Sunday, July 25, 2021

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோவில்:- திருவயிந்திரபுரம்.

 திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த பெருமை வாய்ந்த திருத்தலம்!!!.

ஹயக்ரீவர் முதன் முதலில் தோன்றிய தலம்!!.

தலதீர்த்தமான கருட தீர்த்தம் சிவப்பு நிறத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்!!!.

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோவில்:-  

திருவயிந்திரபுரம்.

மூலவர்: தெய்வநாயகன்

தாயார்: ஹேமாம்புஜவல்லி, வைகுண்ட நாயகி

உற்சவர்: தேவநாதன், திவிஷந்நாதன், வபுதநாதன், தாஸஸத்தியன், அடியார்க்கு மெய்யன்.

கோலம்: நின்ற திருக்கோலம் 

திசை: கிழக்கு 

விமானம்: சுத்தசத்வ விமானம், சந்திர விமானம் 

தீர்த்தம்: சேச தீர்த்தம், சந்திர தீர்த்தம், கருட நதி. 

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 

நாமாவளி: ஸ்ரீ வைகுண்ட நாயகீ (ஹேமாம்புஜவல்லி தாயார்) ஸமேத ஸ்ரீ தெய்வநாயகாய நமஹ

ஊர்:  திருவயிந்திரபுரம், திருஅயிந்தை

 



இலக்கியச் சான்று :-

எங்கும் நிறைந்துள்ள எம்பெருமானாகிய இறைவன் நாராயணன் பெருமைகளையும், சிறப்புகளையும் கூறும் புராணங்கள் ஏராளம். அவ்வகையில் 18 புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் ஐந்து அத்தியாயங்களும், ஸ்காந்த புராணத்தில் நான்கு அத்தியாயங்களும், ப்ரகன் நாரதீய புராணத்தில் ஐந்தோ அத்தியாயங்களும், இத்தலத்தைப் பற்றிய பெருமைகள் பேசப்படுகின்றன.

திருவயிந்திரபுரம் பெயர்க் காரணம் :-

ஒருமுறை சனகர், சநந்தனர் ஆகிய இரு முனிவர்கள் இறைவன் நாராயணன் மீது மிகுந்த பக்தி கொண்டு அவரை காணும் வழியை அறியாது தவித்தனர்.  ஒருநாள் இவர்களைக் கண்ட வியாச முனிவர் திருக்குடந்தையிலிருந்து ஆறு யோசனை தொலைவில் அமைந்துள்ள "ஔசதகிரி" என்ற மருந்து மலைக்கு அருகில் உள்ள கருட நதிக்கரையில் தவமியற்றினால் இறைவன் காட்சி தந்து அருளுவதாக ஆலோசனை கூறினார்.  

அவ்வாறே இரு முனிவர்களும் இத்தலம் வந்து பல காலங்கள் தவமியற்றினர்.  அவர்களின் தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் அற்புத வடிவினனாகக் காட்சி தந்து அருளினார்.  ஔசதகிரிபுரம் என்பதே பிற்காலத்தில் ஆயிந்திரபுரம் என்றானது.  திருமால் இங்கு அவதரித்ததனால் "திருவயிந்திரபுரம்" என்றானது.

 தேவநாதன் பெயர்க்காரணம் :-

ஒருமுறை தேவர்களைக் காக்கும் பொருட்டு திரிபுர அசுரர்களை ஒழிக்க மும்மூர்த்திகளும் ஒன்றாக இணைந்து அழித்தனர். அசுரர்களை அழித்த இறைவனை தேவர்கள் அனைவரும் வணங்க மும்மூர்த்திகளும் ஓர் மூர்த்தியாக இத்தலத்தில் காட்சி தந்து அருளியதாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.  

தேவர்களைக் காத்த நாதன் என்பதால் இத்தல இறைவனுக்கு "தேவநாதன்" என்ற திருநாமம் உண்டாயிற்று.

 குதிரை முக ஹயக்ரீவர் :-

குதிரை முகம் கொண்ட ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் முதன்முதலில் தோன்றிய தலம் இதுவாகும்.  

பிரம்மாவிற்கு ஞானத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் ஹயக்ரீவர் பற்றிய குறிப்புகள் எதுவும் ஆழ்வார் பாசுரத்தில் இடம்பெறவில்லை.  இதன் காரணமாக, பிற்காலத்தில் தான் "ஹயக்ரீவர்" தோன்றியிருக்கக் கூடும் என்பதை நம்மால் அறியமுடிகிறது.

மேலும், இத்திருத்தலத்தில் நரசிம்மர் சுவாமியும் தனியாக சன்னதி கொண்டு அருள்கிறார்.

 சேஷதீர்த்தத்தின் சிறப்பம்சம் :-

ஸ்ரீமந்நாராயணனுக்குத் தண்ணீர் தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வருமாறு கூறினார்.  அவர் தண்ணீர் எடுத்து வரத் தாமதம் ஆனதால், பெருமாளின் தாகத்தைத் தீர்க்க ஆதிசேஷன் தன் வாலால் அடித்து நதியை உண்டாக்கி பெருமாளுக்குத் தீர்த்தம் தந்தார். 

அதன் காரணமாக இங்குள்ள தீர்த்தத்திற்கு "சேஷ தீர்த்தம்" என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனைக் கிணறு ஆகும். இந்தக் கிணறானது  திருக்கோவிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. இந்த கிணற்றில் உப்பு, மிளகு, வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும்.


இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் "பிரம்மாச்சலம்" என்றும் பெயர் பெற்றது. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் இத்திருக்கோவிலில் அமைந்துள்ளது.


 கருடதீர்த்தத்தின் சிறப்பம்சம் :-


கருடாழ்வாரைப் பெருமாள் தண்ணீர் கொண்டு வரச் சொன்ன பின்பு,  கருடாழ்வார் தண்ணீர் கொண்டு வர தாமதமானதால் ஆதிசேஷன் தன் வாலால் தீர்த்தம் கொடுத்தான் பரந்தாமனுக்கு.


கருடன் கொண்டு வந்த தீர்த்தமே "கருடநதி" என்றழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது. 


தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வதால் இந்த நதியில் குளித்தால் கங்கை நதியில் குளித்த புண்ணியம் உண்டாகும்.  


ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது.


 சிறப்புகள் :-


திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் ஓத்தலத்திற்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.  தினமும் ஆறு கால பூஜைகள் வைணவ ஆகமத்தின் படி இங்கு நடக்கிறது.


பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த தலம்.


தெய்வனாயனார், ஹயக்ரீவர், நரசிம்மர் ஆகிய மும்மூர்த்திகள் காட்சி தந்து அருளும் தலம்.


இத்திருத்தலம் நடு நாட்டு திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்றது.


கலியனாலும், நிகமாந்த மகா தேசிகனாலும் பாடப்பெற்றுள்ளது.


வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். அநேக நூல்களை எழுதினார். அவர் எழுந்தருளிய இடம் "ஸ்ரீ தேசிகன் திருமாளிகை" என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது.


வேதாந்த தேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணற்றையும் இந்த ஊரில் காணலாம்.


வேதாந்த தேசிகன் பெருமாளை நாயகா, நாயகி பாவத்தில் (பெருமாள் - நாயகன் தேசிகன் - நாயகி) அனுபவித்து வழிபட்டுள்ளார்.


தன் விக்ரத்தைத் தானே செய்து கொண்ட தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது.


யுகம் கண்ட பெருமாள் என்று இத்தல பெருமாள் போற்றப்படுகின்றார்.


திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம். 


வழித்தடம்:-


கடலூர் நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்.


அருள்மிகு தெய்வ நாயகன் திருவடிகளே சரணம்.

அருள்மிகு வைகுண்ட நாயகி திருவடிகளே சரணம்.

No comments:

Post a Comment