"குரு சிஷ்யனும்- பிளிறிய யானையும்"
( என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, 'பயப்படாதே!' என்று சொல்லி அனுப்பியது, மகாபெரியவாளோட தீர்க்கதரிசனம். யானை மதம் பிடித்த மாதிரி நடந்து கொண்டபோதும், ஜெயேந்திரர் கொஞ்சமும் பயப்படாமல் இருந்தது, தன் குருவான மகாபெரியவாளின் வார்த்தைகளில் அவருக்கு இருந்த நம்பிக்கைக்கும், அவரோட குருபக்திக்கும் அடையாளம்.)
குரு - சிஷ்ய பாரம்பரியம் என்பது, இந்தியாவுக்கே உரித்தான தனிச்சிறப்பு என்று சொல்லலாம். ஏன்னா, நம்ம நாட்டுல மட்டும் தான் மாதா, பிதாவுக்கு அப்புறம் தெய்வத்துக்கும் முன்னால குருவுக்கு இடம் க கொடுக்கப்பட்டிருக்கு.
கிருஷ்ணபரமாத்வே தன் குருவான சாந்தீபினி முனிவருக்குக் கட்டுப்பட்டு நடந்தார். விஸ்வாமித்ரரோட வார்த்தைகளுக்கு ராமர் கீழ்ப்படிந்து செயல்பட்டார். இப்படி தெய்வமே அவதாரங்கள் எடுத்த காலகட்டத்திலும், குருவுக்கு மரியாதை தரணும் என்பதை உணர்த்தியுள்ளனர்.
மகாபெரியவாள்னு பரமாசார்யாளையும். புது பெரியவாள்னு ஜெயேந்திரரையும் அழைச்சு தரிசனம் பண்ணறது பக்தர்களோட வழக்கமா இருந்தது. விஜய யாத்திரை செய்யும் சமயத்துல எல்லாம் புதுப்பெரியவாளான ஜெயேந்திரரும் கூடப் போவார்.
பொதுவா எங்கே போனாலும் முடிஞ்சவரைக்கும் நடந்தேதான் செல்வதுன்னு கொள்கை உடையவர், மகாபெரியவா. ஆனா, புதுப்பெரியவரான ஜெயேந்திரருக்கு நடக்கறது பழகாத காலகட்டம் என்பதாலும் சின்ன வயசு என்பதாலும் அவர் கொஞ்சம் சங்கடப்படுவார். அந்த சமயத்துல மகாபெரியவா ரொம்ப ஆதுரமா, ஜெயேந்திரரை பல்லக்குல ஏறிக்கச் சொல்லுவார்.
குரு பரவாயில்லைனு சொன்னாலும் சிஷ்யர் ரொம்ப தயங்குவார். கடைசியில குருவோட கட்டளைபோல கண்டிச்சு சொல்வார் மகாபெரியவா. அப்புறம்தான் ஜெயேந்திரர் பல்லக்குல ஏறிப்பார்.
அப்படி ஒரு சமயம் வேலூரை அடுத்து உள்ள சேண்பாக்கம் என்கிற ஊருக்குப் பக்கதுல மகாபெரியவா யாத்திரை மேற்கொண்டு இருந்தார். அந்த சமயத்துல பலரும் அவரை யானைமேல ஏறி ஊர்வலமா வரும்படி வேண்டினார்கள். மகாபெரியவா அதுக்கு மறுப்பு சொன்னதால, புதுப்பெரியாளையாவது யானை மேல் ஏத்தி ஊர்வலமாக அழைத்து வர சம்மதிக்கும்படி கேட்டார்கள் பலரும். அதையும் வேண்டாம்னு மறுத்தார், மகாபெரியவா.
ஆனால், எல்லாரும் மறுபடியும்,மறுபடியும் கெஞ்சவே, கொஞ்ச யோசித்துவிட்டு, புதுபெரியவாளான ஜெயேந்திரரை யானையில் அமர்த்தி ஊர்வலம் நடத்த ஒப்புதல் தந்தார். அவர் ஏன் அவ்வளவு யோசிச்சார் என்பது, அந்த சமயத்துல யாருக்கும் தெரியலை. ஆனா, அதுக்கப்புறம் நடந்த சம்பவத்தின் மூலம் அது தெரிய வந்தது.
புதுப்பெரியவா, யானைமீது ஏறுவதற்கு முன், தன் குருவான மகாபெரியவாளிடம் சென்று, அதற்கான சம்மதத்தையும், ஆசிர்வாதத்தையும் வாங்கச் சென்றார்.
"தைரியமா போ....எதுக்கும் பயப்படவேண்டாம். எல்லாம் நல்லபடியா நடக்கும்!" என்று சொல்லி ஆசிர்வாதம் பண்ணினார், மகாபெரியவா.
அதையடுத்து, அலங்கரிக்கப்பட்டிருந்த யானைமேல் ஏறி ஊர்வலம் புறப்பட்டார், ஜெயேந்திரர். இளைய ஆசார்யாளைச் சுமந்து கொண்டு சந்தோஷமாக, கம்பீரமாக நடந்துண்டிருந்த யானை, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், திடீர் என்று, மதம் பிடித்ததுபோல் சத்தமாக பிளிறத் தொடங்கியது. பாகன் எவ்வளவோ முயற்சித்தும் கட்டுப்படாமல் அங்கேயும் இங்கேயும் வேகமாக ஓடியது.
எல்லாருக்கும் ஒரே பயம். யானைமேலே இருக்கறவர் மகாபெரியவரின் சீடர். அதோடு வருங்காலத்தில் ஸ்ரீமடத்தை நிர்வகிக்கப் போறவர். அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ! மகாபெரியவா முதலில் வேண்டாம் என்று சொல்லித் தயங்கியது இதுக்குத்தானோ! நாம்தான் தப்புப்பண்ணிட்டோமோ என்றெல்லாம் ஆளாளுக்கு பதற ஆரம்பித்தார்கள்.
இத்தனை களேபரத்துலயும் யானை மேல் இருந்த புதுப்பெரியவா கொஞ்சமும் பயப்படவில்லை. எல்லாரும் பதட்டத்தோடு அங்கேயும், இங்கேயும் ஓட, யானை மேலிருந்த ஜெயேந்திரர்,"யாரும் பயப்படவேண்டாம். யானை அமைதியாகிவிடும். எல்லாத்தையும்
மகாபெரியவா பார்த்துப்பார்!" என்று குரல் கொடுத்தார்.
அப்போதான் எல்லாருக்குமே மகாபெரியவா பற்றி ஞாபகம் வந்தது. இந்த ஊர்வலம் நடந்து கொண்டு இருந்த இடத்துக்கு கொஞ்சம் தொலைவில் நடந்து வந்து கொண்டு இருந்த ஆசார்யாகிட்டே சிலர் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னார்கள்.
சில விநாடி தலையை உயர்த்தி யோசித்தார், மகாபெரியவா.
"இந்த ஊர்ல ஒரு இடத்துல கணபதியோட ஏகாதச (பதினொரு) சுயம்பு மூர்த்தம் இருக்கே, அந்தக் கோயிலுக்கு நூத்தியெட்டு சிதறு தேங்காய் உடைக்கறதா ஒரு வேண்டுதல் மடத்துல இருக்கு. அதை இன்னும் நிறைவேத்தலை. அதைத்தான் பிள்ளையார் நினைவுபடுத்தறார் போல இருக்கு. உடனடியா அதை நிறைவேத்தறதுக்கு ஏற்பாடு பண்ணுங்கோ. அவரையே வேண்டிக்குங்கோ. ஒரு பிரச்னையும் வராது!" என்று மகாபெரியவா சொல்ல, அப்படியே வேண்டினார்கள் எல்லாரும்.
அதுவரை அல்லோலகல்லோலப்படுத்திக் கொண்டு இருந்த யானை, சேண்பாக்கம் விநாயகரை வேண்டிய மறு நிமிடமே சட்டென்று அமைதியாகி நின்றது. சுத்தி இருந்த எல்லோரும், 'ஜெயஜெய சங்கர, ஹர ஹர சங்கர'ன்னு குரல் எழுப்பினார்கள்.
தன் சீடர் யானைமேல் யாத்திரை பண்ணும்போது என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து,'பயப்படாதே!' என்று சொல்லி அனுப்பியது, மகாபெரியவாளோட தீர்க்கதரிசனம். யானை மதம் பிடித்த மாதிரி நடந்து கொண்டபோதும், ஜெயேந்திரர் கொஞ்சமும் பயப்படாமல் இருந்தது, தன் குருவான மகாபெரியவாளின் வார்த்தைகளில் அவருக்கு இருந்த நம்பிக்கைக்கும், அவரோட குருபக்திக்கும் அடையாளம்.
No comments:
Post a Comment