கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில்
தஞ்சை நகருக்குள், தெற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கலியுக வேங்கடேசப் பெருமாள் கோவில் பல வகைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது.
தஞ்சாவூரில் ஏராளமான சைவ, வைணவ ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் தஞ்சை நகருக்குள், தெற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில் பல வகைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது.
எல்லா கோவில்களிலும் மூலவர் சன்னிதிக்கு நேராகத்தான் ராஜகோபுரமும், நுழைவு வாசலும் இருக்கும்.
ஆனால் இந்த ஆலயத்தில் வடக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம் ஒன்று தான் நுழைவு வழி. பெருமாள் கோவில்களில் எல்லாம் வடக்குவாசல் என்பது வைகுண்ட ஏகாதசி அன்று ‘சொர்க்கவாசல்’ என்ற பெயரில் திறக்கப்படும்.
இங்கே வடக்கு வாசலே நுழைவு வாயிலாக இருப்பதால் ‘நித்திய சொர்க்கவாசல்’ என்று அழைக்கப்படுகிறது.
உள்ளே மகா மண்டபத்துக்குள் வடக்கு கோபுர வாசல் வழியே நுழைந்தால், விநாயகர் - நாகர் சிலைகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. அதே வரிசையில் கருடாழ்வார் மேற்கு பார்த்த படியும், மூலவரை வணங்கிக் கொண்டிருக்கிறார்.
சதுர்ப்புஜ வரதராஜ பெருமாளுடன் லட்சுமி தேவி அமர்ந்திருக்க, பக்கத்தில் பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் அருள்கிறார்.
இவர் மணிகட்டிய வாலை தலைக்கு மேல் உயர்த்தியபடி, இடது கரத்தில் கடிமலர் ஏந்தி, வலக்கரத்தால் ஆசி வழங்கியபடியும் வீற்றிருக்கிறார்.
வழக்கமாக இறைவனின் கருவறை முன்பாக இருக்கும் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் இந்த ஆலயத்தில் இருக்கும் துவார பாலகர்கள் ‘தீர்த்தர் - கிஷ்கிந்தர்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
அஷ்ட லட்சுமிகளின் உருவம் செதுக்கப்பட்ட மணிக் கதவினைத் தாண்டி, அர்த்த மண்டபத்துக்குள் சென்றால் கருவறைக்குள் மூலவர் கலியுக வேங்கடேசப் பெருமாள் அருள்புரிகிறார்கள்.
சங்கு, சக்கரம் ஏந்திய தடக்கையராக, வரதஹஸ்தம், கடிஹஸ்தம் உடையவராக நான்கு கரங்களுடன் புன்னகை தவழ காட்சி தருகிறார். இருபுறமும் திருமகளும், நிலமகளும் நின்றருள் செய்கின்றனர். உற்சவ மூர்த்தங்களும் அதே திருநாமத்துடன் திகழ்கிறார்கள்.
திருக்கோவிலின் ஈசான்ய மூலையில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நவக்கிரக சன்னிதி அறுங்கோண வடிவில் தனி விமானத்தின் கீழ் இருப்பது சிறப்பு.
மேலும் நவக்கிரகங்கள் அனைத்தும் வரிசை மாறி அமைந்திருக்கின்றன. வழக்கமாக நடுவில் இருக்கும் சூரியனுக்கு பதிலாக சந்திரன் நடுவில் உள்ளது. அதற்கு வலது புறத்தில் சாயாதேவி- உஷாதேவியுடன் சூரிய பகவான் இருக்கிறார்.
சனி தெற்கு நோக்கியும், அவரது நட்புக் கிரகங்களான புதன், சுக்ரன் இருபுறமும் இருக்க நவக்கிரகங்கள் காட்சி தருகின்றன. இவை வைணவ ஆலய விதிப்படி நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பெருமாள் சன்னிதிக்கு நேரே கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. அதை ஒட்டியுள்ள மண்டப மேற்கூரையில் பன்னிரு ராசிகளும் பதிக்கப்பட்டுள்ளன.
கொடி மரத்தின் முன், தங்களது ராசிக்குக் கீழ் நின்று பிரார்த்தித்துக் கொண்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேல் விதானத்தில் ராமாயண, நரசிம்ம அவதாரக் காட்சிகள் சிறிய புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றன.
கோவிலை வலம் வரும் போது பிரகாரத்தில் மூலவரின் விமானத்தின் அருகே தலவிருட்சமான வில்வமரம் உள்ளது. சிவனுக்குரிய வில்வம் தல விருட்சமாக இருப்பது ஒரு சில திருமால் கோவில்களில் மட்டுமே. அந்த வகையில் இந்த ஆலயம் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.
வெளிச் சுற்றில் அமிர்த வெங்கடேசர் தனிச் சன்னிதியிலும், தைத்யமர்த்தினி என்ற பெயரில் காவல் தெய்வமான அஷ்டபுஜ துர்க்கை, அருகே பட்டாபிஷேக ராமர், ஆஞ்சநேயர், கஜ சம்ஹார காட்சி சிறிய சிற்பங்களாக வழிபடப்படுகின்றன.
திருமணம் தடைப்பட்டோர், சுவாமிக்கு திருமண உற்சவம் செய்து வைத்து, தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள். நவக்கிரக தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது.
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இவ்வாலயம், தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கலியுகத்தின் காக்கும் கடவுளான வேங்கடேசப் பெருமாளை நித்திய சொர்க்க வாசல் வழியே சென்று வழிபட்டு அனைவரும் நலம் பெறலாமே.
No comments:
Post a Comment