Sunday, August 22, 2021

MAHA PERIYAVAA STORIES

 "ஐயோ, அந்தக் குழந்தை கதி  என்ன ஆயிற்று என்று தானே நினைக்க வைக்கிறது? நம் நினைவிலிருந்து கொடிய விஷம் கொண்ட ஒரு பாம்பு என்ற எண்ணமே  அடியோடு மறைந்துவிட்டது! அன்பின் ஶக்தி இதுதானோ?."


மஹா பெரியவர் நமது தர்மமிகு சென்னையில், மைலாப்பூரில்,  ஸம்ஸ்க்ருத  கல்லூரி  வளாகத்தில் தங்கி இருந்தபோது தினமும் உபன்யாசம் பண்ணுவார்.  


அதில் ஒரு நாள் சொன்ன விஷயம்: 


''முன்னூறு வர்ஷங்களுக்கு முன்னால் இது  ஒரு  குடும்பத்திலே  நடந்த மிக மிக ஸ்வாரஸ்யமான ஒரு ஸம்பவம்.    


நான்  இதை  என்னுடைய  பால்ய வயஸில் கேட்டிருக்கேன்.    


"நா…. கொழந்தையா இருந்தப்போ, எங்களுக்கு தெரிஞ்ச ஒரு family-ல, அவங்க வீட்டுப் பொம்மனாட்டிகள் யாருமே தாழம்பூவ,   தலேல வெச்சுக்க மாட்டாங்க...!


"அந்தக் குடும்பத்ல ஏன் யாருமே தாழம்பூ வெச்சுக்கறதில்ல  ன்னு நா, ஒரு தடவை கேட்டப்போ, இந்தக் கதையை, எங்க வீட்டுப் பெரியவர்கள்ளாம் சொன்னார்கள்…! 


அது மட்டும் இல்ல, இன்னிக்கும் அந்த வம்ஸத்ல யாராத்துலயாவுது…. ஆம்பளைக் கொழந்தை பொறந்தாக்க… நாகராஜன்-னோ, நாகேஶ்வரன்-னோதான் பேர் வெப்பாளாம்!


(எங்கள் நெருங்கிய உறவில் ஒரு  குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும்  ஆனாங்க இருந்தால் நாகராஜன், நாகநாதன், நாகேசன், நாகேஸ்வரன்,  நாக பூஷணம் மாதிரிப் பெயர்கள். 


பெண்ணாக இருந்தால், நாகம்மா  நாகமணி,  நாகேஸ்வரி,  நாகு  என்று  ஏதாவது ஒரு நாகம் பெயர் இன்றும் வைக்கிறார்கள்.


எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாள்  சமஸ்க்ருத கல்லூரி  வளாகத்தில்  நல்ல கும்பலாக இருந்த பக்தர்கள் அனைவரும்  காதுகளைத் தீட்டிக் கொண்டு, நாகபூஷண, நாகஸயன, நாகரூபமான அந்த தெய்வமே சொல்லப் போகும் கதையைக் கேட்க  தயாராக  இருந்தார்கள்.!   


பேசும் தெய்வத்தின் குரல் ஸன்னமாக  மைக்கில்  ஒலித்தது எல்லார் காதுகளிலும் விழுந்தது. 


"ஒரு க்ராமத்ல, ஒரு பொண்ணுக்கு…. 'நல்லபாம்பு' ஒண்ணு, கொழந்தையா பொறந்துது! 


என்ன? ஆஸ்சர்யமா இருக்கோ?… மனுஷக் கொழந்தைக்கு பதிலா, அவ.. பெத்து எடுத்தது, ஒரு நல்லபாம்பு! 


மொதல்ல எல்லாரும்… கொஞ்சம் என்ன? ரொம்பவே பயந்தா!… அப்றம் அந்த பாம்புக் குட்டியை ஒரு கொழந்தையாட்டம் நெனச்சு, அதுக்கு "நாகராஜன்"ன்னு பேர் வெச்சா…….


…..அதுவும், கொழந்தையாட்டம்… ஆத்துல வளைய வந்துது.


'நாகராஜா!'..ன்னு கூப்ட்டா, அவன் திரும்பிப் பாப்பான்! வா-ன்னு கூப்ட்டா வருவான்.! மடில ஏறிப் படுத்துப்பான்.! 


யாரையும் பாத்து பயப்படவும் மாட்டான், யாரையும் பயமுறுத்தவும் மாட்டான்! 


மொத்தத்ல எல்லார்க்கும் ஸந்தோஷத்தைத்தான் குடுத்துண்டிருந் தான்….

நாகராஜன்… 


வெறும் பால்தான் ஸாப்டுவான். அதுனால, அவன் பால் ஸாப்டறதுக்காக, கூடத்ல [living room] சின்னதா பள்ளம் பண்ணி வெச்சிருந்தா. 


பாலைக் காய்ச்சிட்டு, நன்னா ஆறினதும், அந்தக் குழில விட்டுட்டா…… அவன் வந்து குடிச்சுட்டுப் போவான்.


தெனோமும்… காலேல பத்தரை மணிக்கு அவனோட குழில… பாலை விடறது வழக்கம்….


இப்டியா ஒரு நா….. அந்த அம்மாக்கு.. அடுத்த க்ராமத்ல ஒரு ஸொந்தக்காரா கல்யாணத்துக்கு போக வேண்டியிருந்துது. 


அவளுக்கு, தன்னோட பாம்புக் கொழந்தையையும் தங்கூட அழைச்சிண்டு போகணும்னு ரொம்ப ஆசை. ஆனா, பாம்பைத் தூக்கிண்டு போனா… ஒண்ணு,   மத்தவா எல்லோரும்  கேலி செய்வா !இல்லாட்டா.. பயப்படுவான்னு தோணித்து. 


அதுனால, ஆத்துல இருந்த ஒரு பாட்டிகிட்ட, நாகராஜனைப் பாத்துக்கொங்கோ  என்று  சொல்லிட்டு,   அந்த  அம்மா  ஆத்திலே எல்லாரும் கல்யாணத்துக்குபி புறப்பட்டுட்டா. !


அந்தப் பாட்டிக்கி… கண்ணு ஸெரியா தெரியாது! ஆகையினால, தன்னோட ஸ்நானம், ஸமையல் எல்லாத்தையுமே ரொம்ப நிதானமாத்தான் பண்ணுவா….


அதுனால அன்னிக்கும், அவளோட எல்லாக் கார்யத்தையும் முடிச்சுண்டு, நாகராஜனுக்கு பாலைக் காய்ச்சி கொண்டு வரதுக்குள்ள, மணி கிட்டத்தட்ட மத்யானம்… 1 மணி ஆய்டுத்து!


பாவம்! கொழந்தை நாகராஜன் பட்னியாக் கெடந்தான்!


வழக்கமா… பத்தரை மணிக்கி, கூடத்துக் குழில தனக்கான பாலைத் தேடித் பாத்துட்டு, பால் இல்லாததால, பஸியோட அந்தக் குழிலேயே சுருண்டு படுத்துண்டுட்டான்….கொழந்த!


இந்தப் பாட்டியோ, மத்யானம் 1 மணிக்கி பாலைக் காய்ச்சிட்டு, கண்ணு தெரியாததுனால, நாகராஜன் அந்தக் குழிக்குள்ள படுத்துண்டு இருக்கறது தெரியாம, அப்டியே சுடச்சுட பாலை அந்தக் குழிக்குள்ள விட்டுட்டா!…..


இதை இத்தனை வருஷங்கள்  கழித்து இன்று  நாம் படிக்கும் போதே, நமக்குள்  ஏதோ ஒரு வேதனை ஏற்படுகிறது அல்லவா. அது தான்  பாசம் என்பது.     


அடிவயிற்றைக்  கலக்கி, மனஸை பதைபதைக்க வைக்கிறதே  அது மஹா கொடிய விஷமுள்ள  நாகப் பாம்பு என்று  இதை படிக்கும் யாருக்காவது மனதில் தோன்றுகிறதா?   


ஐயோ, அந்தக் குழந்தை கதி  என்ன ஆயிற்று என்று தானே நினைக்க வைக்கிறது?   


நம் நினைவிலிருந்து  கொடிய விஷம் கொண்ட ஒரு பாம்பு என்ற எண்ணமே  அடியோடு மறைந்துவிட்டது! அன்பின் ஶக்தி இதுதானோ?. 


பகவான் நாம்  எவ்வளவு கொடியவர்களாக நாம் இருந்தாலும்  நம்மை எவ்வளவு ப்ரேமையுடன் பரிபாலிக்கிறான், அருள் கிறான் என்று புரிகிறதா?


பாவம்..அந்த  சின்ன  பாம்புக்   கொழந்த…. அப்டியே…. வெந்து, கருகி, அப்டியே… செத்துப் போய்ட்டான்! 


பாலுக்காக காத்துண்டிருந்த    பசியோடு இருந்த   அந்தக்  கொழந்தை நாகராஜனுக்கு, அந்தப் பாலே…..எமனா முடிஞ்சுடுத்து!


தூரத்தில்   எங்கேயோ ஒரு ஊரிலே  கல்யாணம் தடபுடலா  நடக்கிறது.  அந்தக்  கல்யாண ஆத்துல… எங்கேயோ ஒரு   மூலையிலே ராத்ரி தூங்கிண்டிருந்த அம்மாக்காரியோட  கனவிலே   அவளோட அருமைப் பிள்ளை செல்லக்குட்டி  நாகராஜன் வந்தான்.  எழுப்பினான்.

  

 "அம்மா! பாட்டி, எம்மேல கொதிக்கற பாலை ஊத்திட்டா…! நா… செத்துப் போய்ட்டேன்! என்னை தாழம்பூ காட்டுல பொதைச்சிடுங்கோ! நா… தெய்வமா இருந்து ஒங்களையெல்லாம் காப்பாத்தறேன்"ன்னு சொன்னான்.


ஐயோன்னு கத்தினா  அந்த அம்மா. பாவம்! பெத்த வயறு பத்தி எரிஞ்சுது! ஒடனேயே தன்னோட க்ராமத்துக்கு ஓடி வந்தா… அந்த   ஆசை அம்மாக்காரி !


கருகிப் பொணமா கெடந்தத் தன்னோட பாம்புக் கொழந்தையை  எடுத்து மடிலே போட்டுண்டு நெஞ்சு வெடிக்கிறமாதிரி  ஒரு பாட்டம் கதறித் தீர்த்தா.  


கண் சரியாத் தெரியாத   பாட்டியையும்  கருகிப்போன  பாம்புக் குழந்தையையும்  மாறி மாறி பாத்து  கதறி அழுதா! …..வேறே என்ன பண்ணுவா?


"ஐயோ! பாட்டி! என்ன கார்யம்   பண்ணிட்டே நீ.   என்  கொழந்தையைப் பாத்துக்கச் சொன்னா, அவனை பரலோகத்துக்கே அனுப்பிச்சுட்டியே  பாட்டி.  


உன்னை நம்பித்தானே என் செல்வத்தை உன்கிட்ட ஒப்படிச்சுட்டு இந்த மஹா பாவி போனேன்னு அலறினா…


அந்தப் பாட்டியும், பாவம்… கண்ணு தெரியாததால தான் பண்ணின தப்பை நெனச்சு, குமுறிக் குமுறி அழுதா….!


….அருமையா, செல்லமா வளர்த்த கொழந்தை நாகராஜனை, பக்கத்ல இருந்த தாழம்பூ தோட்டத்ல   அவன் கேட்டதுண்டா  மாதிரியே  பொதைச்சா…! 


அந்த ஶோகமான ஸம்பவத்தால, அந்தக் குடும்பத்ல, பரம்பரை பரம்பரையா பொம்மனாட்டிகள் யாருமே தாழம்பூவை தலைக்கு வெச்சுக்க மாட்டாளாம்…!


இந்த பரம்பரைல வந்திருக்கற ஒரு குடும்பத்தை, வடஆற்காடு மாவட்டத்ல போளூர்கிட்ட ஒரு க்ராமத்ல ஸந்திச்சிருக்கேன்…..!


அவா… எங்கிட்ட ஒரு தாம்ர [copper] ஸாஸனத்தை காட்டினா…! அது அச்சுததேவராயர் குடுத்த ஸாஸனம்! 


ராஜா…அவாளுக்கு அஞ்சு க்ராமங்களை தானமாக் குடுத்திருக்கார்.


ஆனா, ராஜப்ரதிக்ரஹ தோஷத்துக்காக, அவா, அதுலேர்ந்து 108 ப்ராஹ்மணாளுக்கு தானம் பண்ணியிருக்கா. 


அந்த ஸாஸனத்ல, பேரைப் பாத்தா… நாகராஜன், நாகேஶ்வரன்னுதான் நெறைய இருக்கு….!"

பெரியவா கதையை முடிச்சா.  


அங்கிருந்த பலர் கண்ணீரால் நிரம்பிய கண்களைத் துடைத்துக் கொண்டனர். 


அந்தக் கடும் விஷமுள்ள பாம்புக் குட்டியிடம் கூட, "தான், தன்னுடையது" என்ற அபிமானத்தை, கதை கேட்ட நாமும் வைத்துவிட்டதால், அதன் ஶோகமான முடிவு, நம்மை கலங்க அடிக்கிறது. 


இதே அபிமானத்தை அத்தனை ஜீவராஸிகளிடமும் வைத்துவிட்டால், லோகமே அன்பு மயமாக ஆகிவிடாதா!....


பெரியவாளுடைய மெட்ராஸ் விஜயத்துக்கு பின், பல வர்ஷங்களுக்குப் பிறகு, பெரியவாளின் அனுக்ரஹத் தோடு ஶ்ரீ பரணீதரன், பர்வதமலைக்கு சென்று வருவதற்காக, கடலாடியில் உள்ள மணியக்காரர் ஶ்ரீ நாகேஶ்வரன் வீட்டுக்கு சென்றார்.


அவரைத் தகுந்த துணையோடு பர்வதமலைக்கு அனுப்பி வைத்தவர் ஶ்ரீ நாகேஶ்வரன். 


400 வர்ஷங்களுக்கு முன் விஜயநகர ஸாம்ராஜ்யத்தை ஆண்ட அச்சுததேவராயர், இவருடைய முன்னோர்களுக்கு பல க்ராமங்களை மான்யமாக வழங்கியதற்கான தாமிரப்பட்டயங்களை பரணீதரனிடம் காட்டினார்.


அதோடு, தங்கள் வம்ஸத்தில்தான் ஒரு பெண்ணுக்கு, நல்லபாம்பு குட்டி பிறந்த கதையையும் சொன்னார்….!


பெரியவா சொன்னது வெறும் பொழுதுபோக்கு கதையல்ல! நிஜமாகவே நடந்த ஒரு ஸம்பவம்!


அதோடு மிகமிக முக்யமான இன்னொரு விஷயம்……


ஶ்ரீ பரணீதரன் ஸந்தித்த ஶ்ரீ நாகேஶ்வரன் வேறு யாருமில்லை….. ஸாக்ஷாத் நம்ம பெரியவாளின் பூர்வாஶ்ரம மூத்த ஸஹோதரர் ஸ்ரீ கணபதி ஶாஸ்த்ரிகளின் மாப்பிள்ளைதான்! 


அவருடைய மனைவிக்கு, நம்ம பெரியவா…. பூர்வாஶ்ரம ஸொந்த சித்தப்பா!


"பெரியவா… 1907-ல ஸ்வாமிகளா…. பட்டத்துக்கு வந்தப்போதான் நா…. பொறந்தேன்! அதுனால எங்க தாத்தா பெரியவாளின் அப்பா ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள் எனக்கு த்ருபுரஸுந்தரி-ன்னு பேர் வெச்சார்.."


ஶ்ரீ பரணீதரனுக்கு, தன் கையால் உப்புமாவை பண்ணிப் பறிமாறிக்கொண்டே, ஶ்ரீ நாகேஶ்வர ஐயரின் மனைவி சிரித்துக் கொண்டே  இதைக் கூறினாள்.


எப்பேர்ப்பட்ட பாக்யஶாலியான பரம்பரை.


மஹாபெரியவா திருவடிக்கே...


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment