Friday, October 29, 2021

சக்கரத்தாழ்வானைக் கையில் உடையவன் ஆன சக்கரபாணி

 சக்கரத்தாழ்வானைக் கையில் உடையவன் ஆன சக்கரபாணி

பெருமானின் வலக்கரத்தில் எப்போதும் திகழும் சுதர்ஸனர், எல்லா வைணவ கோயிலுக்குள்ளும் பெருமானோடு காட்சி தருகிறார். 


என்றாலும், சில கோயில்களில் சுதர்ஸனருக்குத் தனி சந்நிதி உள்ளது. 

அங்கே யோக நரசிம்மராக ஒருபுறத்திலும் சுதர்ஸனராக மற்றொரு புறத்திலும் எழுந்தருளி காட்சி தருகிறார். 

அப்படிப்பட்ட கோயில்களில் சுதர்ஸனர் தனிக் கோவிலில் எழுந்தருளி காட்சி தரும் இடம் கும்பகோணம் சக்கரபாணிப்பெருமான் கோயில். மேலும் திருமோகூர். 

திருவரங்கம், காஞ்சிபுரம் போன்ற கோயில்களிலும் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் அமையப் பெற்று புகழுடன் திகழ்கின்றன.

கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி:

கும்பகோணம் என்று அழைக்கப்படும் திருக்குடந்தை திவ்வியதேசத்தில் தனிக் கோயிலில் சக்கரப்பாணிப் பெருமானாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார் சுதர்ஸனாழ்வார். 

உலகுக்கு ஒளிதரும் சூரியனில் ஒரு கரும் புள்ளி விழுந்தது. ஆம், அவனுக்கு அகந்தை ஏற்பட்டது. கர்வம் மிகுந்தது. 

அபரிமிதமான பிரகாசத்தாலும் தன்னைப் பற்றிய கர்வம் மிகுந்தது. சூரியனுக்கு ஏற்பட்ட அகந்தையால், அவன் மற்றவருக்குத் துன்பம் இழைக்கலானான். 

அபரிமிதமான வெப்பத்தால்; தேவர்களையும் மற்ற உயிரினங்களையும் கோள்களையும் தகிக்கத் தொடங்கினான்.

சூரியனின் வெப்பத்தைத் தாள முடியாமல் எல்லோரும் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தனர். 

இதனால் சூரியனுக்கு ஏற்பட்ட பின்னடைவைப் போக்க எண்ணினார் விஷ்ணு. ஆனால் அதை எப்படிச் செயல்படுத்துவது? 

தீமைகள் மலியும்போது அவதரித்து அந்தத் தீமையைக் களைவேன் என்றான் பகவான். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் என்ற வகையில், தீயவனை அழித்து, நல்லவனைக் காப்பது என்பது அவன் விரதம். 

இப்போது தீமை முளைத்துள்ளது. ஆனால் அந்தத் தீமையைச் செய்பவன் சூரியன். அவன் ஒன்றும் தீயவன் இல்லையே. 

உலகுக்குப் பயன் தருவதற்காகப் படைக்கப்பட்டவனல்லவா? ஆகவே அவன் அழிக்கப்பட்ட வேண்டியவனல்லன்; அவனுடைய அகந்தை குணம்தானே அழிக்கப்பட்ட வேண்டியது?

இங்கே சூரியனும் பகவானின் ஆணைப்படி இயங்குபவனாயிற்றே. அதனால் சூரியனுக்குப் புத்தி புகட்ட தன் அதிகாரி ஒருவனிடம் ஒப்படைத்தார் பகவான். அந்த அதிகாரி சக்கரத்தாழ்வார். 

தன்னிடம் பிரார்த்தனை செய்த தேவர்களிடம் பெருமான் கூறினான்; எம்திருவாழிக்கு இந்தப் பணியைக் கொடுத்திருக்கிறோம். இப்போது ஜலந்தராசுரன் என்ற அசுரனை அடக்க சுதர்ஸனரைப் பூலோகத்துக்கு அனுப்பியுள்ளேன். 

நீங்கள் அனைவரும் பிரம்மாவுடன் பூலோகத்தில் உள்ள காவிரிகரைக்குச் சென்று சுதர்ஸனரைத் தியானம் செய்யுங்கள். 

சுதர்ஸனர் உங்களுக்குக் காட்சிதந்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பார் என்று அருள் செய்தார். அப்படி அவர் காட்டிய காவிரிதீரம் கும்பகோணம்.

பகவான் விஷ்ணுவின் ஆணைப்படியே, பிரம்மா முதலானோர் காவிரிக்கரையில் பிரார்த்தனை செய்தனர். சுதர்ஸனர் தோன்றினார். அவரிடம் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். 

ஊழியர் மீதான ஒழுங்கு நடவடிக்கைபோல், சுதர்ஸனர் சூரியனிடம் இருந்து ஒளியைக் கவர்ந்து, அதை மறைத்துச் சூரியனை சஸ்பெண்ட் செய்தார். 

அவ்வளவுதான்! சூரியனின் மமதை இருந்த இடம் தெரியாமல் போனது. தன்னால் ஒன்றும் இல்லாது என்பதை உணர்ந்த சூரியன், சுதர்ஸனாழ்வாரிடம் மன்னிப்பு கேட்டான்.

அப்போது சுதர்ஸனர், சூரியதேவா, நீயும் உன் போன்ற பிரபஞ்ச சக்திகளும் உலக நலன்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறீர்கள். 

அதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்ட சக்திகள் உங்களுடையவை அல்ல. எல்லாம் வல்ல பரம்பொருளினுடையது. பரம்பொருளே அந்தச் சக்தியை உங்களின் மூலமாக உலகுக்குக் கொடுக்கிறது. 

ஆனால் நீங்களோ உரிமையாளன் போல் செருக்குறுதல் தகுமா? அப்படிச் செருக்குற்றால், உங்கள் சக்தியைப் பரம்பொருள் மீண்டும் எடுத்துக்கொள்ளும் என்று சொன்னார்.

தன் நிலை நினைத்து வருந்திய சூரியன், அவரைப் பணிந்து மீண்டும் அந்தச் சக்தியைத் தர வேண்டினான். அவன் வேண்டியபடிச் சூரியனுக்கு அந்தச் சக்தியை வழங்கினார் சுதர்ஸனர். 

சுதர்ஸனர் கூறிய பரம்பொருள் யார் என்று தெரிந்து கொள்வதில் சூரியனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதை வாயுவிட்டுக் கேட்டே விட்டான் சூரியன். சுதர்ஸனர் சொன்னார்; நீயும் உன் காரணமாக உலகமும் உணர்ந்துகொள்ள அந்தப் பரம்பொருள் என்னில் காட்சி தருவார் என்றார். 

உடனே அங்கே கோடி சூரியப் பிரகாசத்தோடு சக்கரம் பிரம்மாண்டமாக விரிவடைந்து. அதில் விஸ்வரூபியாகப் பெருமான் காட்சி தந்தார். அந்தக் காட்சியைப் என்றென்றும் வணங்க, மக்கள் அவரைத் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார்கள்.

 இன்றும் இந்தக் கோலத்தில் சுதர்ஸனாழ்வார் சேவை சாதிக்கக் காண்கிறோம். சாரங்கபாணிப் பெருமானால் அனுப்பி வைக்கப்பெற்ற சக்கரத்திலிருந்து சக்கரராஜனாக மூன்று திருக்கண்களுடன், எட்டுக் கைகளுடன், அக்னி மயமான கேசத்துடன் (ஜ்வாலாகேசம்) தோன்றி, ஆதவனின் ஆணவத்தை அடக்கி திரும்பவும் சூரியனுக்கு ஒளி தந்து, திவ்விய அருளுடன் திருக்காட்சி அளிக்கிறார். 

ஆதவனே சக்கரராஜனுக்குத் தனி கோயிலை நிர்மானித்து, பல உற்சவங்களை நடத்தி வருவதால் திருக்குடந்தை (கும்பகோணம்) பாஸ்கர க்ஷேத்திரம் எனச் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. 

இன்றும் காவிரியில் சக்கர தீர்த்தம் என்ற சக்கரப் படித்துறையில் உற்சவங்கள் முடிந்ததும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.

எல்லாக் கோள்களுக்கும் நாயகனான அந்தச் சூரியனே, இந்தத் தலத்தின் பெருமானிடத்தல் சரணாகதி அடைந்து பயன் அடைந்ததால், இந்தச் சக்கரராஜனைத் தூயமனத்துடன் வழிபடும் அடியார்களின் எல்லாத் துன்பங்களும் சகல கிரக தோஷங்களும் விலக்கப்பட்டு, பிரார்த்தனைகளும் நிறைவேற்றப்படுகின்றன என்பதை இன்றும் நேரடியாகக் காணலாம். 

சக்கரராஜனுக்குத் திருத்துழாய் புஷ்பங்களோடு வில்வ அர்ச்சனையும் குங்கும அர்ச்சனையும் செய்யப்படுவது தனிச்சிறப்பு. 

திருமாலின் மேன்மையை, தெளிவாகத் தம்முடைய பாசுரங்கள் மூலம் நிலைநாட்டியவர், சக்கரத்தாழ்வாரின் அம்சமாக அவதரித்த திருமழிசைப்பிரான். 

இவர் பரமனின் ஆழியைத் தரித்த ஆழியானாகத் திருவுள்ளம் கொண்டு, அமரர்கள் அதிபதியாகக் கண்டு நிரூபித்தார். அவர் அருளிய திருப்பாசுரங்களில் ஒன்று.

தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கள் மாலையாய்
ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவ! நின்
நாம தேயம் இன்ன தென்ன வல்ல மல்ல மாகிலும்
சாம் வேத கீதனாய் சக்ரபாணியில்லையே

 சக்கரத்தாழ்வானைக் கையில் உடையவன் ஆனதால் சக்கரதாரி, சக்கரபாணி எனும் திருநாமங்களையும் பெற்றுள்ளார் திருமால். திருக்குடந்தையில் ஆழியாழ்வான் அம்சம் கொண்டு அரிச்சாவதாரமாகக் கோயில் கொண்டுள்ள சக்கரபாணியைப் போற்றும் பாசுரம்.

தோடவிழ் நிலம் மணங்கொடுக்கும்
ஆழ்புனல் சூழ்குடந்தைக் கிடந்த
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்
செஞ்சுடராழியும் சங்கமுமேந்திப்
பாடகமெல்லடியார் வணங்கப்
பன்மணி முத்தோடிலங்கு சோதி
ஆடகம் பூண்டொரு நான்குதோளும்
அச்சோ ஒருவர் அழகியவர்.

No comments:

Post a Comment