Sunday, July 25, 2021

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோவில்:- திருவயிந்திரபுரம்.

 திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த பெருமை வாய்ந்த திருத்தலம்!!!.

ஹயக்ரீவர் முதன் முதலில் தோன்றிய தலம்!!.

தலதீர்த்தமான கருட தீர்த்தம் சிவப்பு நிறத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்!!!.

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோவில்:-  

திருவயிந்திரபுரம்.

மூலவர்: தெய்வநாயகன்

தாயார்: ஹேமாம்புஜவல்லி, வைகுண்ட நாயகி

உற்சவர்: தேவநாதன், திவிஷந்நாதன், வபுதநாதன், தாஸஸத்தியன், அடியார்க்கு மெய்யன்.

கோலம்: நின்ற திருக்கோலம் 

திசை: கிழக்கு 

விமானம்: சுத்தசத்வ விமானம், சந்திர விமானம் 

தீர்த்தம்: சேச தீர்த்தம், சந்திர தீர்த்தம், கருட நதி. 

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 

நாமாவளி: ஸ்ரீ வைகுண்ட நாயகீ (ஹேமாம்புஜவல்லி தாயார்) ஸமேத ஸ்ரீ தெய்வநாயகாய நமஹ

ஊர்:  திருவயிந்திரபுரம், திருஅயிந்தை

 



இலக்கியச் சான்று :-

எங்கும் நிறைந்துள்ள எம்பெருமானாகிய இறைவன் நாராயணன் பெருமைகளையும், சிறப்புகளையும் கூறும் புராணங்கள் ஏராளம். அவ்வகையில் 18 புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் ஐந்து அத்தியாயங்களும், ஸ்காந்த புராணத்தில் நான்கு அத்தியாயங்களும், ப்ரகன் நாரதீய புராணத்தில் ஐந்தோ அத்தியாயங்களும், இத்தலத்தைப் பற்றிய பெருமைகள் பேசப்படுகின்றன.

திருவயிந்திரபுரம் பெயர்க் காரணம் :-

ஒருமுறை சனகர், சநந்தனர் ஆகிய இரு முனிவர்கள் இறைவன் நாராயணன் மீது மிகுந்த பக்தி கொண்டு அவரை காணும் வழியை அறியாது தவித்தனர்.  ஒருநாள் இவர்களைக் கண்ட வியாச முனிவர் திருக்குடந்தையிலிருந்து ஆறு யோசனை தொலைவில் அமைந்துள்ள "ஔசதகிரி" என்ற மருந்து மலைக்கு அருகில் உள்ள கருட நதிக்கரையில் தவமியற்றினால் இறைவன் காட்சி தந்து அருளுவதாக ஆலோசனை கூறினார்.  

அவ்வாறே இரு முனிவர்களும் இத்தலம் வந்து பல காலங்கள் தவமியற்றினர்.  அவர்களின் தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் அற்புத வடிவினனாகக் காட்சி தந்து அருளினார்.  ஔசதகிரிபுரம் என்பதே பிற்காலத்தில் ஆயிந்திரபுரம் என்றானது.  திருமால் இங்கு அவதரித்ததனால் "திருவயிந்திரபுரம்" என்றானது.

 தேவநாதன் பெயர்க்காரணம் :-

ஒருமுறை தேவர்களைக் காக்கும் பொருட்டு திரிபுர அசுரர்களை ஒழிக்க மும்மூர்த்திகளும் ஒன்றாக இணைந்து அழித்தனர். அசுரர்களை அழித்த இறைவனை தேவர்கள் அனைவரும் வணங்க மும்மூர்த்திகளும் ஓர் மூர்த்தியாக இத்தலத்தில் காட்சி தந்து அருளியதாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.  

தேவர்களைக் காத்த நாதன் என்பதால் இத்தல இறைவனுக்கு "தேவநாதன்" என்ற திருநாமம் உண்டாயிற்று.

 குதிரை முக ஹயக்ரீவர் :-

குதிரை முகம் கொண்ட ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் முதன்முதலில் தோன்றிய தலம் இதுவாகும்.  

பிரம்மாவிற்கு ஞானத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் ஹயக்ரீவர் பற்றிய குறிப்புகள் எதுவும் ஆழ்வார் பாசுரத்தில் இடம்பெறவில்லை.  இதன் காரணமாக, பிற்காலத்தில் தான் "ஹயக்ரீவர்" தோன்றியிருக்கக் கூடும் என்பதை நம்மால் அறியமுடிகிறது.

மேலும், இத்திருத்தலத்தில் நரசிம்மர் சுவாமியும் தனியாக சன்னதி கொண்டு அருள்கிறார்.

 சேஷதீர்த்தத்தின் சிறப்பம்சம் :-

ஸ்ரீமந்நாராயணனுக்குத் தண்ணீர் தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வருமாறு கூறினார்.  அவர் தண்ணீர் எடுத்து வரத் தாமதம் ஆனதால், பெருமாளின் தாகத்தைத் தீர்க்க ஆதிசேஷன் தன் வாலால் அடித்து நதியை உண்டாக்கி பெருமாளுக்குத் தீர்த்தம் தந்தார். 

அதன் காரணமாக இங்குள்ள தீர்த்தத்திற்கு "சேஷ தீர்த்தம்" என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனைக் கிணறு ஆகும். இந்தக் கிணறானது  திருக்கோவிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. இந்த கிணற்றில் உப்பு, மிளகு, வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும்.


இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் "பிரம்மாச்சலம்" என்றும் பெயர் பெற்றது. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் இத்திருக்கோவிலில் அமைந்துள்ளது.


 கருடதீர்த்தத்தின் சிறப்பம்சம் :-


கருடாழ்வாரைப் பெருமாள் தண்ணீர் கொண்டு வரச் சொன்ன பின்பு,  கருடாழ்வார் தண்ணீர் கொண்டு வர தாமதமானதால் ஆதிசேஷன் தன் வாலால் தீர்த்தம் கொடுத்தான் பரந்தாமனுக்கு.


கருடன் கொண்டு வந்த தீர்த்தமே "கருடநதி" என்றழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது. 


தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வதால் இந்த நதியில் குளித்தால் கங்கை நதியில் குளித்த புண்ணியம் உண்டாகும்.  


ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது.


 சிறப்புகள் :-


திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் ஓத்தலத்திற்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.  தினமும் ஆறு கால பூஜைகள் வைணவ ஆகமத்தின் படி இங்கு நடக்கிறது.


பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த தலம்.


தெய்வனாயனார், ஹயக்ரீவர், நரசிம்மர் ஆகிய மும்மூர்த்திகள் காட்சி தந்து அருளும் தலம்.


இத்திருத்தலம் நடு நாட்டு திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்றது.


கலியனாலும், நிகமாந்த மகா தேசிகனாலும் பாடப்பெற்றுள்ளது.


வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். அநேக நூல்களை எழுதினார். அவர் எழுந்தருளிய இடம் "ஸ்ரீ தேசிகன் திருமாளிகை" என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது.


வேதாந்த தேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணற்றையும் இந்த ஊரில் காணலாம்.


வேதாந்த தேசிகன் பெருமாளை நாயகா, நாயகி பாவத்தில் (பெருமாள் - நாயகன் தேசிகன் - நாயகி) அனுபவித்து வழிபட்டுள்ளார்.


தன் விக்ரத்தைத் தானே செய்து கொண்ட தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது.


யுகம் கண்ட பெருமாள் என்று இத்தல பெருமாள் போற்றப்படுகின்றார்.


திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம். 


வழித்தடம்:-


கடலூர் நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்.


அருள்மிகு தெய்வ நாயகன் திருவடிகளே சரணம்.

அருள்மிகு வைகுண்ட நாயகி திருவடிகளே சரணம்.

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருஉருவ சந்நிதிக்கு முன்பு உபதேசம் கேட்ட நந்திபகவான் !

 மாயவரம் வள்ளலார் கோயில் எங்குமே காணமுடியாத ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருஉருவ சந்நிதிக்கு முன்பு உபதேசம் கேட்ட நந்திபகவான் !தரிசித்து மகிழ்வோம் !

 ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருவடிகளே போற்றி

 

அகரம், கோவிந்தவாடி என்ற தலத்தில் தட்சிணாமூர்த்திக்குத் தனிக்கோயில் உண்டு. கல்வி மேன்மை அருளும் மயிலாடுதுறை வள்ளலார் கோயில் இது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுவார். இவர் ரிஷபத்தில் அமர்ந்திருக்கிறார். சோழர்கால கல்வெட்டுகளில் ‘அறமுரைத்த பட்டர்’ என இவரைச் சிறப்பித்துள்ளனர். 


SRI DHAKSHINAMOORTHY


கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில்

 கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில்

   

தஞ்சை நகருக்குள், தெற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கலியுக வேங்கடேசப் பெருமாள் கோவில் பல வகைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. 


தஞ்சாவூரில் ஏராளமான சைவ, வைணவ ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் தஞ்சை நகருக்குள், தெற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில் பல வகைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. 


எல்லா கோவில்களிலும் மூலவர் சன்னிதிக்கு நேராகத்தான் ராஜகோபுரமும், நுழைவு வாசலும் இருக்கும். 


ஆனால் இந்த ஆலயத்தில் வடக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம் ஒன்று தான் நுழைவு வழி. பெருமாள் கோவில்களில் எல்லாம் வடக்குவாசல் என்பது வைகுண்ட ஏகாதசி அன்று ‘சொர்க்கவாசல்’ என்ற பெயரில் திறக்கப்படும். 


இங்கே வடக்கு வாசலே நுழைவு வாயிலாக இருப்பதால் ‘நித்திய சொர்க்கவாசல்’ என்று அழைக்கப்படுகிறது. 

 

உள்ளே மகா மண்டபத்துக்குள் வடக்கு கோபுர வாசல் வழியே நுழைந்தால், விநாயகர் - நாகர் சிலைகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. அதே வரிசையில் கருடாழ்வார் மேற்கு பார்த்த படியும், மூலவரை வணங்கிக் கொண்டிருக்கிறார். 


சதுர்ப்புஜ வரதராஜ பெருமாளுடன் லட்சுமி தேவி அமர்ந்திருக்க, பக்கத்தில் பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் அருள்கிறார். 


இவர் மணிகட்டிய வாலை தலைக்கு மேல் உயர்த்தியபடி, இடது கரத்தில் கடிமலர் ஏந்தி, வலக்கரத்தால் ஆசி வழங்கியபடியும் வீற்றிருக்கிறார். 


வழக்கமாக இறைவனின் கருவறை முன்பாக இருக்கும் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் இந்த ஆலயத்தில் இருக்கும் துவார பாலகர்கள் ‘தீர்த்தர் - கிஷ்கிந்தர்’ என்று அழைக்கப்படுகிறார்கள். 


அஷ்ட லட்சுமிகளின் உருவம் செதுக்கப்பட்ட மணிக் கதவினைத் தாண்டி, அர்த்த மண்டபத்துக்குள் சென்றால் கருவறைக்குள் மூலவர் கலியுக வேங்கடேசப் பெருமாள் அருள்புரிகிறார்கள். 


சங்கு, சக்கரம் ஏந்திய தடக்கையராக, வரதஹஸ்தம், கடிஹஸ்தம் உடையவராக நான்கு கரங்களுடன் புன்னகை தவழ காட்சி தருகிறார். இருபுறமும் திருமகளும், நிலமகளும் நின்றருள் செய்கின்றனர். உற்சவ மூர்த்தங்களும் அதே திருநாமத்துடன் திகழ்கிறார்கள். 


திருக்கோவிலின் ஈசான்ய மூலையில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நவக்கிரக சன்னிதி அறுங்கோண வடிவில் தனி விமானத்தின் கீழ் இருப்பது சிறப்பு. 


மேலும் நவக்கிரகங்கள் அனைத்தும் வரிசை மாறி அமைந்திருக்கின்றன. வழக்கமாக நடுவில் இருக்கும் சூரியனுக்கு பதிலாக சந்திரன் நடுவில் உள்ளது. அதற்கு வலது புறத்தில் சாயாதேவி- உஷாதேவியுடன் சூரிய பகவான் இருக்கிறார். 


சனி தெற்கு நோக்கியும், அவரது நட்புக் கிரகங்களான புதன், சுக்ரன் இருபுறமும் இருக்க நவக்கிரகங்கள் காட்சி தருகின்றன. இவை வைணவ ஆலய விதிப்படி நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


பெருமாள் சன்னிதிக்கு நேரே கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. அதை ஒட்டியுள்ள மண்டப மேற்கூரையில் பன்னிரு ராசிகளும் பதிக்கப்பட்டுள்ளன. 


கொடி மரத்தின் முன், தங்களது ராசிக்குக் கீழ் நின்று பிரார்த்தித்துக் கொண்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேல் விதானத்தில் ராமாயண, நரசிம்ம அவதாரக் காட்சிகள் சிறிய புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றன. 


கோவிலை வலம் வரும் போது பிரகாரத்தில் மூலவரின் விமானத்தின் அருகே தலவிருட்சமான வில்வமரம் உள்ளது. சிவனுக்குரிய வில்வம் தல விருட்சமாக இருப்பது ஒரு சில திருமால் கோவில்களில் மட்டுமே. அந்த வகையில் இந்த ஆலயம் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. 


வெளிச் சுற்றில் அமிர்த வெங்கடேசர் தனிச் சன்னிதியிலும், தைத்யமர்த்தினி என்ற பெயரில் காவல் தெய்வமான அஷ்டபுஜ துர்க்கை, அருகே பட்டாபிஷேக ராமர், ஆஞ்சநேயர், கஜ சம்ஹார காட்சி சிறிய சிற்பங்களாக வழிபடப்படுகின்றன. 


திருமணம் தடைப்பட்டோர், சுவாமிக்கு திருமண உற்சவம் செய்து வைத்து, தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள். நவக்கிரக தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது. 


தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இவ்வாலயம், தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். 


கலியுகத்தின் காக்கும் கடவுளான வேங்கடேசப் பெருமாளை நித்திய சொர்க்க வாசல் வழியே சென்று வழிபட்டு அனைவரும் நலம் பெறலாமே.

தெய்வங்களுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கு முக்கியத்தும் கொடுப்பது ஏன்...?

 தெய்வங்களுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கு முக்கியத்தும் கொடுப்பது ஏன்...?

           நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு(செப்பு) பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான். 

    அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது.

    அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. மேலும் அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர்.

    இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    
    ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும். குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சி காமாட்சி அம்மனின் கண்கள் பூக்களால் சூழப்பட்டிருக்கும். 15 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே......

 காஞ்சி காமாட்சி அம்மனின் கண்கள் பூக்களால் சூழப்பட்டிருக்கும்.  

15 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்களை அகற்றிவிட்டு பார்க்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்.  

அந்தக் கண்களை ஜூம் செய்து பார்த்தால் மனித கண்களைப் போலவே தெரியும்.

SRI KANCHI KAMATCHI


MAHA PERIYAVAA STORIES

 "குரு சிஷ்யனும்- பிளிறிய யானையும்"


( என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, 'பயப்படாதே!' என்று சொல்லி அனுப்பியது, மகாபெரியவாளோட தீர்க்கதரிசனம். யானை மதம் பிடித்த மாதிரி நடந்து கொண்டபோதும், ஜெயேந்திரர் கொஞ்சமும் பயப்படாமல் இருந்தது, தன் குருவான மகாபெரியவாளின் வார்த்தைகளில் அவருக்கு இருந்த நம்பிக்கைக்கும், அவரோட குருபக்திக்கும் அடையாளம்.)


குரு - சிஷ்ய பாரம்பரியம் என்பது, இந்தியாவுக்கே உரித்தான தனிச்சிறப்பு என்று சொல்லலாம். ஏன்னா, நம்ம நாட்டுல மட்டும் தான் மாதா, பிதாவுக்கு அப்புறம் தெய்வத்துக்கும் முன்னால குருவுக்கு இடம் க  கொடுக்கப்பட்டிருக்கு.


கிருஷ்ணபரமாத்வே தன் குருவான சாந்தீபினி முனிவருக்குக் கட்டுப்பட்டு நடந்தார். விஸ்வாமித்ரரோட வார்த்தைகளுக்கு ராமர் கீழ்ப்படிந்து செயல்பட்டார். இப்படி தெய்வமே அவதாரங்கள் எடுத்த காலகட்டத்திலும், குருவுக்கு மரியாதை தரணும் என்பதை உணர்த்தியுள்ளனர்.


மகாபெரியவாள்னு பரமாசார்யாளையும். புது பெரியவாள்னு ஜெயேந்திரரையும் அழைச்சு தரிசனம் பண்ணறது பக்தர்களோட வழக்கமா இருந்தது. விஜய யாத்திரை செய்யும் சமயத்துல எல்லாம் புதுப்பெரியவாளான ஜெயேந்திரரும் கூடப் போவார்.


பொதுவா எங்கே போனாலும் முடிஞ்சவரைக்கும் நடந்தேதான் செல்வதுன்னு கொள்கை உடையவர், மகாபெரியவா. ஆனா, புதுப்பெரியவரான ஜெயேந்திரருக்கு நடக்கறது பழகாத காலகட்டம் என்பதாலும் சின்ன வயசு என்பதாலும் அவர் கொஞ்சம் சங்கடப்படுவார். அந்த சமயத்துல மகாபெரியவா ரொம்ப ஆதுரமா, ஜெயேந்திரரை பல்லக்குல ஏறிக்கச் சொல்லுவார்.


குரு பரவாயில்லைனு சொன்னாலும் சிஷ்யர் ரொம்ப தயங்குவார். கடைசியில குருவோட கட்டளைபோல கண்டிச்சு சொல்வார் மகாபெரியவா. அப்புறம்தான் ஜெயேந்திரர் பல்லக்குல ஏறிப்பார்.


அப்படி ஒரு சமயம் வேலூரை அடுத்து உள்ள சேண்பாக்கம் என்கிற ஊருக்குப் பக்கதுல மகாபெரியவா யாத்திரை மேற்கொண்டு இருந்தார். அந்த சமயத்துல பலரும் அவரை யானைமேல ஏறி ஊர்வலமா வரும்படி வேண்டினார்கள். மகாபெரியவா அதுக்கு மறுப்பு சொன்னதால, புதுப்பெரியாளையாவது யானை மேல் ஏத்தி ஊர்வலமாக அழைத்து வர சம்மதிக்கும்படி கேட்டார்கள் பலரும். அதையும் வேண்டாம்னு மறுத்தார், மகாபெரியவா.


ஆனால், எல்லாரும் மறுபடியும்,மறுபடியும் கெஞ்சவே, கொஞ்ச யோசித்துவிட்டு, புதுபெரியவாளான ஜெயேந்திரரை யானையில் அமர்த்தி ஊர்வலம் நடத்த ஒப்புதல் தந்தார். அவர் ஏன் அவ்வளவு யோசிச்சார் என்பது, அந்த சமயத்துல யாருக்கும் தெரியலை. ஆனா, அதுக்கப்புறம் நடந்த சம்பவத்தின் மூலம் அது தெரிய வந்தது. 


புதுப்பெரியவா, யானைமீது ஏறுவதற்கு முன், தன் குருவான மகாபெரியவாளிடம் சென்று, அதற்கான சம்மதத்தையும், ஆசிர்வாதத்தையும் வாங்கச் சென்றார்.


"தைரியமா போ....எதுக்கும் பயப்படவேண்டாம். எல்லாம் நல்லபடியா நடக்கும்!" என்று சொல்லி ஆசிர்வாதம் பண்ணினார், மகாபெரியவா.


அதையடுத்து, அலங்கரிக்கப்பட்டிருந்த யானைமேல் ஏறி ஊர்வலம் புறப்பட்டார், ஜெயேந்திரர். இளைய ஆசார்யாளைச் சுமந்து கொண்டு சந்தோஷமாக, கம்பீரமாக நடந்துண்டிருந்த யானை, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், திடீர் என்று, மதம் பிடித்ததுபோல் சத்தமாக பிளிறத் தொடங்கியது. பாகன் எவ்வளவோ முயற்சித்தும் கட்டுப்படாமல் அங்கேயும் இங்கேயும் வேகமாக ஓடியது.


எல்லாருக்கும் ஒரே பயம். யானைமேலே இருக்கறவர் மகாபெரியவரின் சீடர். அதோடு வருங்காலத்தில் ஸ்ரீமடத்தை நிர்வகிக்கப் போறவர். அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ! மகாபெரியவா முதலில் வேண்டாம் என்று சொல்லித் தயங்கியது இதுக்குத்தானோ! நாம்தான் தப்புப்பண்ணிட்டோமோ என்றெல்லாம் ஆளாளுக்கு பதற ஆரம்பித்தார்கள்.


இத்தனை களேபரத்துலயும் யானை மேல் இருந்த புதுப்பெரியவா கொஞ்சமும்  பயப்படவில்லை. எல்லாரும் பதட்டத்தோடு அங்கேயும், இங்கேயும் ஓட, யானை மேலிருந்த ஜெயேந்திரர்,"யாரும் பயப்படவேண்டாம். யானை அமைதியாகிவிடும். எல்லாத்தையும்

மகாபெரியவா பார்த்துப்பார்!" என்று குரல் கொடுத்தார்.


அப்போதான் எல்லாருக்குமே மகாபெரியவா பற்றி ஞாபகம் வந்தது. இந்த ஊர்வலம் நடந்து கொண்டு இருந்த இடத்துக்கு கொஞ்சம் தொலைவில் நடந்து வந்து கொண்டு இருந்த ஆசார்யாகிட்டே சிலர் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னார்கள்.


சில விநாடி தலையை உயர்த்தி யோசித்தார், மகாபெரியவா.


"இந்த ஊர்ல ஒரு இடத்துல கணபதியோட ஏகாதச (பதினொரு) சுயம்பு மூர்த்தம் இருக்கே, அந்தக் கோயிலுக்கு நூத்தியெட்டு சிதறு தேங்காய் உடைக்கறதா ஒரு வேண்டுதல் மடத்துல இருக்கு. அதை இன்னும் நிறைவேத்தலை. அதைத்தான் பிள்ளையார் நினைவுபடுத்தறார் போல இருக்கு. உடனடியா அதை நிறைவேத்தறதுக்கு ஏற்பாடு பண்ணுங்கோ. அவரையே வேண்டிக்குங்கோ. ஒரு பிரச்னையும் வராது!" என்று  மகாபெரியவா சொல்ல, அப்படியே வேண்டினார்கள் எல்லாரும்.


அதுவரை அல்லோலகல்லோலப்படுத்திக் கொண்டு இருந்த யானை, சேண்பாக்கம் விநாயகரை வேண்டிய மறு நிமிடமே சட்டென்று அமைதியாகி நின்றது. சுத்தி இருந்த எல்லோரும், 'ஜெயஜெய சங்கர, ஹர ஹர சங்கர'ன்னு குரல் எழுப்பினார்கள்.


தன் சீடர் யானைமேல் யாத்திரை பண்ணும்போது என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து,'பயப்படாதே!' என்று சொல்லி அனுப்பியது, மகாபெரியவாளோட தீர்க்கதரிசனம். யானை மதம் பிடித்த மாதிரி நடந்து கொண்டபோதும், ஜெயேந்திரர் கொஞ்சமும் பயப்படாமல் இருந்தது, தன் குருவான மகாபெரியவாளின் வார்த்தைகளில் அவருக்கு இருந்த நம்பிக்கைக்கும், அவரோட குருபக்திக்கும் அடையாளம்.


தஞ்சை திருவிடைமருதூர் யோகாம்பிகா சமேத ஶ்ரீஅட்சய நாதர் ஸ்வாமி கோவில் சந்திரகிணறு ஆண்டுக்கொரு முறை பொங்கி வழியும் அற்புதக் காட்சி.

 சிவாயநம


MAHA PERIYAVAA STORIES

 "ரொம்ப சின்னவரா இருக்கார்  இவர்கிட்டே , எப்படி எங்க பிரச்னையைச் சொல்றது? அதுக்கு ஆலோசனை எப்படிக் கேட்கறது? இதெல்லாம் சரிவராதுன்னு தோணித்து. அதான் வெளியில வந்துட்டோம்!"- ஒரு தம்பதி (பெரியவா இளம் வயதில் இருக்கும்போது)


மகாபெரியவா சன்யாசம் ஏத்துண்டு ஆசார்யாளா பீடம் ஏத்துண்டு பத்துப் பன்னிரண்டு வருஷத்துக்கு அப்புறம் நடந்த சம்பவம் இது. அப்போ ஆசார்யாளுக்கு சின்ன வயசு. அவரோட  மகிமையெல்லாம் பலருக்கும் புரியாத காலகட்டம். மடத்துக்கு புதுசா வர்ற பக்தர்கள் பலர், ஆசார்யா இவ்வளவு சின்னவரா இருக்காரே இவர்கிட்டே நம்ம பிரச்னையைச் சொல்லலாமா? வேண்டாமா?ன்னு தயங்குவது உண்டு.


வேதம், புராணங்கள்ல சந்தேகம் கேட்க வர்றவாளா இருந்தா, இவருக்கு அதெல்லாம் தெரிஞ்சிருக்குமா? கேட்கலாமான்னு தயங்கி நிற்பா. சிலர் இன்னும் ஒருபடி மேலேபோய் இவர்கிட்டே எதுக்கு நம்ம குறையைச் சொல்லணம்னு அப்படியே திரும்பிப் போயிடலாம்னு நினைக்கறதும் உண்டு. ஆனா யாரா இருந்தாலும் ஒரே ஒருதரம் மகாபெரியவா முன்னால வந்து நின்னுட்டான்னா, அவாளோட எல்லா சந்தேகமும் போயிடும். உதிக்கறப்போ சூரியன் பால சூரியனாதான் இருக்கும். அது உச்சியில ஏறினத்துக்கு அப்புறம்தான் அதோட உக்ரம் தெரியும்கற மாதிரி, தொலைவுல இருந்து பார்க்கறச்சே, பாலகனா தெரியற பெரியவா முன்னால வந்து நின்னாதான், அவர் பாலகன் இல்லை, பரமேஸ்வரன்னே புரியும்.


அந்த மாதிரியான காலகட்டத்துல ஒருநாள், மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காக நிறைய பேர் மடத்துக்கு வந்திருந்தா. அவாள்ல, வெளியூர்லேர்ந்து காஞ்சிபுரத்துக்கு க்ஷேத்ராடனம் வந்த பக்தர் கூட்டம் ஒண்ணும் இருந்தது. காமாட்சியை தரிசனம் பண்ண  வந்த அவாள்லாம். இங்கே ஆசார்யா இருக்கார்னு தெரிஞ்சதும் அவரை தரிசனம் செய்ய வந்திருந்தா!


வந்தவாள்ல பலர் ஆசார்யாளை தரிசனம் பண்ணறது இதுதான் முதல் தரம்.சிலர் ஏற்கனவே வந்தவா. ஏற்கனவே வந்திருந்தவா, ஆசார்யாளோட பெருமையை வராதவாளுக்கு சொல்லிண்டு இருந்தா. அதையெல்லாம் கேட்டுண்டு, எல்லாரும் வரிசையாக வந்து மகா பெரியவாளை நமஸ்காரம் செஞ்சு அவர்கிட்டே ஆசிர்வாதம் வாங்கிண்டு புறப்பட்டுண்டு இருந்தா.


அப்போ அந்தக் கூட்டத்தோட வந்திருந்த ஒரு தம்பதி மட்டும் வரிசைலேர்ந்து பாதியிலயே

திரும்பி வெளியில போய் நின்னுட்டா.


அவாகூட வந்தவா எல்லாரும் மகாபெரியவாளை தரிசனம் பண்ணி பிரசாதம் வாங்கிண்டு  வெளியில வந்ததும், 'ஆசார்யாளை நீங்க ஏன் தரிசனம் பண்ண வரலை?'ன்னு பலரும் அவாகிட்டே கேட்டா.


"இங்கே மடத்துல ஆசார்யா இருக்கார்னதும் அவர்கிட்டே எங்க பிரச்னை ஒண்ணைச் சொல்லி அதுக்குப்  பரிகாரம் ஏதானும் இருக்கான்னு கேட்கலாம்னு நினைச்சுண்டுதான் வந்தோம். இங்கே வந்து பார்த்தா, அவர் ரொம்ப சின்னவரா இருக்கார். இவர்கிட்டே,எப்படி எங்க பிரச்னையைச் சொல்றது? அதுக்கு ஆலோசனை எப்படிக் கேட்கறது? இதெல்லாம் சரிவராதுன்னு தோணித்து. அதான் வெளியில வந்துட்டோம்!" அவா சொல்லிண்டு இருந்த  சமயத்துலயே ஆசார்யாளோட அணுக்கத் தொண்டர் அங்கே வந்தார். 


"இங்கே தீராத வயத்துவலியால தவிக்கற ஒரு மாமி வந்திருக்காளாமே, அவா யாரு? அவாளை  ஆசார்யா அழைச்சுண்டு வரச் சொன்னார்" அப்படின்னார்.


அதைக் கேட்டதுதான் தாமதம், அப்படியே பதறிப்போனா அந்த தம்பதி.


அந்த மாமி கொஞ்சம் தயக்கத்தோட 'எனக்குதான் வயத்துவலி.!' என்று வார்த்தைகளை முடிக்காமல் இழுக்க அந்த தொண்டர் அவசரமா அவாளை கூட்டிண்டு போனார்.


மகாபெரியவா முன்னாலபோய் நின்னா, அந்தத் தம்பதி. இவர் எப்படி என்னோட வயத்துவலியைத் தெரிஞ்சுண்டார்ங்கற மாதிரியான ஆச்சரியம் அந்த மாமி முகத்துல பட்டவர்த்தனமா தெரிஞ்சுது.


"என்ன அடிவயத்தைப் பிசையறாப்புல வலிக்கறதா? டாக்டர்களெல்லாம் அல்சர் ரொம்ப அதிகமாயிடுத்து, தீவிரமா சிகிச்சை பண்ணியாகணும்ணு சொல்றாளா?" அவாகிட்டே கேட்டுண்டே சாத்துக்குடி பழம் ஒண்ணை எடுத்து கையில வைச்சு உருட்டிண்டு இருந்தார் மகாபெரியவா.


"ஆமாம் நேரத்துக்கு சாப்பிடாததால வயத்துல அமிலம் அரிச்சு புண்ணாயிடுத்தாம் . குணப்படுத்தறது ரொம்ப கஷ்டம்னு சொல்றா டாக்டர்கள்.! அடிக்கடி தாங்க முடியாம வலிக்கிறது" சொன்ன அந்த மாமியோட கண்ணுல இருந்து வலி தாங்காம ஜலம் வழியத் தொடங்கித்து.


தான் கையில் வைச்சு உருட்டிண்டு இருந்த சாத்துக்குடியை சட்டுனு அந்த மாமியோட ஆத்துக்காரர்கிட்டே  தூக்கிப் போட்டார் மகாபெரியவா."அதை உடனே உரிச்சுக் குடு..!" கட்டளை மாதிரி சொன்னார்.


ஏதோ ஒரு உத்வேகத்துல அவரும் அந்தப் பழத்தை உரிச்சு ஆத்துக்காரிக்குக் குடுத்தார். தாங்க முடியாத வயித்துவலியில தவிச்சுண்டு இருந்த அந்த மாமி, ஒவ்வொரு சுளையா வாங்கி ஏதோ குழந்தை சாப்பிடறாப்புல சாப்பிட்டு முடிச்சா. இத்தனையும் ஒரு சில நிமிடத்துல நடந்துடுத்து.


அதுக்கு அப்புறம் நடந்துதான் பேரதிசயம்! அதுவரைக்கும் வலியால துடிச்சுண்டு இருந்த அந்த மாமி, இதுவரைக்கும் வலிச்சதெல்லாம் கனவா? நனவா?ங்கற மாதிரி ரொம்பவே சந்தோஷமா பேச ஆரம்பிச்சுட்டா.


"இதுவரைக்கும் என்னை வாட்டிண்டு இருந்த வலி போன இடம் தெரியலை. சாதாரணமா இந்த  வலி வந்துட்டா ரெண்டு மூணு மணி நேரமாவது என்னை வாட்டி வதைச்சுடும். மருந்து எடுத்துண்டாலும் அது வேலை செய்யறவரைக்கும் சகிச்சுண்டு இருக்கணும். ஆனா இப்போ ரொம்பவே ஆச்சரியமா எனக்கு வலி போன இடம் தெரியலை. ஆசார்யா தந்த பழத்தோட முதல் சுளையைத் தின்னதுமே என்னோட வலி குறைய ஆரம்பிச்சுடுத்து. முழுசா தின்னு முடிச்சதும் எனக்கா வலிச்சுதுங்கறமாதிரி பூரணமா நிவர்த்தி ஆயிடுத்து!" வார்த்தைகள் நெகிழ, கண்ணு கசிய சொன்னார் அந்த மாமி. நின்னுண்ட இருந்த அவர் அகத்துக்காரர் மாமி சொல்லி முடிச்ச மறுகணம் அப்படியே சாஷ்டாங்கமாக ஆசார்யா திருவடியிலே விழுந்தார்.


"எங்களை மன்னிச்சுடுங்கோ! இவ்வளவு சின்னவரா இருக்கேளேன்னு நாங்க சந்தேகப்பட்டோம். ஆனா, நாங்க சொல்லாமலே என் ஆத்துக்காரியோட பிரச்னையைத் தெரிஞ்சுண்டு, அது போகறதுக்கு மருந்தாட்டம் ஒரு கனியைப் பிரசாதமாவும் தந்து எங்க கண்ணைத் திறந்துட்டேள்" தழுதழுப்பா சொன்னார்.


மௌனமா ஒரு புன்னகையை மட்டும் பதிலாக்கி அந்தப் பெண்மணிகிட்டே கொஞ்சம் குங்குமப் பிரசாதத்தைக் குடுத்து ஆசிர்வதிச்சார் மகாபெரியவா.


அந்தப் பெண்மணிக்கு தீராத வயத்துவலின்னு ஆசார்யாளுக்கு  எப்படித் தெரிஞ்சுதுங்கறது அதிசயம்னா, அதைவிட பேரதிசயம் ஒரே ஒரு சாத்துக்குடியைத் தந்து அவாளோட வியாதியைப் போக்கினது. இதெல்லாம் சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனோட  அம்சமான மகாபெரியவாளோட லீலை இல்லாம வேறு என்ன?. 


MAHA PERIYAVAA STORIES

 "நல்லெண்ணெய், வெளக்கெண்ணெய் வேப்பெண்ணெய்" 

''எல்லா கிரஹஸ்தாளும் வீடுகள்ல மூணு தினுசு எண்ணெயை எப்பவும் வைச்சு இருக்கணும்."

மகாபெரியவா மடத்துல இருந்த சமயம் அது. 

எத்தனை

எத்தனையோ பேர் அவரைத் தரிசிக்க தினமும் வருவார்கள்.


வயசானவர்கள், இளம் வயசுக்காரர்கள், சின்னக் குழந்தைகள்

இப்படியெல்லாம் எந்த வித்தியாசமும் இல்லாம, ஆண்கள்

பெரியவருக்கு  நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க

நமஸ்காரமும் பண்ணுவார்கள்.


(இரண்டு முழங்கால்கள், இரண்டு

முழங்கைகள், நெற்றித் தரையில படற மாதிரி முழங்காலை

மடக்கிச் செய்யறது பஞ்சாங்க நமஸ்காரம்).


(நெடுஞ்சாண்கிடையாக அப்படியே விழுந்து செய்யறது 

சாஷ்டாங்க நமஸ்காரம்.)



தன்னை மத்தவர்கள் நமஸ்காரம் செய்யறச்சே எல்லாம்

நாராயணா, நாராயணான்னு சொல்வார் ஆசார்யர். 


அதாவது

நமஸ்காரம் தனக்கு இல்லை. பகவானுக்குன்னு அர்த்தம்.


அந்தமாதிரி ஒரு சமயம் நடுத்தர வயசுப் பக்தர் ஒருத்தர்,

மகாபெரியவாளுக்கு நமஸ்காரம் செஞ்சுட்டு ரொம்ப

கஷ்டப்பட்டு முழங்கால்களை பிடிச்சுண்டு எழுந்திருந்தார்.


மகாபெரியவா அவரைக் கொஞ்சம் உத்துப் பார்த்தார்.


அந்தப் பார்வையோட அர்த்தத்தைப் புரிஞ்சுண்ட அந்த

பக்தர்,"முதுகுத் தண்டு பயங்கரமா வலிக்கிறது பெரியவா.


அலோபதிலேர்ந்து ஹோமியோபதி வரைக்கும் 

பார்த்துட்டேன். ஒண்ணும் கேட்கலை! குனிஞ்சு நிமிர்ந்தா

வலீல உசுரு போகறது!" அப்படின்னு சொன்னார்.


"தைல ஸ்நானம் பண்ணற (எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கற)

பழக்கம் இருக்கோ நோக்கு?" கேட்டார், மகாபெரியவா.


பெரியவா அப்படிக் கேட்டதும் கொஞ்சம் நெளிஞ்ச அவர்,

"இல்லை பெரியவா...முந்தியெல்லாம் பண்ணிண்டு 

இருந்தேன். இப்போ வேலை, வர்த்தகம் அது இதுன்னு

தினமும் இருக்கற அவசரத்துல வெறும் ஜலத்தைத் தலைல

விட்டுண்டு ஓடவேண்டியதா இருக்கு..!" சங்கடமாகச் சொன்னார்.


"ம்..எல்லாம் அவசர யுகமாயிடுத்து. செக்குல ஆட்டின

நல்லெண்ணெயை சரீரம் முழுக்க தேய்ச்சுண்டு நன்னா

ஊறினதும் அரப்புப் பொடி தேய்ச்சுக் குளிச்ச காலத்துல

யாருக்கும் இப்படி முதுகு வலி, மூட்டிவலியெல்லாம் வரலை..

இப்போ அவா அவா தேகத்தை கவனிச்சுக்கறதுக்குக்கூட நேரம்

இல்லைங்கறா..!"சொன்ன பரமாசார்யா மறுபடியும் தொடர்ந்தார்


"பழசை மறக்கக்கூடாதுன்னுட்டு, சனிநீராடுன்னு பாடத்துலயே

வைச்சு சொல்லிக் குடுத்தா. ஆனா படிச்சதையெல்லாம் யாரு

இப்ப  ஃபாலோ பண்றா? 


"நீ ஒண்ணு பண்ணு. இனிமேலாவது

வாரத்துக்கு ரெண்டு நாள் தைல ஸ்நானம் பண்ணு. மிளகு

ரசத்தையும், பிபெரண்டைத் தொகையலையும் அடிக்கடி

சேர்த்துக்கோ!"


பெரியவா சொல்ல, "அப்படியே செய்யறேன் பெரியவா..!"

பணிவாகச் சொல்லிட்டு பிரசாதம் வாங்கிக்கறதுக்காக கையை

நீட்டினார் அந்த பக்தர்.


"கொஞ்சம் இரு...இந்த சமயத்துல எல்லாருக்குமே பொதுவான

இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். அதையும் 

கேட்டுட்டுப் போ..!" 


பெரியவா சொல்ல, அவர் என்ன சொல்லப்

போறார்ங்கறதைக் கேட்க எல்லாரும் ஆர்வத்தோடு தயாரானா.


"எல்லா கிரஹஸ்தாளும் வீடுகள்ல மூணு தினுசு எண்ணெயை

எப்பவும் வைச்சு இருக்கணும்." 


"சுவாமிக்கு வெளக்கு ஏத்தவும்,

சமையல் பண்ணவும் நல்லெண்ணெய். இதுல சிலர் 

சமைக்கறதுக்கு நல்ல எண்ணெயும், சுவாமிக்கு கொஞ்சம் 

மட்டரகத்தையும் வாங்கறதா கேள்வி. அது தப்பானது. 


எப்பவுமே பகவானுக்கு ஒசத்தியானதைத்தான் தரணும்.


அடுத்தது வெளக்கெண்ணெய். பச்சைக் குழந்தையோ,

பெரியவாளோ உஷ்ணத்தால் வயத்துவலி வந்துட்டா, இது

கண்கண்ட மருந்து. 


நாபியைச் சுத்தி தடவிண்டா போதும்.

சட்டுன்னு குணம் தெரியும். அந்தக் காலத்துல ரொம்ப

ப்யூரான வெளக்கெண்ணெயை உள்ளுக்கே மருந்தா குடுப்பா.

வயத்தை சுத்தப்படுத்திடும்.


மூணாவது, வேப்பெண்ணெய். இதை யாரும் இப்போ

வாங்கறமாதிரியே தெரியலை. ஆனா இது மூட்டுவலிக்கு

சரியான ஔஷதம். வயசானவா தெனமும் இதை கை,கால்,

மூட்டுல தடவிண்டா, முட்டிவலி சுத்தமா வரவே வராது.


இன்னொரு முக்கியமான விஷயம். எண் ஜாண் ஒடம்புக்கு

சிரஸே ப்ரதானம்னு சொல்லுவா. ஆனா அந்த சிரஸுலேர்ந்து

தேகம் முழுக்க சௌகர்யமா இருக்கணும்னா, அதுக்கு

பாதத்தை பத்திரமா பார்த்துக்கறது ரொம்ப அவஸ்யம்.


ஸ்நானம் பண்ணி முடிச்சதும், தலையைத் தொடைச்சுக்கறது

மாதிரியே பாதத்தையும் அக்கறையா தொடைச்சுக்கணும்.


தெனோம் ராத்திரி தூங்கறதுக்கு முன்னால காலை நன்னா

அலம்பி, பாதத்தை ஈரம் போகத் தொடைச்சுக்கணும்.


பாதத்தை பத்திரமா பார்த்துண்டாலே தேகம் சீர்கெடாம

பத்திரமா இருக்கும்.


அந்தக் காலத்துல, வெளீல போய்ட்டு ஆத்துக்குத் திரும்பி

வந்தா, காலை நன்னா அலம்பிட்டு, வாய் கொப்பளிச்சுட்டுத்தான் உள்ளேயே நொழைவா! 


வெளி மனுஷா 

வந்தாலும் வாசல்ல கால் அலம்பச் சொல்லுவா. ஆனா

இன்னிக்கு வீட்டுக்கு உள்ளறை வரைக்கும் செருப்புக்காலோட

நடமாட ஆரம்பிச்சுட்டா.


அப்புறம் நோய் எப்படி வராம இருக்கும் ?! இதையெல்லாம்

சொன்னாலும் இப்போதைக்குக் கேட்டுக்கறவா, அப்புறம்

அதைக் கடைப்பிடிப்பாங்கறதுக்கு நிச்சயம் இல்லை. 


ஏதோ

சரீரத்துமேல அக்கறை உள்ளவாளுக்கு உப்யோகப்படுமேன்னு

சொன்னேன். புரிஞ்சுண்டா சரி!" சொல்லி முடித்த ஆசார்யர்,

பக்தருக்குப் பிரசாதம் குடுத்து அனுப்பினார்.


இது நடந்து ஒரு மாசம் இருக்கும். மறுபடியும் 

மகாபெரியவாளை தரிசிக்க வந்திருந்தார் அந்த பக்தர். 

இந்த முறை நெடுஞ்சாண்கிடையா ஆசார்யா திருவடியில

விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு, அப்படியே எழுந்து நின்னார்.


அந்த வேகமே அவரோட முதுகுவலி முழுசா

குணமாயிடுத்துங்கறதைக் காட்டியது.


மஹாபெரியவா திருவடிக்கே...

MAHA PERIYAVAA STORIES

 "திருவிசநல்லூர் மடத்து கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்துக்கு, எப்போதும் போல இந்த வருஷமும் கங்கை வந்தாளா ?"

1991ம் வருஷம். 


திருவிசநல்லூர் ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் நடைபெறும் கார்த்திகை அமாவாஸ்யை கங்காவதரண உத்ஸவம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி.


சில வருஷங்களுக்கு முன்னால் தஞ்சாவூர் ப்ரதேசத்தில் ஐப்பசியில் பருவ மழை பெய்யாது பொய்த்தது.. மேட்டூர் ஜலமும் வரவில்லை. காவேரியில் சுத்தமாக வரத்து இல்லை. 



ஸ்ரீஐயாவாள் மடத்தின் பின்புறம் கங்கை ஆவிர்பவிக்கும் கிணறும் வறண்டு போனது. 


ஸ்ரீஐயாவாள் மடத்தின் கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவம் அந்த வருஷம் நடக்குமா என்ற பயம் வந்து விட்டது. 


உத்ஸவ பத்ரிகையை எடுத்துக் கொண்டு போய் ஸ்ரீபெரிவாளின் ஸன்னதியில் ஸமர்ப்பித்தோம். மெதுவாக அங்குள்ள பிரச்னை பற்றிச் சொன்னோம். 


அப்படியே சில நிமிஷங்கள் கழிந்தன. 


ஸ்ரீபெரியவா சற்றுநேரம் மோனமாக இருந்து விட்டுச் சைகையால் அருகிலிருந்த ஸ்ரீமடத்து அன்பரை அழைத்து ஒரு பெரிய செப்புக் குடத்தில் கங்கா ஜலத்தை நிரப்பி வரச் சொன்னார்கள். 


அங்கு கங்கா ஜலம் இருப்பது பற்றி எங்களுக்கு ஏதும் அதற்கு முன்னால் தெரியாது. அந்த அன்பரும் அவ்வண்ணமே கங்கா ஜலம் நிரம்பிய ஒரு பெரிய செப்புக் குடத்தைத் தூக்கி வந்து ஸ்ரீபெரிவாளின் திருமுன்னர்க் கொண்டு வைத்தார். 


உடனே ஸ்ரீபெரியவா எங்களிடம் “இந்தக் குடத்தில் இருக்கும் கங்கா ஜலத்தை ஜாக்ரதையாகத் திருவிசநல்லூருக்குக் கொண்டு போய் வையுங்கள். 


மழை வராவிட்டால் ஸ்ரீஐயாவாள் மடத்தில் இருக்கும் கங்கை ஆவிர்பவிக்கும் கிணற்றில் கார்த்திகை அமாவாஸ்யைக்கு முன்னால் சேர்த்து விடுங்கள் .. ! ” 


என்று அபயம் காட்டி எங்களுக்கு ப்ரஸாதம் அளித்து அனுப்பி வைத்தார்கள். 


திருவிசநல்லூருக்குத்  திரும்பினோம். 


ஸ்ரீபெரிவாளின் வாக்கு என்றும் பொய்க்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தபோதிலும் அப்போதிருந்த வறட்சியான கால நிலை எங்களை ஸஞ்சலத்தில் ஆழ்த்தியபடியே இருந்தது. 


உத்ஸவத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையிலும் மழை பெய்யவே இல்லை. 


காவேரியில் ப்ரவாஹமேயில்லை. வயல் வெளிகளும் காய்ந்து வெடித்துப் போயிருந்தன.


ஸ்ரீஐயாவாள் மடத்துக் கிணறும் சுத்தமாகக் காய்ந்துபோயிருந்தது. உத்ஸவ கமிட்டி மீட்டிங் போட்டோம். 


என்ன செய்வது என்று கலந்து பேச ஆரம்பித்தோம். எல்லோரும் ஒருமித்ததொரு முடிவுக்கு வந்தோம்.


“ஸ்ரீபெரியவா அவர்களின் உத்தரவு ப்ரகாரம் செப்புக் குடத்திலிருந்த கங்கா ஜலத்தைக் கிணற்றில் ஊற்றிவிடுவோம். அப்புறமாக அதைக் கொஞ்சமாக எடுத்து அனைவருக்கும் ப்ரோக்ஷணம் செய்து விட வேண்டியதுதான் என்று தீர்மானித்து அவ்விதமே கங்கா ஜலத்தைக் கிணற்றில் சேர்த்தோம். 


அடுத்து நடந்ததுதான் ஆச்சர்யம் … 


கார்த்திகை அமாவாஸ்யை தினத்தில் ஸ்ரீஐயாவாள் அவர்களின் ஸ்தோத்ரத்தைக் கேட்டவுடன் கங்கை அவரது இல்லத்தின் பின்புறமிருந்த கிணற்றில் ஆவிர்பவித்துப் பெருகி ஊரெங்கும் காணும்படி வழிந்தோடினாள் என்பது சரித்ரம். 


அதை மீண்டும் காட்டும்படியாக கார்த்திகை அமாவாஸ்யைக்கு முதல் நாள் செப்புக் குடத்திலிருந்த ஸ்ரீபெரியவா அனுக்ரஹித்திருந்த கங்கையைக் கிணற்றில் சேர்த்த சில மணி நேரத்தில் தொடங்கியது பெரும் மழை. 


விடிய விடிய விடாது பெய்து ஊரையே வெள்ளத்தில் மிதக்க வைத்தது. ஸ்ரீஐயாவாள் அவர்கள் கங்கையை வரவழைத்தது போல் மடத்திலிருந்த கிணற்றில் ஜலம் பெருகியது. 


அமாவாஸ்யை அன்று விடியற்காலை கிணற்றின் கைப்பிடிச் சுவற்றிற்கு மேல் ஜலம் பெருகி வழிந்தோடியதைக் கண்டோர் அதிசயித்தனர். 


அதேவிதமாகக் காவேரியிலும் கால் வைக்கக்கூட முடியாத அளவிற்கு ப்ரவாஹம் மிக அதிகமாக இருந்தது. 


பல நூறு பக்த ஜனங்கள் அன்று மடத்திலிருந்த கிணற்றில் ஸ்நானம் செய்தும் வழிபட்டனர். 


இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஸ்ரீபெரிவாளைத் தரிசிக்கச் சென்றோம். திருவிசநல்லூர் மடத்தார் வந்திருக்கும் விபரம் அவர்கள் ஸந்நிதானத்தில் தெரிவிக்கப்பட்டது. 


உடனே ஸ்ரீபெரியவா அவர்கள் புன்முறுவலுடன் "திருவிசநல்லூர் மடத்து கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்துக்கு, எப்போதும் போல இந்த வருஷமும் கங்கை வந்தாளா? என்று எங்களை பார்த்துக் கேட்டதை என்னிக்கும் மறக்க முடியாது!” என்று முடித்தார் ராவ்ஜீ. 


மஹாபெரியவா திருவடிக்கே