Sunday, July 25, 2021

MAHA PERIYAVAA STORIES

 "திருவிசநல்லூர் மடத்து கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்துக்கு, எப்போதும் போல இந்த வருஷமும் கங்கை வந்தாளா ?"

1991ம் வருஷம். 


திருவிசநல்லூர் ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் நடைபெறும் கார்த்திகை அமாவாஸ்யை கங்காவதரண உத்ஸவம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி.


சில வருஷங்களுக்கு முன்னால் தஞ்சாவூர் ப்ரதேசத்தில் ஐப்பசியில் பருவ மழை பெய்யாது பொய்த்தது.. மேட்டூர் ஜலமும் வரவில்லை. காவேரியில் சுத்தமாக வரத்து இல்லை. 



ஸ்ரீஐயாவாள் மடத்தின் பின்புறம் கங்கை ஆவிர்பவிக்கும் கிணறும் வறண்டு போனது. 


ஸ்ரீஐயாவாள் மடத்தின் கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவம் அந்த வருஷம் நடக்குமா என்ற பயம் வந்து விட்டது. 


உத்ஸவ பத்ரிகையை எடுத்துக் கொண்டு போய் ஸ்ரீபெரிவாளின் ஸன்னதியில் ஸமர்ப்பித்தோம். மெதுவாக அங்குள்ள பிரச்னை பற்றிச் சொன்னோம். 


அப்படியே சில நிமிஷங்கள் கழிந்தன. 


ஸ்ரீபெரியவா சற்றுநேரம் மோனமாக இருந்து விட்டுச் சைகையால் அருகிலிருந்த ஸ்ரீமடத்து அன்பரை அழைத்து ஒரு பெரிய செப்புக் குடத்தில் கங்கா ஜலத்தை நிரப்பி வரச் சொன்னார்கள். 


அங்கு கங்கா ஜலம் இருப்பது பற்றி எங்களுக்கு ஏதும் அதற்கு முன்னால் தெரியாது. அந்த அன்பரும் அவ்வண்ணமே கங்கா ஜலம் நிரம்பிய ஒரு பெரிய செப்புக் குடத்தைத் தூக்கி வந்து ஸ்ரீபெரிவாளின் திருமுன்னர்க் கொண்டு வைத்தார். 


உடனே ஸ்ரீபெரியவா எங்களிடம் “இந்தக் குடத்தில் இருக்கும் கங்கா ஜலத்தை ஜாக்ரதையாகத் திருவிசநல்லூருக்குக் கொண்டு போய் வையுங்கள். 


மழை வராவிட்டால் ஸ்ரீஐயாவாள் மடத்தில் இருக்கும் கங்கை ஆவிர்பவிக்கும் கிணற்றில் கார்த்திகை அமாவாஸ்யைக்கு முன்னால் சேர்த்து விடுங்கள் .. ! ” 


என்று அபயம் காட்டி எங்களுக்கு ப்ரஸாதம் அளித்து அனுப்பி வைத்தார்கள். 


திருவிசநல்லூருக்குத்  திரும்பினோம். 


ஸ்ரீபெரிவாளின் வாக்கு என்றும் பொய்க்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தபோதிலும் அப்போதிருந்த வறட்சியான கால நிலை எங்களை ஸஞ்சலத்தில் ஆழ்த்தியபடியே இருந்தது. 


உத்ஸவத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையிலும் மழை பெய்யவே இல்லை. 


காவேரியில் ப்ரவாஹமேயில்லை. வயல் வெளிகளும் காய்ந்து வெடித்துப் போயிருந்தன.


ஸ்ரீஐயாவாள் மடத்துக் கிணறும் சுத்தமாகக் காய்ந்துபோயிருந்தது. உத்ஸவ கமிட்டி மீட்டிங் போட்டோம். 


என்ன செய்வது என்று கலந்து பேச ஆரம்பித்தோம். எல்லோரும் ஒருமித்ததொரு முடிவுக்கு வந்தோம்.


“ஸ்ரீபெரியவா அவர்களின் உத்தரவு ப்ரகாரம் செப்புக் குடத்திலிருந்த கங்கா ஜலத்தைக் கிணற்றில் ஊற்றிவிடுவோம். அப்புறமாக அதைக் கொஞ்சமாக எடுத்து அனைவருக்கும் ப்ரோக்ஷணம் செய்து விட வேண்டியதுதான் என்று தீர்மானித்து அவ்விதமே கங்கா ஜலத்தைக் கிணற்றில் சேர்த்தோம். 


அடுத்து நடந்ததுதான் ஆச்சர்யம் … 


கார்த்திகை அமாவாஸ்யை தினத்தில் ஸ்ரீஐயாவாள் அவர்களின் ஸ்தோத்ரத்தைக் கேட்டவுடன் கங்கை அவரது இல்லத்தின் பின்புறமிருந்த கிணற்றில் ஆவிர்பவித்துப் பெருகி ஊரெங்கும் காணும்படி வழிந்தோடினாள் என்பது சரித்ரம். 


அதை மீண்டும் காட்டும்படியாக கார்த்திகை அமாவாஸ்யைக்கு முதல் நாள் செப்புக் குடத்திலிருந்த ஸ்ரீபெரியவா அனுக்ரஹித்திருந்த கங்கையைக் கிணற்றில் சேர்த்த சில மணி நேரத்தில் தொடங்கியது பெரும் மழை. 


விடிய விடிய விடாது பெய்து ஊரையே வெள்ளத்தில் மிதக்க வைத்தது. ஸ்ரீஐயாவாள் அவர்கள் கங்கையை வரவழைத்தது போல் மடத்திலிருந்த கிணற்றில் ஜலம் பெருகியது. 


அமாவாஸ்யை அன்று விடியற்காலை கிணற்றின் கைப்பிடிச் சுவற்றிற்கு மேல் ஜலம் பெருகி வழிந்தோடியதைக் கண்டோர் அதிசயித்தனர். 


அதேவிதமாகக் காவேரியிலும் கால் வைக்கக்கூட முடியாத அளவிற்கு ப்ரவாஹம் மிக அதிகமாக இருந்தது. 


பல நூறு பக்த ஜனங்கள் அன்று மடத்திலிருந்த கிணற்றில் ஸ்நானம் செய்தும் வழிபட்டனர். 


இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஸ்ரீபெரிவாளைத் தரிசிக்கச் சென்றோம். திருவிசநல்லூர் மடத்தார் வந்திருக்கும் விபரம் அவர்கள் ஸந்நிதானத்தில் தெரிவிக்கப்பட்டது. 


உடனே ஸ்ரீபெரியவா அவர்கள் புன்முறுவலுடன் "திருவிசநல்லூர் மடத்து கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்துக்கு, எப்போதும் போல இந்த வருஷமும் கங்கை வந்தாளா? என்று எங்களை பார்த்துக் கேட்டதை என்னிக்கும் மறக்க முடியாது!” என்று முடித்தார் ராவ்ஜீ. 


மஹாபெரியவா திருவடிக்கே


No comments:

Post a Comment