Deiveegha Kadhaigal

 குருவாயூரப்பன் கதைகள்

1. காசுமாலை

சில வருடங்களுக்கு முன்பு ஒரு  பக்தர் தனது மனைவியுடன் தரிசனத்திற்காக குருவாயூர் சென்றார். நிர்மால்ய தரிசனம் செய்ய  விருப்பம் கொண்ட அவர்கள், அதிகாலையில் குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டுப் படி ஏறும்போது அங்கே  கீழே  ஒரு தங்கக் காசுமாலை இருக்கக் கண்டார். சுற்றுமுற்றும் யாருமில்லை. அதனால் அம்மாலை யாருடையது என்று விசாரிக்கக் கூட முடியவில்லை.  விடிந்ததும் விசாரித்துக் கொடுத்துவிடலாம் என்று எண்ணி, தமது பையில் வைத்துக் கொண்டார். 

சிறிது நேரத்திலேயே அவருக்கு தலைசுற்றலும், மயக்கமும் உண்டானது. அவரது மனைவி, "என்ன ஆயிற்று?" என்று  கேட்டார். அவரும், "என்னமோ  போல் இருக்கிறது, ஒன்றும் புரியவில்லை" என்று கூறினார். "காசுமாலையை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்" என்று மனைவி சொன்னார். இந்த இருட்டில் யாரிடம் கொடுப்பது, விடிந்ததும் தேவஸ்தானத்தில் கொடுத்துவிடலாம்" என்று சொன்ன அவர், அதன்படியே விடிந்ததும் தேவஸ்தானத்தில் அந்தக் காசுமாலையை ஒப்படைத்து, அது குளத்துப் படியில் கிடந்ததையும் சொன்னார். உடனேயே அவரது தலைசுற்றலும், மயக்கமும் குறைந்தது. பிறகு தரிசனம் செய்தார். 

காசுமாலையைத் தொலைத்தவரும், தேவஸ்தானத்தில் முறையிடச் சென்றபோது, மாலையைப் பெற்றார். இவ்வாறு, தொலைத்தவரும் தனது பக்தரானதால், அவரது மனக்கிலேசத்தை நீக்க வேண்டி, இந்த பக்தருக்கு உபாதையை உண்டு  பண்ணி, பிறகு நீக்கி, இருவருக்கும்  சந்தோஷத்தை அளித்தார்.  

குருவாயூரப்பன், இவ்வாறு கலியுகத்திலும் பல அற்புதங்கள் செய்து, பிரத்யக்ஷ தெய்வமாக  விளங்குகிறார்.


2. ஜெய் பூரி ஸ்ரீஜெகநந்நாதாய நம 🙏🏻🙏🏻

|| மாதவதாசர் ||

ஸ்ரீமந் நாராயணன் பிரத்தியட்சமாய் உறையும் பண்டரிபுரத்தையும் பூரி ஜகந்நாத க்ஷேத்திரத்தையும் சொர்க்க பூமியாகவே கருதி, எங்கெங்கோ பிறந்த பாகவத அன்பர்கள் இங்கு இடம் பெயர்ந்தார்கள். 

பரந்தாமனின் பாதார விந்தங்களில் தங்களது இறுதிக் காலம் அமைய வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு இந்தப் புனித க்ஷேத்திரங்களில் வாழ்ந்த தாசர்கள் அநேகர் இருக்கின்றனர். 

தங்களது உடல், பொருள், ஆவி  என்கின்ற அனைத்தையும் அவனுக்கே ஒப்படைத்து, அவனது திருவடி நிழலே நிரந்தரம் என வாழ்ந்தனர். 

அப்படிப்பட்ட பரம பக்தர்களுள் மாதவதாசர் என்பவரும்  ஒருவர். 

வட இந்தியாவில் ஒரு நகரத்தில் பிறந்து வசித்து வந்தார். 

வேத, இதிகாச, புராணங்கள் உட்பட சகல கல்விகளிலும் தேர்ந்து பெரும் பண்டிதராக வாழ்ந்தார். 

மாதவதாசரின் இயல்புக்கு ஏற்றபடி அவருக்கு நல்ல மனைவி வாய்த்திருந்தாள். 

எனவே, இருவரும் சேர்ந்து அறப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 

இறைவன் வழங்கிய செல்வத்தை அடியார்களுக்கு உணவிடுதல், அவர்களது பிற தேவைகளைக் கவனித்தல், கஷ்டப்படுகிறவர்களுக்குத் தான தர்மங்கள் செய்தல் என்று வாழ்ந்தனர். 

மாலவன் குடி கொண்டிருக்கும் பல க்ஷேத்திரங்களுக்கு சென்று தரிசித்து இன்புற்றனர். 

நல்லவர்களுக்குத்தான் எப்போதும் சோதனைகள் வரும். 

இறைவனும் இவர்களை உரிமையுடன் சோதிப்பான். 

அந்த வகையில் மாதவதாசரின் குடும்பத்தில் ஒரு திடீர் சூறாவளி ஏற்பட்டது. 

அவருடைய மனைவி திடீரென உடல்நிலை கோளாறு காரணமாக வைகுந்தப் பதவி அடைந்தாள். 

'இருப்பதும் இறப்பதும் இறைவன் செயலே' என்று தெளிந்த மாதவதாசர் ஓரளவு தன்னைத் தேற்றிக் கொண்டார். 

உற்ற துணையான மனைவி பிரிந்து போன பின், இல்லறத்தில் இருந்த நாட்டம் அவருக்குக் குறைந்தது. 

எனவே, அதுவரை தான் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள், செல்வம் அனைத்தையும் வறியவர்களுக்கு தானம் செய்தார். 

தனக்கு உரிமையாக இருந்த வீடுகளை பலரும் வந்து தங்கிச் செல்லும் பொது மடங்களாக ஆக்கினார். 

அங்கே தினமும் அன்னதானங்கள் நடந்தன. அதுவரை தான் வசித்து வந்த ஊரை விட்டுப் புறப்பட்டார். 

அவரது கால்கள் பூரிஜகந்நாத க்ஷேத்திரத்தை நோக்கி நடந்தன. பூரியை அடைந்தார். 

சமுத்திரத்தில் ஸ்நானம் செய்தார். 

ஜகந்நாதர் திருக்கோயிலை அடைந்தார். பரந்தாமனின் முன் கண்ணீர் மல்க நின்றார்.

 ''தனி மரமாக நின்கின்றேன். சம்சார சாஹரத்தில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்து விட்டாய். 

இனி, எந்த உறவும் துணையும் இல்லாமல் இருக்கின்றேன். 

எனவே, இனி எனக்கு நீதான் தாயும், தந்தையும், மற்ற எல்லா உறவுகளும். என்னைக் காத்து அருள்வாய்'' என்று உருக்கத்துடன் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். 

அப்போது சந்நிதியில் இருந்த அர்ச்சகர் ஒருவர் மாதவதாசரைப் பார்த்து ஏனோ எரிச்சல் கொண்டார்.

 ''இப்படி வெறும் கையுடன் நின்று கொண்டு பகவானிடம் பிரார்த்தனை வைத்தால் எப்படி அவன் நிறைவேற்றுவான்? 

கோயிலுக்குள் வந்தால் ஏதாவது கொண்டு வர வேண்டும். எதும் இல்லாத நீர் உடனே இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்'' என்று உத்தரவு பிறக்காத குறையாக மாதவதாசரைக் காய்ச்சி எடுத்து விட்டார். 

அர்ச்சகருக்கு எந்த பதிலும் கூறாமல் மௌனமாக வெளியே வந்தார் மாதவதாசர். 

இறைவன் தரிசனம் பெறாமல் உணவு எதுவும் உட்கொள்ளப் போவதில்லை என்கிற வைராக்கியத்துடன் கோயில் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டார். 

அர்ச்சகர் இங்கு வந்து தடை போட முடியாதே! பகவானையையே உளமார துதித்துக் கொண்டு கைகளைக் கூப்பிய கோலத்தில் அமர்ந்திருந்தார் மாதவதாசர். 

மூன்று நாட்கள் ஓடி விட்டன. 

பச்சைத் தண்ணீர்கூட அவரது பற்களில் படவில்லை. 

இந்தப் பரிதாபக் காட்சியை ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் பொறுத்துக் கொண்டார்களோ இல்லையோ... 

பரந்தாமனால் பொறுக்க முடியவில்லை. அதுவும் தான் குடி இருக்கும் கருவறைக்கு நேராக ஒரு பக்தன் உட்கார்ந்து பட்டினி கிடந்தால், உலகையே ஆளும் ஜகந்நாதர் பொறுத்துக் கொள்வாரா? 

தன் அருகில் இருந்த ருக்மிணியிடம், ''தேவி... அதோ பார், நம் பக்தன் ஒருவன் மூன்று நாட்களாக அன்னம் ஆகாரம் ஏதும் இன்றி, நம் திருநாமத்தையே துதித்துக் கொண்டிருக்கிறான். 

உடனே போய், சுவையான பதார்த்தங்கள் கொடுத்து அவனை உபசரித்து விட்டு வா'' என்று அனுப்பினார். 

அதன்படி ஒரு தங்கக் கிண்ணத்தில் சுவையான அமுதை எடுத்துக் கொண்டு ஆலய வாசலில் அமர்ந்திருந்த மாதவதாசரிடம் வந்தாள் ருக்மிணி.

 ''தாங்கள் யார்?'' என்று கேட்டார் மாதவதாசர். 

''என்னைத் தெரியவில்லையா? எந்தத் திருச்சந்நிதிக்கு நேராக அமர்ந்து நாம ஸ்மரணம் செய்து கொண்டிருக்கிறீர்களோ, அவருடைய தேவி நான். 

என் பெயர் ருக்மிணி. 

தாங்கள் மிகவும் பசியுடன் வாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக, தங்கக் கிண்ணத்தில் உணவு தருமாறு பரந்தாமன் என்னைப் பணித்தார்'' என்று சொல்லி, அறுசுவை உணவை மாதவதாசருக்கு வழங்கினார். 

பகவானின் பிரசாதத்தை மிகவும் பவ்யத்துடன் ஏற்றுக் கொண்டார். 

உணவுண்ட பின் அருந்துவதற்கு நீரும் தந்து உபசரித்தாள் ருக்மிணி. 

அடியார்களிடம் பரந்தாமன் நடத்தும் திருவிளையாடல்கள்தான் சாதாரணம் ஆயிற்றே! அதன்படி, மாதவதாசரின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பினார் ஸ்ரீஜகந்நாதர். 

அதன்படி தங்கக் கிண்ணத்தை அவருக்கு அருகிலேயே வைத்து விட்டு கருவறை சென்று மறைந்து போனாள் ருக்மிணி. 

மாதவதாசரின் வயிறும் மனமும் நிறைந்தது. 

பரந்தாமனே தன் தேவியை அனுப்பி வைத்து, இவரது உண்ணாவிரதத்தை முடித்து விட்டானே! அறுசுவை உணவு உண்ட மாதவதாசருக்கு உறக்கம் வந்தது. 

தேவி வைத்து விட்டுப் போன தங்கக் கிண்ணத்தை - என்னவோ ஏதோ என்று எண்ணி, அதைத் தம் தலைக்கு அடியில் ஒரு தலையணையாக வைத்து உறங்க ஆரம்பித்தார். 

பொழுது விடிந்தது. ஸ்ரீஜகந்நாதரின் காலை சேவைக்காக பூட்டிய கதவுகளைத் திறந்து சந்நிதியின் உள்ளே சென்றனர் அர்ச்சகர்கள். 

பூஜைக்கான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது 

முதல் நாள் இரவு இறைவனுக்கு அமுது படைத்த தங்கக் கிண்ணத்தை அங்கே காணாமல் அதிர்ந்தனர். 

ஆளாளுக்குத் தேடிப் பார்த்தனர். காணவில்லை. 

விலை மதிப்பில்லாத அந்தக் கிண்ணத்தை யாரோ திருடிச் சென்று விட்டார்கள் என்று கருதி குழப்பத்துடன் கருவறையை விட்டு வெளியே வந்த அர்ச்சகர்களுக்கு, வாயிலின் அருகே மாதவதாசர் படுத்திருப்பது கண்களில் பட்டது. 

அவர் தன் தலை மாட்டில் வைத்திருந்த தங்கக் கிண்ணம், காலை நேரத்து சூரிய ஒளியில் கண்களைக் கூசியது. 

அர்ச்சகர்கள் திடுக்கிட்டனர். 

அவர்களில் ஒருவர், ''இவன் பெரும் திருடன் போலிருக்கிறது. பக்தன் என்ற போர்வையில் இந்த ஆலயத்திலேயே மூன்று நான்கு நாட்களாகச் சுற்றிக் கொண்டிருக்கிறான். 

இவனுடைய திட்டமே இங்கிருந்து எதையாவது திருடிக் கொண்டு போவதுதான் போலிருக்கிறது. 

அதான் ஸ்ரீஜகந்நாதரின் பொற்கிண்ணத்தைத் திருடித் தலைமாட்டில் ஒளித்து வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறான். 

இவனை விடக் கூடாது'' என்று குரல் கொடுக்க... கூடி இருந்தவர்கள் அனைவரும் கூட்டமாகச் சென்று மாதவதாசரை அடித்து எழுப்பினார்கள். வலி பொறுக்க மாட்டாமல் சட்டென்று கண் விழித்த மாதவதாசர் என்ன ஏதென்று அவர்களிடம் கேட்பதற்கு முன்னால், தலைமாட்டில் இருந்த தங்கக் கிண்ணத்தை எடுத்தனர். 

''பக்தன் போல் வேஷம் போட்டு எங்களையும் ஸ்ரீஜகந்நாதரையும் ஏமாற்றி இருக்கிறாயே...'' என்று அவரை மீண்டும் அடித்துத் துவைத்து, ஓர் அறையில் வைத்துப் பூட்டினர். 

"எனக்கு ஏன் இந்த சோதனை?' என்று பூரி ஸ்ரீஜகந்நாதரிடம் உருக்கமாகப் பிரார்த்தித்தார் மாதவதாசர். 

அன்று இரவு ஆலய அர்ச்சகரின் கனவில் வந்த ஸ்ரீஜகந்நாதர், ''மாதவதாசரை உடனே விடுதலை செய். 

அவன் என் பக்தன். 

மூன்று நாட்களாக ஆகாரம் ஏதும் இன்றி என் ஆலய வாசலில் தவம் கிடந்த அவனுக்கு நான்தான் தங்கக் கிண்ணத்தில் உணவை ருக்மிணி மூலம் அனுப்பினேன். 

அவள் கிண்ணத்தை எடுத்து வர மறந்து விட்டாள்'' என்றார். 

அடுத்த நாள் அதிகாலை மாதவதாசர் சிறைபட்டிருக்கும் அறைக்குச் சென்ற அர்ச்சகர் அவரை விடுவித்து, காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். 

பிறகு, ஆலய அர்ச்சகர்கள், ஊழியர்கள் அனைவரும் மாதவதாசருக்கு உரிய மரியாதைகளை செய்து அவரைக் கருவறைக்கு அழைத்துச் சென்றனர். 

ஸ்ரீஜகந்நாதரின் கருணை உள்ளத்தை வியந்து போற்றினார் மாதவதாசர். 

தினமும் பகவானுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதம் மாதவதாசருக்குக் கிடைத்தது. 

பூரியிலேயே பல நாட்கள் இருந்து இறை சேவையில் ஈடுபட்டார். 

பகவானின் தியானத்திலேயே சில நாட்கள் இருந்த மாதவதாசர், ஒரு நல்ல தினத்தில் ஜெகந்நாதரின் திருவடியில் கலந்தார். 

ஸ்ரீராம க்ருஷ்ண பாண்டுரங்க ஹரி

ஜெய் ஸ்ரீராம்

ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.


 2. அகந்தையால் குதிரையானவர்

ராம- ராவண யுத்தம் முடிந்தது. ராமர் அயோத்தியின் அரசனானார். ஒரு சமயம் அவர் அஸ்வமேத யாகம் செய்தார்.

 யாகத்தின் முடிவில் குலகுரு வசிஷ்டர், சியவனர் முதலான எல்லா ரிஷி முனிவர்களையும் பூஜித்தார். நாட்டின் பல பாகங்களிலிருந்து 64 அரசர்கள் தங்கள் ராணிகளுடன் யாகத்திற்கு வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் அஸ்வமேத யாகக் குதிரைக்கு அபிஷேகம் செய்தார்கள். 

அதைத் தொடர்ந்து லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்- மாண்டவி, சத்ருக்னன்- சுருதகீர்த்தி போன்றவர்களும் அந்த யாகக் குதிரைக்கு அபிஷேகம் செய்தார்கள். கடைசியாக ராமர் குதிரைக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவரது கைகள் குதிரைமீது பட்டன. மறுவிநாடியே குதிரை, தனது வடிவம் நீங்கி ஒரு தேவபுருஷனாக மாறியது. அந்த தேவபுருஷன் ராமரைப் பக்தியுடன் கைகூப்பி வணங்கினான். 

குதிரை தேவபுருஷனாக மாறியதைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். 

தன்னை வணங்கிய தேவபுருஷனிடம்

ராமபிரான், "நீங்கள் யார்?'' என்று வினவினார்.

தேவபுருஷன் பக்தியுடன் கைகூப்பி வணங்கிய நிலையில், "ஸ்ரீ ராமா! நான் என்னுடைய முற்பிறவியில் ஒரு பிராமணன். கங்கையில் நீராடி நான் என் பாவங்களை நீக்கிக்கொண்டேன். மேலும் ஸ்ரீராமராகிய உங்களைப் பூஜித்தும், தியானம் செய்தும் புண்ணியங்களை வளர்த்துக்கொண்டேன். மனிதர்கள் பின்பற்ற வேண்டிய தர்மங்களைப் பற்றி அறிந்துகொண்டேன். பலவகையான தானங்கள் செய்வதன் சிறப்பை உணர்ந்துகொண்டேன். அதனால் நிறைய தானதர்மங்கள் செய்தேன். 

அதன் காரணமாக மக்கள் என்னை பெரிய வள்ளல், தர்மாத்மா, தர்மவான் என்றெல்லாம் புகழ்ந்து பேசினார்கள். அதனால் புகழ்போதை என் தலைக்கேறியது.

அது என் கண்ணை மறைத்ததால், புனிதத்தையும் சத்தியத்தையும் மறந்துவிட்டேன். மது குடித்தவனுக்கு கூட சிறிது நேரத்தில் போதை தெளிந்துவிடும். ஆனால் புகழ்போதையில் மயங்குபவனுக்கு, புத்தி தெளிவு பெறவே செய்யாது. 

எனவே நான் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும். உலக நன்மைக்காக அறச்செயல்கள் செய்ய வேண்டும் என்பதை மறந்து, மக்கள்

என்னைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே தானதர்மங்கள் செய்ய ஆரம்பித்தேன். அது வரையில் எளிமையாக வாழ்ந்த நான் ஆடம்பரமாகவும் வாழ ஆரம்பித்தேன். அத்துடன் உலகமே புகழும் வகையில் பெரிய ஒரு யாகம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் நினைத்தபடியே பெரிய அளவில் முயற்சிகள் செய்து யாகம் செய்ய ஆரம்பித்தேன். 

எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாரும் சொல்ல முடியாது.

கர்மவினையிலிருந்து யாரும் தப்ப முடியாது. விதி வழி மதி செல்கிறது. விதியை வெல்ல முடியாது. உலக நன்மைக்காகச் செய்ய வேண்டிய யாகத்தை, மற்றவர்கள் என்னைப் பாராட்ட வேண்டும் என்று செய்துகொண்டிருந்தேன். 

அந்தச் சமயத்தில் என் அருகில் ஒருவர் வந்து, "துர்வாச முனிவர் யாகம் நடைபெறும் இடத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்' என்று தெரிவித்தார்.

அதைக் கேட்டதும் நான் துர்வாச முனிவரை வணங்கி வரவேற்று, உரிய மரியாதைகளுடன் யாகசாலைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது நான், "பெரிய ஒரு யாகம் நடத்துபவன்' என்ற அகங்காரத்தில், அவரது வருகையை பொருட்படுத்தவே இல்லை. துர்வாச முனிவர் யாகசாலைக்குள் வந்தார். அங்கு அவரை வரவேற்பதற்கு யாகம் நடத்துபவர் இல்லை என்பதை அறிந்தார். கோபக்காரரான அவர், யாகத்தை நான்தான் நடத்துகிறேன் என்பதை தெரிந்து கொண்டு என் ஆடம்பரத்திற்குச் சரியான அடி கொடுத்தார். 

என்னை நோக்கி "உனக்கு ஆணவம் தலைக்கேறியிருக்கிறது! அதனால்தான் நீ, உன்னைப் போல் இப்படி ஒரு யாகத்தை வேறு யாரால் செய்ய முடியும்? என்று நினைக்கிறாய். அதுதான் குதிரை போன்று மதர்த்து நிற்கிறாய்! ஆதலால் நீ ஒரு குதிரையாக மாறுவாய்' என்று சாபம் கொடுத்தார். அதைக் கேட்டு, நான் பயந்துவிட்டேன்.

என்னுடைய அகந்தை என்ற பெரிய காடு, அவரது சாபம் என்ற காட்டுத்தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டது. அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கி "நான் பணிவுடன் செய்ய வேண்டிய யாகத்தை ஆணவத்துடன் செய்தேன். மேலும் அகந்தை காரணமாக, உங்களை உரிய முறையில் வரவேற்கவும் தவறிவிட்டேன். என்னை மன்னித்து அருள் புரியுங்கள்' என்று மன்றாடி வேண்டினேன். 

மனமிரங்கிய முனிவர், "நீ ஸ்ரீ ராமரை தியானம் செய்யும் ஒரு ராம பக்தன். அதனால் உன் பிழையை மன்னித்து, உனக்கு நற்கதி கிடைப்பதற்கு ஒரு வழி சொல்கிறேன். நான் கொடுத்த சாபத்தின்படி, நீ ஒரு குதிரையாக மாறுவாய். ஆனால் ஸ்ரீ ராமர் மீது நீ செய்த தியானம் ஒருபோதும் வீணாகாது. அது உன்னை நிச்சயம் காப்பாற்றும். எதிர்காலத்தில் ஸ்ரீ ராமர் ஒரு அஸ்வமேத யாகம் செய்வார். அப்போது நீ யாகக் குதிரையாக இருப்பாய். யாக பூஜையின் முடிவில், ராமரின் திருக்கரங்கள் உன்மீது படும். அப்போது நீ சாபம் நீங்கித் தேவனாக மாறுவாய்!' என்று கூறி அனுக்கிரகம் செய்தார்.

துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தின்படி, நான் அஸ்வமேத யாகக் குதிரையாக இருந்ததால், இப்போது தங்களின் திருக்கரங்கள் என்மீது படும் ஒரு மகாபாக்கியமும் எனக்குக் கிடைத்தது. அது என்னை தேவனாக்கியிருக்கிறது! நீங்கள் என்னை ஆசீர்வதியுங்கள்'' என்று தெரிவித்தான். ராமரும் அவனை ஆசீர்வதித்தார்.

அப்போது ஆகாயத்திலிருந்து ஒரு தேவலோக விமானம், அங்கு வந்து இறங்கியது.தேவ புருஷன் அதில் அமர்ந்து தேவலோகம் சென்றான். அந்தணன் அகங்காரத்தால் தன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்டான் என்பது உண்மைதான். என்றாலும் அவன் செய்த ராம தியானம், அவனுக்குச் சொர்க்கலோக வாழ்வைப் பெற்றுத் தந்தது.

No comments:

Post a Comment