மகரிஷி இழந்த தன் சக்தியை மீட்டெடுக்க வேண்டி தேர்ந்தெடுத்த இடம்தான் இந்த விஜயாபதி. கடற்கரை கிராமமான இந்த விஜயபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் வழியாக சென்று. அங்கிருந்து ராதாபுரம் வழியாக சென்றால், அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது  கடற்கரை கிராமமான இந்த விஜயாபதி, கூடங்குள அணுமின் நிலையத்திலிருந்து வெறும் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவில் என்பது கூடுதல் தகவல்.


இதுதான் திருக்கோவிலின் முகப்பு, கோவிலினுள் நுழையும் முன்பு இந்த கோவிலின் சிறப்புகளையும், ஸ்தல வரலாற்றையும் பார்க்கலாம்....,


இராம, லட்சுமணன் இருவரும் விஸ்வாமித்திரனின் யாகத்திற்கு இடையூறு செய்த தாடகை மற்றும் சில அரக்கர்களை கொன்றனர். அதனால் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதை தீர்க்க ஒரு யாகம் செய்ய இடம் தேடி அலைந்து, முடிவில் தில்லைவன காடான சிதம்பரம் வந்து காளியை பிரதிஷ்டை செய்தார்கள். பொதுவா இந்த மாதிரி பரிகாரங்கள், நீத்தார் கடன்லாம் கடலோரங்களில் தான்  நடத்தவேண்டும் எனபது மரபு. சிதம்பரம் அருகில் கடல் இல்லாததால இராம, இலட்சுமணனோடு தெற்கு நோக்கி வந்தார் விஸ்வாமித்ரர். பின்பு, அதேப்போல தில்லைவனம் இங்கே இருப்பதை கண்டார் .

உடனே அங்குள்ள தில்லைவன தோப்பில் காளியை பிரதிஷ்டை செய்து காவல் தெய்வமாக்கினார். பின்னர் ஹோமக்குண்ட விநாயகர், விஸ்வமிதிர மகாலிங்க சுவாமி, அகிலாண்டேஸ்வரி ஆகிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்தார்.  பின்னர் ஹோம குண்டம் வளர்த்து இராம, லட்சுமணனது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கினார்.
ஹோமம் முடிந்த உடன் அருகில் உள்ள கடலில் குளித்து இருவரையும் அங்க பிரதட்சனை செய்ய வைத்து, தானும் அங்க பிரதட்சணம் செய்து இராம, லட்சுணனரின் தோஷத்தையும், தான் இழந்த சக்தியையும் மீட்ட இடம்தான் இது. 
இன்றும் அவர் குளித்த இடம் விஸ்வமித்திரர் தீர்த்த கட்டம் என்று அழைக்கப்படுகிறது .

நாம பேசிட்டே இப்ப கோவிலின் உள்பக்கமா வந்துட்டோம், இதுதான் மூலவர் சன்னதி. முதலில் பலிபீடம், அதனை அடுத்து நந்தி. இவை ஒரே நேர்கோட்டில் விஸ்வாமித்திர மகாலிங்க  சுவாமியை நோக்கி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.  சமீபத்துலதான் தரை பகுதிகள்லாம் டைல்ஸ் பாதிக்கப்பட்டு தூண்கள், சுவர்கள்லாம் மிகவும் சுத்தமாக காட்சியளிகின்றன. இந்த கோவிலின் பெருமை தெரிந்து பக்கதர்கள் நிறைய வர தொடக்கி விட்டனர்.   இக்கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னனா இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெறத் தகுதி பெற்றார்.


இது கோவிலின் உட்பிரகாரம். இங்கே செய்யும் பரிகாரங்கள் கண்கூடாக பலிக்கின்றது.  முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடம் இந்த விஜயாபதி என்றும் சொல்வார்கள்.  ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கிருக்கும் விஸ்வாமித்ர தீர்த்த கட்டத்தில் குளித்து, அருகில் இருக்கும் தில்லைக்காளி கோவிலில் பொங்கல் வைத்து வழிப்படுவர். 

அந்த வழிபாடு பலருக்கும், பல்வேறு பிரச்சனைகளில் இருந்தும் உடனடியாக நிவாரணமும் கிடைத்து இருக்கிறது. இராமரும் லட்சுமணரும் தாடகையை வதம் செய்ததால் அவர்களுக்கு பிரம்மஹத்தி   தோஷம் பிடித்தது. அவர்களுக்காக விஸ்வாமித்ர மகரிஷி இங்கே யாகம் செய்தார், அவதார புருசர்களே ஆனாலும், அவர்களும் நவக்கிரக தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது போலும், யாகம் செய்து முடித்ததும் விஸ்வமித்திரர் வடநாடு சென்றுவிட்டார்.

அவர் தங்கிய இடம் இது என்பதால் இந்த இடம் விஸ்வாமித்திரர் பேரி என அழைக்கப்பட்டது. விஸ்வாமித்திரர் பிரதிஷ்டை செய்த சிலைகளைப் பற்றி கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் இங்கே கோவில்கட்டி தன்னுடைய மீன்சின்னத்தை இரட்டை மீன்களாக  கோவிலின் உள் முகப்பில் பொறித்தான்.  அதை இப்பொழுதும் நாம் காணலாம்....,     


விஜயாபதி மேலூர், விஜயாபதி கீழுர் என இரண்டு கிராமங்களாக இருக்கின்றன. ஒருக்காலத்தில் விஜயாபதி பெரிய ஊராக இருந்திருக்கிறது. தேரோடும் வீதி அக்ரகாரம், ஓதுவார் குடியிருப்புகள், அரண்மனை போன்ற வீடுகள் எல்லாம் இருந்திருக்கின்றன.  பல ஆயிரம் ஆண்டுகளாக உலகத்தின் முக்கியத் துறைமுக நகரமாக விளங்கியிருக்கிறது. விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர்.


ஆகமொத்தம் இக்கோவிலும், கிராமமும் யுகங்கள் பல கடந்து இந்திருக்கின்றன. பின்னர் எக்காலத்திலோ அவையெல்லாம் அழிந்து விட்டன. தில்லைவன தோப்பும் அழிந்து விட்டது, இப்பொழுது இரண்டு தில்லை மரங்களுடன், இலங்கையை நோக்கி பார்த்தபடி தில்லைவன காளி மட்டும் கடற்கரை பக்கம் காவல் இருக்கிறாள். தமிழ்நாட்டில் வேறு எங்கும் தில்லை மரங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.இந்த கோவிலுக்கு வருவது மூலம் ஒருவருடைய குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. 

மேலும்,  மாதந்தோறும் அனுஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம், புஷ்பாஞ்சலி, அன்னதானம் எல்லாம் நடைபெறுகிறது. இன்றும் இங்கு விஸ்வாமித்திர மகரிஷி சூட்சுமமாக தவம்  செய்து வருகிறார்  என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.


இங்கு நடைப்பெறும் முக்கியமான பரிகாரம் என்னன்னா நவக்கலச பூஜை. பழையக் காலத்தில் ஒருவருக்கு தீட்சை கொடுப்பதற்கு முன்  புனிதப்படுத்துவது என்ற சடங்கு நடைப்பெறும். சோதிடமுறை பரிகாரங்களில் அருவிக்கரையிலோ இல்ல நதிக்கரையிலோ ஒன்பதுவிதமான கலசங்களில் ஒன்பதுவிதமான நறுமணப்பொருட்கள் வைத்து, அந்தந்த கிரகங்களுக்கு உகந்த வண்ணங்களும், பூக்களும் அந்த கலசங்களில் இடப்பட்டு எல்லாவித மந்திரங்களும் முக்கியமாக அந்தந்த கிரகங்களுக்குரிய மந்திரங்களைச் சொல்லி அந்தக் கலச நீரை தலையில் ஊற்றுவார்கள். அதன்பின் நட்சத்திரங்களைக் கணக்கில் கொண்டு,  27 குடம் தூய்மையான இடத்தில் இருந்துக் கொண்டு வரப்பட்ட நீர் ஊற்றி, உடலையும், மனதையும்  நவகிரகங்களின் பாதிப்பில் இருந்து சுத்தபடுத்தி குருசிஷ்ய தீட்சைகளை கொடுப்பார்கள். 

காலப்போக்கில் இன்று இவை மறைந்துவிட்டன. ஆனால் அதே பரிகாரமுறை இந்த கோவிலில் இன்றும் செய்யப்படுவது மிகவும் சிறப்பு.  பல ஜோதிட வித்வான்கள் இங்கே வந்து பிரபலங்கள் சிலருக்கு இந்த நவக்கலச பூஜையை செய்து முடித்ததும், அதற்குண்டான பலன்களை அவர்கள் எட்டு நாட்களில் அனுபவித்ததும் இங்குள்ளவர்கள்  கண்கூடாக கண்டிருக்கிறார்கள்.


இதுதான் கோவிலின் உட்பிரகாரம்.  மூலவருக்கு நேர் எதிரே சந்திர சூரியரும், கோவிலின் நுழைவாயிலுக்கு வலப்பக்கத்தில் நவக்கிரகங்களும், வீற்றிருக்கின்றனர். நவக்கிரகப்பீடத்தை ஒட்டி ஒரு சிறிய தீர்த்தக்ணறுபடிக்கட்டுகளுடன்அமைக்கப்பட்டுள்ளது.

 கடற்கரை ஓரத்தில் இருந்தாலும் உப்பிலாத தண்ணீர் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து கிடைக்கிறது. திருக்கோவிலில் நாம் நம்முடைய பெயரைப் பதிவு செய்தால் குறைந்த செலவில் நவக்கலச யாகம்செய்கின்றனர்.


சரி, இப்ப நவக்கலச பூஜை எப்படி நடத்தப்படுகிறது என பார்க்கலாம்... நவக்கலச பூஜை செய்யும் முன்பு, நாம் காலையில் நீராடி சுத்தமான உடைகளை உடுத்தி வரவேண்டும். வாய்ப்புள்ளவர்கள் தங்கள்  வீட்டில் இருந்து வெண்பொங்கலோ, இல்ல சர்க்கரை பொங்கலோ செய்து இங்கே இருக்கும் நாகர்களின் பீடத்தில் தங்களுடைய முன்னோர்களின் ஆன்ம விடுதலைக்கும், தங்களுடைய நவக்கிரக துன்பங்கள் தீரவும் முன்னோர்களையும், குலதெய்வங்களையும், விஸ்வாமித்திரமகரிஷியையும், இங்கிருக்கும் இறைவனையும், தாயாரையும் பிரார்த்தனை செய்து..., அவற்றை ஒரு இலையில் வைத்து காகங்களுக்கு படைக்கலாம்.


வாய்ப்பில்லாத  வெளியூர்  பக்தர்கள் ஒரு பிரட் மற்றும் பூந்தியினை சிறிய துண்டுகளாக்கி கலந்தும் படைக்கலாம். சிலர் காகங்கள் வரவில்லை நம் முன்னோர்கள் ஏற்று கொள்ளவில்லையோ என நினைக்கும் போது இங்கிருக்கும் சில பைரவர்கள் அதை சுவைக்க ஆரம்பித்துவிடுவார். அவற்றை உண்டப்பிறகு திருப்தியடைந்து அடுத்த நிலை பூஜைக்கு தயாராகிறார்கள்.  


இனி, இங்கே நடக்கும் பூஜை முறைகளை பற்றி பார்க்கலாம்...., ஒன்பது கலசங்களில் ஒன்பது விதமான பொருட்களை நிரப்புகின்றனர். அவை, பால்,  பன்னீர்,  இளநீர்,  மஞ்சள் பொடி,  சர்வோதயா ஸ்நானபொடி, வெட்டிவேர், சந்தனம்,  விபூதி, குங்குமம். இவற்றை ஒரு குடத்துக்கு ஒன்று வீதம் விட்டு நீர் கலந்து அந்தந்த கிரகங்களூக்குரிய குடங்களை   நவகிரகங்களைப்  போல் அதன் வரிசைப்படி மூன்று வரிசைகளாக வைக்கவேண்டும்.  பின்னர், நடுவில் இருக்கும் குடத்தின் மீது மட்டும் மாவிலையோடு, ஒரு தேங்காயை வைத்து, பரிவட்டம் கட்ட வேண்டும்.


இங்கு கலசங்களுக்கு நூல் சுற்றப்படுவதில்லை, ஜவ்வாதுவை எடுத்து குடங்களின் உள்ளும், புறமும் சிறிது தூவவேண்டும், யாருக்கு நவகிரக சாந்தி செய்யபடவேண்டுமோ அந்த நபரை அங்கே இருக்கும் கலசங்களின் முன்பு கிழக்கு பார்த்து இருக்குமாறு அமரச் செய்கிறார்கள். கலசங்களுக்கு சிறிது தள்ளி பட்டர் அமர்ந்து நவகிரக சாந்தி மந்திரங்களையும், குடங்களுக்குள் தெய்வங்களை வரவைக்க தெய்வ ஆகர்ஷன மந்திரங்களையும் ஓதுகின்றனர்.


எந்த எந்த நவகிரக மந்திரங்களை பட்டர் ஒதுகின்றாரோ  அந்தந்த நவக்கிரக ராசி குடங்களுக்கு அந்த நவகிரகங்களுக்குரிய நிறங்களில் உள்ள பூக்களை அந்தந்த கலசங்களில் மேல் இடவேண்டும். இப்படி எல்லா மந்திரங்களும் முடிந்தவுடன் கோவிலின் பின்பக்கம் இருக்கிற வில்வ மரத்தினடியில் பரிகாரம் செய்யும் நபரை உட்கார செய்து பட்டர் மந்திரம் சொல்லியப்படி ஒவ்வொரு குடமாக, ஒன்பது குடங்களையும் நவ அபிஷேகமாக பரிகார நபரின் தலையில் விடுகிறார். அதன் மூலம் சந்பந்தபட்ட நபரின் உடலும்,உள்ளமும் தூய்மை அடைந்து அவரை பிடித்த தோஷங்கள் யாவும் நிவாரணம் அடைகின்றன. அவர்களுக்கு ஏற்பட்ட தடைகளும்  நீங்குகின்றன  என்பது ஐதீகம்.


இதுதான் தாயார் சன்னதி, அகிலாண்டேஸ்வரி அம்பாள், நவக்கலச பூஜை செய்து முடித்தப்பிறகு மூலவருக்கும், தாயாருக்கும் அர்ச்சனை செய்யப்படுகிறது. பின் இங்க இருக்கும் மற்ற தெய்வங்களையும் தொழுதுவிட்டு கோவிலினுள் மூலவருக்கு நேர் பின்பக்கம் சக்திபீடம் என அழைப்படும் சன்னதி இருக்கிறது. இது இங்கே ஒரு சித்தர் ஜீவசமாதியானார் எனவும் சொல்லப்படுகிறது. இதன் வெளிப்புறம் இராஜேஸ்வரி பீடம் என எழுதப்பட்டு இருக்கு, சமாதியின் மேல் இருக்கும் பீடத்தில், திருப்பாதங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. 

இது விஸ்வாமித்திரருடைய சமாதியா இல்லை இங்கே தங்கி இருந்த வேறு சித்தரின் சமாதியா என இங்கிருக்கும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. ஆனால், சுற்றி இருக்கும் கிராம மக்கள் இந்த சமாதியினை கும்பிட்டுவந்தால், நிறைய அற்புதங்கள் நம் கண்கூடாகவே நடப்பதாக கூறுகிறார்கள்.  இந்த சமாதியில் வந்து தியானம் செய்பவர்களுக்கு, மெல்லிய தோற்றத்தில் நீண்ட ஜடாமுடியுடனும், கோவணத்துடனும், நல்ல ஆஜானுபவமாக ஏழு அடி உயரத்துடனும் காட்சி கொடுத்ததாகவும் பல பக்தர்கள் கூறுகிறார்கள்.


நாம பார்க்கிற இந்த சன்னதிதான் விஸ்வாமித்திரர் சன்னதி.  இந்த விஸ்வாமித்திரர் இந்தியாவின் பிரம்மரிஷிகளில் ஒருவர்.  இவர் குசநாபரின் மகன் கௌசிகன் என்னும் மன்னராவார்.  இவர் வசிஷ்ட முனிவரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர்.  இவர் காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாக கருதப்படுகிறார். புராணங்களின்படி ஆதி முதல் 24 ரிஷிகளே முழு ஞானத்தையும் சக்தியையும் பெற்றவர்களாக இருந்தாக கூறப்படுகிறது. அதில் விஸ்வாமித்திர முனிவரும் ஒருவர் அப்படிப்பட்ட விஸ்வாமித்திரரின் சன்னதி தான் இது. வாங்க உள்ளே செல்லலாம்...,


கடுமையான வெயில் காலங்களில் வெயில் தாக்காமல் இருப்பதற்காக தென்னை ஓலையால் பின்னப்பட்ட கீத்துகள் கொண்டு திறந்த இதன் மேற்பரப்பை வெயில் படாதவாறு அடைத்து கட்டியுள்ளனர். எனக்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் விஸ்வாமித்திரருக்கு தனிக்கோவில் இல்லை. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. தெரிஞ்சுக்குறேன்...


நவக்கலச பூஜை செய்ய வருபவர்கள் இங்குள்ள விஸ்வாமித்திரர் சன்னதியிலும் ரோஜா மற்றும் மல்லிகை மாலைகள் கொண்டும்,  பழங்கள், இனிப்புகள் எல்லாம் தட்டில் வைத்து வழிப்பட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனையும் செய்கின்றார்கள். இங்கே ஒரு தனி அறை இருக்கிறது.  அதை பூட்டியே வைத்து உள்ளனர்.  குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அதை திறந்து பூஜை செய்வார்களாம். இங்க விஸ்வாமித்திர மகரிஷி அரூபமாக தவம் செய்து கொண்டு இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.


இதுதான் விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த ஹோமகுண்டம் இருந்த இடம் என சொல்லப்படுகிறது. இப்பொழுது அவ்விடம் கிணறாக காட்சியளிக்கிறது. இந்த கிணற்றைத் தோண்டி பார்த்ததில் நிறைய சாம்பல்கள் கிடைத்தனவாம். ஆனால் அவையெல்லாம் கட்டியாகி பல அடுக்குகளாய் பாறைகள் போல இருகிவிட்டதாம், அவற்றை எல்லாம் மேலை நாட்டினர் சிலர் கொண்டு சென்று ஆராய்ச்சிகள் செய்ததாகவும் அதன் வயது இராமர் பாலத்தின் வயதை ஒத்ததாக இருக்கிறது எனவும் இங்கே உள்ளவர்களால் சொல்லப்படுகிறது. இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்! கடற்கரையிலிருந்து பார்த்தால் கூடங்குளம் அணுமின் நிலையம் தெரிகின்றது.


இந்த ஹோம குண்ட கிணற்றில் இருந்து சிலர் தீர்த்தம் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். சரி இனி நவக்கலச அபிஷேகம் முடிந்தவுடன் அதே ஈரத் துணியுடன் ஒரு பர்லாங்கு தொலைவில் உள்ள கடலுக்கு சென்று அங்கே விஸ்வமித்திரர் தீர்த்த கட்டம் என்ற இடம் சென்று கடலில் குளிக்கவேண்டும். பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடல் மண்ணில் படுமாறு இடது பக்கம் மூன்று முறையும் ,வலது பக்கம் மூன்று முறையும் (மனதுக்குள் சிவ மந்திரம் ஜபித்தவாறே) உருள வேண்டும். அதன் பிறகு ,மீண்டும் கடலில் சென்று மூன்று முறை மூழ்கி எழவேண்டும். இப்படியாக மூன்று முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்த பின்னர், கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு, அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார். நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி,(வேறு ஆடை அணிந்துவிட்டு) அதை கடலில் எறிந்துவிடவேண்டும். இங்கே ஈர ஆடைகளுடன் இருந்ததாலும் கூட்டத்தில் பெண்களும் இருந்ததாலும் கடற்கரையில் நடந்த பூஜைகளை படம் எடுக்கவில்லை .
இது ஹோமகுண்ட கிணறு. இதனுள்ளே  ஏதோ சிலைகள் தெரிகின்றன. சரி இனி கடற்கரை பூஜைகள பற்றிப் பார்க்கலாம். பின்னர் கடைசியாக உடலில் உள்ள மணல் போக நன்றாக குளிக்க வேண்டும். 

இதில் முக்கியமான விஷயம் என்னன்னா இங்க அலைகள் மிகவும் அகோரமாக இருக்கும் பெண்கள் சிறுவர்கள் எல்லாம் தக்க துணையுடன் கடலில் நீராடுவது நலம், அதேப்போல அலைகள் அடிக்கிற வேகத்தில் சிலருக்கு கழுற்றில் இருக்கும் செயின் அடித்து சென்றுவிட்ட சம்பவங்களும் உண்டு. ஆகையால் செயின்களை பத்திரமாக கழற்றி வைத்தோ இல்லை பாதுகாப்பு செய்தோ நீராடவேண்டும். பின்னர் கடற்கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருக்கும் தில்லைவனக் காளியம்மன் கோவில் வரை திரும்பிப் பார்க்காமல் நடந்துவர வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.


இதுதான் ஹோமகுண்ட கணபதி சன்னதி. இனி தில்லைவன காளியம்மனுக்கு செய்யவேண்டிய பூஜை முறைகளை பற்றி பார்க்கலாம். இந்த தில்லைவன காளி அம்மனுக்கு மாலை ஐந்து மணிக்குதான் பூஜைகள் தொடர வேண்டும் என்பது ஐதீகம். ஒரு ரோஜா அல்லது செவ்வரளி மாலை, தேங்காய், பூ, பழம் வெற்றிலை, பாக்கு, பத்தி, சூடம் என கொடுத்து நெய்தீபமேற்றி பரிகாரம் செய்யவேண்டிய நபருக்கு அர்ச்சனை செய்யவேண்டு. தில்லை வனகாளிக்கு கொய்யாபழம் 108 மற்றும்  108 ஒருரூபாய் நாணயங்கள் மற்றும் இனிப்புகள், எள்ளுருண்டை, பழங்களை வைத்து பூஜைகள் செய்யவேண்டும். 

பின்னர்அந்த பழங்களையும், நாணயங்களையும் எள்ளுருண்டைகள் சேர்த்து அங்கிருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்துவிடவேண்டும். பின்னர் கோவிலில் பூஜைகள் செய்பவர்களுக்கு அவர்கள் மனம் சந்தோஷப்படும் அளவுக்கு தட்சணைகள் கொடுத்து தட்சினாதேவியை திருப்தி படுத்தவேண்டும்.


இந்த விஜயாபதி ஒரு பரிகார ஸ்தலம் ஆகும். அதனால் இங்கு பித்ரு தர்ப்பனமும் செய்யலாம்,  நவக்கலச பூஜையை பகல் 12 மணிக்கு மேல் இறங்கு பொழுதுதில்தான் செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறத.. நவக்கலச யாகம் முடிந்ததும் உடனே, வேறு எந்த கோவிலுக்கும், யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக தங்களுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும். 

இப்படிச் செய்வதால், நமது 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும். இந்த தோஷங்களில் பிரேத சாபம், நவக்கிரக சாபம், குரு சாபம், குலத்தெய்வ சாபம் நீங்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இங்கு செய்யப்படும் பூஜையின் பலனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவக்கிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்


1. தீராத கர்ம வியாதிகள், ஆயுள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், 

புத்தி மாறாட்டம் போன்ற பிரச்சனைகள் நூறு சதவீதம் தீர்ந்து விடுகிறது என இங்கே பூஜை செய்தவர்கள் கூறுகின்றார்கள். எது எப்படியோ நாமும் ஒரு பழமையான வரலாற்று தொடர்புடைய திருக்கோவிலை தரிசித்த புண்ணியத்தோடு இலங்கை நோக்கி இருக்கும் தில்லைவனகாளியையும், விஸ்வாமித்ர மகரிஷியையும், மகாலிங்கேஸ்வரையும், அன்னை அகிலாண்டேஸ்வரியையும் தரிசித்துவிட்டு செல்லவும்.

அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில்




சிவனின் பெயர் : பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர்

அம்மனின் பெயர் : மரகதாம்பிகை

தல விருட்சம் : வில்வம்

கோவில் திறக்கும் :காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில்,சுருட்டப்பள்ளி, சித்தூர்-517 589, ஆந்திரா. Ph: 08576-278 599.

கோவில் சிறப்பு :

* 1000-3000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனர்
* தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.
* பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.

அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுகி ஆஞ்சநேயர் குகைக்கோவில், கணதளம் ,இராய்ச்சூரு மாவட்டம்கர்நாடகா.

 


இராம தூதரான ஆஞ்சநேயருக்குப் பல பெயர்கள் உண்டு. வாயுபுத்திரன், கேசரி மைந்தன், மாருதி, அனுமன், சொல்லின் செல்வன், சுந்தரன் எனப் பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார். இராமாயணக் காவியத்தின் முக்கிய கதாப்பாத்திரமே அவர்தானே.

 

சில கோவில்களில் அனுமார்  பஞ்சமுகத்துடனும் காட்சி கொடுத்து அருள்பாலிப்பதைக் கண்டிருக்கிறோம். அவர்  பஞ்சமுகத்துடன் காணப்படுவது எதனால்? காரணம் இல்லாமல் காரியம் இல்லையே.

 

உலகின் தலை சிறந்த வீரனான தன் மகன் இந்திரஜித்தின் இறப்பினாலும் படைகளின் தோல்வியாலும் கவலை கொண்ட இராவணன் தன்னுடைய சகோதரனான அகிராவணனிடம் இதைப் பற்றி கூறினான். தான் நிச்சயம் இராமனையும் இலக்குவனையும் கடத்திச்சென்று பாதாள உலகத்தில் சண்டிதேவிக்கு பலியிடுவேன் என்று சகோதரனுக்கு வாக்களித்தான்.

 

ஆனால் வீரமும் விவேகமும் நிறைந்த அனுமாரை மீறி அகிராவணனால் இராமனையும் லக்ஷ்மணனையும் கடத்த முடியவில்லை. அதனால் தந்திரத்தைக் கையாண்டார்.   விபீஷணன் உருவத்திற்கு மாறினான் அகிராவணன். இராமனையும் லக்ஷ்மணனையும் மயக்கத்தில் ஆழ்த்தி பாதாள உலகிற்குத் தூக்கி சென்றான். சற்று தாமதமாக விபீஷணன் மூலம் விவரமறிந்த அனுமன் தான் ஏமாற்றப்பட்டது மட்டுமன்றி இராமனைக் கடத்தி சென்றதினாலும் கடும் கோபமடைந்தார். அகிராவணனைக் கொன்று இராமனை மீட்பேன் என வானரப்படைகளுடன் பாதாளம் நோக்கிப் புறப்பட்டார்.

 

பாதாள உலகின் வாயிற்காப்பானாக மகரத்வஜன் பொறுப்பேற்றிருந்தான். அனுமானை வணங்கிய மகரத்வஜன், அனுமானை 'நான் அகிராவணனின் சேவகன்உங்களை அனுமதிக்க முடியாது. ஒன்று என்னுடன் போர்   செய்யுங்கள் அல்லது திரும்பிச் செல்லுங்கள்' என்றான்! வேறு வழியின்றி அவனுடன் போரிட்டார். மிகத் தீவிரமாக நடந்த சண்டையில் யார் வெல்வார் என வானரப் படை பயந்தது.அனுமன் தன் பலத்தைப் பலமடங்காக்கி இறுதியில் மகரத்வாசனை தோற்கடித்தார். அனுமன் தனியாகப் பாதாள அரண்மனையின் உள்ளே சென்றார்.

 

அகிராவணனைக்  கண்டதும் கோபத்தில் பலவாறு தாக்க முற்பட்டார். எவ்வளவு முயற்சித்தும் மாயைகளை உடைத்து அகிராவணனை வெற்றி  கொள்ள முடியவில்லை. அகிராவணது சக்தியை உடைக்க ஒரே வழி ஐந்து திசைகளில் உள்ள வெவ்வேறான விளக்குகளை ஒரே நேரத்தில் அணைப்பது மட்டுமே என்று அறிந்து கொண்டார். அச்சமயமே அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக (அனுமன், நரசிம்மம், வராகம், ஹயக்ரீவர், கருடன்) உருவெடுத்து ஐந்து திசைகளில் உள்ள விளக்குகளை ஒரே சமயத்தில்  அணைத்தார்.

 

அடுத்த கணமே அகிராவணனின் மாயசக்தி குறைந்தது, ஒரே  வீச்சில் அவன் உயிர் பறித்தார் ஆஞ்சநேயர். இராமனையும் லக்ஷ்மணனையும் மீட்டு விபீஷணனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். இராம பக்தன் என்பதையும் நிரூபணம் செய்தார்.

 

பஞ்சமுக ஆஞ்சநேயருக்குப் பல இடங்களில் கோவில்கள் அமைந்துள்ளன. இருப்பினும் மந்திராலயம் அருகில் உள்ள பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் விசேஷமாக்க கருதப்படுகிறது. காரணம் என்ன? ஸ்ரீ ராகேந்திரர் இங்கே 12 வருட காலம் கடும் தவமிருந்தார். அப்பொழுது  ஸ்ரீ ஹனுமானின் பஞ்ச முகம், ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ வராகர், ஸ்ரீ மகாலக்ஷ்மி , ஸ்ரீ கருட வாகனத்துடன் ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆகியோர் ஸ்ரீ ராகவேந்திரருக்கு இந்தத் தலத்தில் காட்சி கொடுத்ததாக்க கூறப்படுகிறது. இதற்குப்பிறகே ஸ்ரீ ராகவேந்திரர் மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்தார் எனக் கூறப்படுகிறது.

 

ஆஞ்சநேயர் பஞ்சமுகி என்னும் இடத்தில் ஒரு பாறையின் மேல் சுயம்பு வடிவமாக எழுந்தருளியிருக்கிறார். ஐந்து முகங்கள் கொண்டதால் பஞ்சமுகி என்பதே இத்தலத்திற்குப் பெயரானது. கிழக்கு நோக்கி இருப்பது அனுமன் முகம், தெற்கு நோக்கி இருப்பது நரசிம்ஹர், மேற்கு நோக்கி இருப்பது கருடர், வடக்கு நோக்கி இருப்பது வராஹர், உச்சியில் இருப்பது ஹயக்ரீவர். இம்முகங்கள் நமக்கு அறியப்படுத்துவன என்ன? ஐந்து வகையில் இறை வழிபாடு செய்யலாம். இறைவன் நாமாவளி சொல்வது, இறைவனை ஸ்மரித்து கொண்டே இருப்பது, இறைவனைக் கீர்த்தனைகள் மூலம் பாடி துதிப்பது, இறைவனிடம் யாசிப்பது கடைசியில் இறைவனிடம் சரணாகதி அடைவது. பஞ்சமுகத்தில் உள்ள ஐந்து முகங்களும் இந்த ஐந்து நிலைகளைத் தான் குறிக்கிறது.

 

மகான் இராகவேந்திரர் அருள்புரியும் மந்திராலயத்தின் அருகில் உள்ளகணதளம்என்ற அழகிய கிராமம்.

 

எழிலுடன் காட்சி தருகிற இங்கு குறிப்பிட்ட ஓரிடத்தில் பாறைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்து மலை போன்ற தோற்றத்தில் காணப்படும். இந்த மலையின் உள்ளே ஒரு குகையும் உள்ளது.

 

கணதளம்என்ற இந்தக் கிராமமே தற்போதுபஞ்சமுகிஎன்று அழைக்கப்படுகிறது. சிறிய குன்றான பஞ்சமுகிக்கு படிகளில் ஏறி உள்ளே சென்றால், குகை போன்ற சந்நதியைக் காணலாம்.

 

இந்தக் குகையில்தான் மகான் இராகவேந்திரர் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்தார்என்று வரலாறு கூறுகிறது. அப்போது, மகாவிஷ்ணு மகாலட்சுமியுடன் அவருக்கு தரிசனம் தந்து அருளாசி வழங்கினார்.

 

இந்தக் குகையில் இராகவேந்திரருக்கு பஞ்சமுகத்துடன் காட்சியளித்தார் ஆஞ்சநேயர். சுயம்புவாக எழுந்தருளிய பஞ்சமுக ஆஞ்சநேயர் தற்பொழுது, அந்தக் குகையில் அருள்புரிகிறார்.

 

பஞ்சமுக அனுமன் அருள்பாலிக்கும் இந்தக் குன்று பார்ப்பதற்கு அதிசயமாகவும், புதுமையாகவும் இருக்கும். குன்றில் இரண்டு இடங்களில் இயற்கையாகவே விமானம்போலவும், இன்னொன்று படுக்கை வடிவில் தலையணை போலவும் பாறையிலேயே அமைந்துள்ளது. இந்தக் குகைக் கோயிலுக்கு சற்று தொலைவில் மகாலட்சுமி அருள்புரியும் கோவிலும் உள்ளது.

 

மந்திராலயம் செல்லும் பக்தர்கள், மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திர மகானின் பிருந்தாவனத்தை தரிசிப்பதுடன் பஞ்சமுகிக்குச் சென்று அங்கு அருள் பாலிக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயரையும் தரிசிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

 

அங்கு சென்றுவர மந்திராலயத்திலிருந்தே தனியார் வாகன வசதிகள் உள்ளன. மந்திராலய மகானின் பிருந்தாவனத்திலிருந்து சுமார் 21 கி.மீ.தூரத்தில் உள்ளது பஞ்சமுகி திருத்தலம்.

 

ஸ்லோகம்

~~~~

பக்ஷீஸோ அம்புதி லங்கனே ஜனகஜா விஸ்வாஸனே வானர:

ரக்ஷஸ் ஸம்ஹரணே ந்ருஸிம்ஹ: உபதேஷ்டா அஸௌ ஹயோ ரக்ஷஸ: !

ஸத்ருக்ஷேத்ர விதாரணே கிடி: அபூத் : பஞ்ச தைவானன:

மந்த்ரேஸோ லஸதாத் ஸதா ஹ்ருதி மே ஶ்ரீராம பக்தி ப்ரத:

 

பொருள்

~~

ஶ்ரீ ஹனுமான் ஐந்து தேவ ரூபங்கள் எடுத்தார். கடலைக் தாண்டிய போது கருட முகமாம்.

வானர உருவில் ஸீதைக்கு ஆஸ்வாஸம் ஆறுதல்

அக்ஷகுமாரன் உள்ளிட்ட 80000 அரக்கரை ஒருவராக த்வம்ஸம் செய்தபோது நரஸிங்கம்

பின் ராவணனுக்கு ஹிதோபதேசம் செய்த போது குதிரை முக ஹயக்ரீவராக

இலங்கையை எரியூட்டி அழித்தபோது வராஹ பன்றியாக

 

ஶ்ரீராம பக்தியை தன் பக்தர்களுக்கு வரமாக தரும் அந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் எப்போதும் என் இதயத்தில் ஒளிவிட்டு ப்ரகாசிக்க ப்ரார்த்திக்கிறேன்

 இது ஆன்மீக பூமி,

 

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், மகரிஷிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஸ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

  ஶ்ரீ ராமஜெயம்,

ராம நாமமே சொன்னால் அங்கே வருவார் ஹனுமார், க்ஷேமங்கள் யாவையும் தருவார், ஶ்ரீ ராம பக்த ஹனுமார்.

கயா_ஸ்ரார்தம்


Image source: https://www.britannica.com/place/Gaya


காசி கயா போன்ற புன்னிய ஷேத்திரங்களில்  ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது


அப்போது  அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்...  

சிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.. உங்கள் தாயை நினைத்து..


 ஆதி சங்கரர்  தனது தாயின் கடைசி காலத்தில் தான்  வாக்கு கொடுத்தபடி  அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு  அவளது அந்திம கிரியைகளை செய்து  இயற்றிய  மனம் நெகிழும்  மாத்ரு பஞ்சகம்    5 ஸ்லோகங்கள்


#விஷ்ணு_பாதம் 


பித்ரு ஸ்ரார்தம் கயாவில்  செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே  பிண்ட பிரதானம் செய்வது ஒரு  வழக்கம்.  

 

''கயா  கயா கயா. என்று  சொல்வது  நமது பித்ருக்களுக்கு  ஸ்ரத்தையோடு  அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம்  செய்யும்  கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும்  வாழ்வில்  ஒரு தடவையாவது செல்ல வேண்டிய  இடம் கயா.  குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.


ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும். 


ஜீவதோர்  வாக்ய கரணாத்

ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்  

கயாயாம் பிண்ட தாணாத்

த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய


''  அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே  அவர்கள் சொல்படி நட.  அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்  தான் உன்  படிப்பு மூலம் கிடைக்கும்  சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில்  அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல.

வெறும் எள்ளும்  தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. 

 

 “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம்  64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு,  நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத'  என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே திருஆலம்காடு  (திருவாலங்காடு -  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)


இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள்.  இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை  அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக  சொல்லி  இடுகிறோம்.  அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”. 

 

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?


2.   மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.


3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது   பிண்டம் உனக்கு. என் தாயே. 


4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  -- ஒரு பரிசு --  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொறுத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன். 


5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா.கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ'' .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''


6.   ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்''  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'


7.    அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..\


8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \


9.  ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம். 

.

10.   திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ''கடிக்காதேடா..'' .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த 10வது பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா


11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.''  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.'


12.   புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.


13.   யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா. 


14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது. 


15.   ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ''தன்னலமற்ற''   தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே. 


16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசீர்வதி.


 மஹா பூதாந்தரங்கஸ்தோ

மஹா மாயா மயஸ்ததா

ஸர்வ பூதாத்மகச்சைவ

தஸ்மை ஸர்வாத்மனே நமஹ


( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )


No comments:

Post a Comment