Sunday, July 25, 2021

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோவில்:- திருவயிந்திரபுரம்.

 திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த பெருமை வாய்ந்த திருத்தலம்!!!.

ஹயக்ரீவர் முதன் முதலில் தோன்றிய தலம்!!.

தலதீர்த்தமான கருட தீர்த்தம் சிவப்பு நிறத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்!!!.

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோவில்:-  

திருவயிந்திரபுரம்.

மூலவர்: தெய்வநாயகன்

தாயார்: ஹேமாம்புஜவல்லி, வைகுண்ட நாயகி

உற்சவர்: தேவநாதன், திவிஷந்நாதன், வபுதநாதன், தாஸஸத்தியன், அடியார்க்கு மெய்யன்.

கோலம்: நின்ற திருக்கோலம் 

திசை: கிழக்கு 

விமானம்: சுத்தசத்வ விமானம், சந்திர விமானம் 

தீர்த்தம்: சேச தீர்த்தம், சந்திர தீர்த்தம், கருட நதி. 

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 

நாமாவளி: ஸ்ரீ வைகுண்ட நாயகீ (ஹேமாம்புஜவல்லி தாயார்) ஸமேத ஸ்ரீ தெய்வநாயகாய நமஹ

ஊர்:  திருவயிந்திரபுரம், திருஅயிந்தை

 



இலக்கியச் சான்று :-

எங்கும் நிறைந்துள்ள எம்பெருமானாகிய இறைவன் நாராயணன் பெருமைகளையும், சிறப்புகளையும் கூறும் புராணங்கள் ஏராளம். அவ்வகையில் 18 புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் ஐந்து அத்தியாயங்களும், ஸ்காந்த புராணத்தில் நான்கு அத்தியாயங்களும், ப்ரகன் நாரதீய புராணத்தில் ஐந்தோ அத்தியாயங்களும், இத்தலத்தைப் பற்றிய பெருமைகள் பேசப்படுகின்றன.

திருவயிந்திரபுரம் பெயர்க் காரணம் :-

ஒருமுறை சனகர், சநந்தனர் ஆகிய இரு முனிவர்கள் இறைவன் நாராயணன் மீது மிகுந்த பக்தி கொண்டு அவரை காணும் வழியை அறியாது தவித்தனர்.  ஒருநாள் இவர்களைக் கண்ட வியாச முனிவர் திருக்குடந்தையிலிருந்து ஆறு யோசனை தொலைவில் அமைந்துள்ள "ஔசதகிரி" என்ற மருந்து மலைக்கு அருகில் உள்ள கருட நதிக்கரையில் தவமியற்றினால் இறைவன் காட்சி தந்து அருளுவதாக ஆலோசனை கூறினார்.  

அவ்வாறே இரு முனிவர்களும் இத்தலம் வந்து பல காலங்கள் தவமியற்றினர்.  அவர்களின் தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் அற்புத வடிவினனாகக் காட்சி தந்து அருளினார்.  ஔசதகிரிபுரம் என்பதே பிற்காலத்தில் ஆயிந்திரபுரம் என்றானது.  திருமால் இங்கு அவதரித்ததனால் "திருவயிந்திரபுரம்" என்றானது.

 தேவநாதன் பெயர்க்காரணம் :-

ஒருமுறை தேவர்களைக் காக்கும் பொருட்டு திரிபுர அசுரர்களை ஒழிக்க மும்மூர்த்திகளும் ஒன்றாக இணைந்து அழித்தனர். அசுரர்களை அழித்த இறைவனை தேவர்கள் அனைவரும் வணங்க மும்மூர்த்திகளும் ஓர் மூர்த்தியாக இத்தலத்தில் காட்சி தந்து அருளியதாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.  

தேவர்களைக் காத்த நாதன் என்பதால் இத்தல இறைவனுக்கு "தேவநாதன்" என்ற திருநாமம் உண்டாயிற்று.

 குதிரை முக ஹயக்ரீவர் :-

குதிரை முகம் கொண்ட ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் முதன்முதலில் தோன்றிய தலம் இதுவாகும்.  

பிரம்மாவிற்கு ஞானத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் ஹயக்ரீவர் பற்றிய குறிப்புகள் எதுவும் ஆழ்வார் பாசுரத்தில் இடம்பெறவில்லை.  இதன் காரணமாக, பிற்காலத்தில் தான் "ஹயக்ரீவர்" தோன்றியிருக்கக் கூடும் என்பதை நம்மால் அறியமுடிகிறது.

மேலும், இத்திருத்தலத்தில் நரசிம்மர் சுவாமியும் தனியாக சன்னதி கொண்டு அருள்கிறார்.

 சேஷதீர்த்தத்தின் சிறப்பம்சம் :-

ஸ்ரீமந்நாராயணனுக்குத் தண்ணீர் தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வருமாறு கூறினார்.  அவர் தண்ணீர் எடுத்து வரத் தாமதம் ஆனதால், பெருமாளின் தாகத்தைத் தீர்க்க ஆதிசேஷன் தன் வாலால் அடித்து நதியை உண்டாக்கி பெருமாளுக்குத் தீர்த்தம் தந்தார். 

அதன் காரணமாக இங்குள்ள தீர்த்தத்திற்கு "சேஷ தீர்த்தம்" என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனைக் கிணறு ஆகும். இந்தக் கிணறானது  திருக்கோவிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. இந்த கிணற்றில் உப்பு, மிளகு, வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும்.


இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் "பிரம்மாச்சலம்" என்றும் பெயர் பெற்றது. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் இத்திருக்கோவிலில் அமைந்துள்ளது.


 கருடதீர்த்தத்தின் சிறப்பம்சம் :-


கருடாழ்வாரைப் பெருமாள் தண்ணீர் கொண்டு வரச் சொன்ன பின்பு,  கருடாழ்வார் தண்ணீர் கொண்டு வர தாமதமானதால் ஆதிசேஷன் தன் வாலால் தீர்த்தம் கொடுத்தான் பரந்தாமனுக்கு.


கருடன் கொண்டு வந்த தீர்த்தமே "கருடநதி" என்றழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது. 


தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வதால் இந்த நதியில் குளித்தால் கங்கை நதியில் குளித்த புண்ணியம் உண்டாகும்.  


ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது.


 சிறப்புகள் :-


திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் ஓத்தலத்திற்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.  தினமும் ஆறு கால பூஜைகள் வைணவ ஆகமத்தின் படி இங்கு நடக்கிறது.


பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த தலம்.


தெய்வனாயனார், ஹயக்ரீவர், நரசிம்மர் ஆகிய மும்மூர்த்திகள் காட்சி தந்து அருளும் தலம்.


இத்திருத்தலம் நடு நாட்டு திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்றது.


கலியனாலும், நிகமாந்த மகா தேசிகனாலும் பாடப்பெற்றுள்ளது.


வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். அநேக நூல்களை எழுதினார். அவர் எழுந்தருளிய இடம் "ஸ்ரீ தேசிகன் திருமாளிகை" என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது.


வேதாந்த தேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணற்றையும் இந்த ஊரில் காணலாம்.


வேதாந்த தேசிகன் பெருமாளை நாயகா, நாயகி பாவத்தில் (பெருமாள் - நாயகன் தேசிகன் - நாயகி) அனுபவித்து வழிபட்டுள்ளார்.


தன் விக்ரத்தைத் தானே செய்து கொண்ட தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது.


யுகம் கண்ட பெருமாள் என்று இத்தல பெருமாள் போற்றப்படுகின்றார்.


திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம். 


வழித்தடம்:-


கடலூர் நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்.


அருள்மிகு தெய்வ நாயகன் திருவடிகளே சரணம்.

அருள்மிகு வைகுண்ட நாயகி திருவடிகளே சரணம்.

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருஉருவ சந்நிதிக்கு முன்பு உபதேசம் கேட்ட நந்திபகவான் !

 மாயவரம் வள்ளலார் கோயில் எங்குமே காணமுடியாத ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருஉருவ சந்நிதிக்கு முன்பு உபதேசம் கேட்ட நந்திபகவான் !தரிசித்து மகிழ்வோம் !

 ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருவடிகளே போற்றி

 

அகரம், கோவிந்தவாடி என்ற தலத்தில் தட்சிணாமூர்த்திக்குத் தனிக்கோயில் உண்டு. கல்வி மேன்மை அருளும் மயிலாடுதுறை வள்ளலார் கோயில் இது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுவார். இவர் ரிஷபத்தில் அமர்ந்திருக்கிறார். சோழர்கால கல்வெட்டுகளில் ‘அறமுரைத்த பட்டர்’ என இவரைச் சிறப்பித்துள்ளனர். 


SRI DHAKSHINAMOORTHY


கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில்

 கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில்

   

தஞ்சை நகருக்குள், தெற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கலியுக வேங்கடேசப் பெருமாள் கோவில் பல வகைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. 


தஞ்சாவூரில் ஏராளமான சைவ, வைணவ ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் தஞ்சை நகருக்குள், தெற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில் பல வகைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. 


எல்லா கோவில்களிலும் மூலவர் சன்னிதிக்கு நேராகத்தான் ராஜகோபுரமும், நுழைவு வாசலும் இருக்கும். 


ஆனால் இந்த ஆலயத்தில் வடக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம் ஒன்று தான் நுழைவு வழி. பெருமாள் கோவில்களில் எல்லாம் வடக்குவாசல் என்பது வைகுண்ட ஏகாதசி அன்று ‘சொர்க்கவாசல்’ என்ற பெயரில் திறக்கப்படும். 


இங்கே வடக்கு வாசலே நுழைவு வாயிலாக இருப்பதால் ‘நித்திய சொர்க்கவாசல்’ என்று அழைக்கப்படுகிறது. 

 

உள்ளே மகா மண்டபத்துக்குள் வடக்கு கோபுர வாசல் வழியே நுழைந்தால், விநாயகர் - நாகர் சிலைகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. அதே வரிசையில் கருடாழ்வார் மேற்கு பார்த்த படியும், மூலவரை வணங்கிக் கொண்டிருக்கிறார். 


சதுர்ப்புஜ வரதராஜ பெருமாளுடன் லட்சுமி தேவி அமர்ந்திருக்க, பக்கத்தில் பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் அருள்கிறார். 


இவர் மணிகட்டிய வாலை தலைக்கு மேல் உயர்த்தியபடி, இடது கரத்தில் கடிமலர் ஏந்தி, வலக்கரத்தால் ஆசி வழங்கியபடியும் வீற்றிருக்கிறார். 


வழக்கமாக இறைவனின் கருவறை முன்பாக இருக்கும் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் இந்த ஆலயத்தில் இருக்கும் துவார பாலகர்கள் ‘தீர்த்தர் - கிஷ்கிந்தர்’ என்று அழைக்கப்படுகிறார்கள். 


அஷ்ட லட்சுமிகளின் உருவம் செதுக்கப்பட்ட மணிக் கதவினைத் தாண்டி, அர்த்த மண்டபத்துக்குள் சென்றால் கருவறைக்குள் மூலவர் கலியுக வேங்கடேசப் பெருமாள் அருள்புரிகிறார்கள். 


சங்கு, சக்கரம் ஏந்திய தடக்கையராக, வரதஹஸ்தம், கடிஹஸ்தம் உடையவராக நான்கு கரங்களுடன் புன்னகை தவழ காட்சி தருகிறார். இருபுறமும் திருமகளும், நிலமகளும் நின்றருள் செய்கின்றனர். உற்சவ மூர்த்தங்களும் அதே திருநாமத்துடன் திகழ்கிறார்கள். 


திருக்கோவிலின் ஈசான்ய மூலையில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நவக்கிரக சன்னிதி அறுங்கோண வடிவில் தனி விமானத்தின் கீழ் இருப்பது சிறப்பு. 


மேலும் நவக்கிரகங்கள் அனைத்தும் வரிசை மாறி அமைந்திருக்கின்றன. வழக்கமாக நடுவில் இருக்கும் சூரியனுக்கு பதிலாக சந்திரன் நடுவில் உள்ளது. அதற்கு வலது புறத்தில் சாயாதேவி- உஷாதேவியுடன் சூரிய பகவான் இருக்கிறார். 


சனி தெற்கு நோக்கியும், அவரது நட்புக் கிரகங்களான புதன், சுக்ரன் இருபுறமும் இருக்க நவக்கிரகங்கள் காட்சி தருகின்றன. இவை வைணவ ஆலய விதிப்படி நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


பெருமாள் சன்னிதிக்கு நேரே கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. அதை ஒட்டியுள்ள மண்டப மேற்கூரையில் பன்னிரு ராசிகளும் பதிக்கப்பட்டுள்ளன. 


கொடி மரத்தின் முன், தங்களது ராசிக்குக் கீழ் நின்று பிரார்த்தித்துக் கொண்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேல் விதானத்தில் ராமாயண, நரசிம்ம அவதாரக் காட்சிகள் சிறிய புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றன. 


கோவிலை வலம் வரும் போது பிரகாரத்தில் மூலவரின் விமானத்தின் அருகே தலவிருட்சமான வில்வமரம் உள்ளது. சிவனுக்குரிய வில்வம் தல விருட்சமாக இருப்பது ஒரு சில திருமால் கோவில்களில் மட்டுமே. அந்த வகையில் இந்த ஆலயம் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. 


வெளிச் சுற்றில் அமிர்த வெங்கடேசர் தனிச் சன்னிதியிலும், தைத்யமர்த்தினி என்ற பெயரில் காவல் தெய்வமான அஷ்டபுஜ துர்க்கை, அருகே பட்டாபிஷேக ராமர், ஆஞ்சநேயர், கஜ சம்ஹார காட்சி சிறிய சிற்பங்களாக வழிபடப்படுகின்றன. 


திருமணம் தடைப்பட்டோர், சுவாமிக்கு திருமண உற்சவம் செய்து வைத்து, தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள். நவக்கிரக தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது. 


தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இவ்வாலயம், தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். 


கலியுகத்தின் காக்கும் கடவுளான வேங்கடேசப் பெருமாளை நித்திய சொர்க்க வாசல் வழியே சென்று வழிபட்டு அனைவரும் நலம் பெறலாமே.

தெய்வங்களுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கு முக்கியத்தும் கொடுப்பது ஏன்...?

 தெய்வங்களுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கு முக்கியத்தும் கொடுப்பது ஏன்...?

           நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு(செப்பு) பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான். 

    அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது.

    அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. மேலும் அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர்.

    இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    
    ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும். குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சி காமாட்சி அம்மனின் கண்கள் பூக்களால் சூழப்பட்டிருக்கும். 15 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே......

 காஞ்சி காமாட்சி அம்மனின் கண்கள் பூக்களால் சூழப்பட்டிருக்கும்.  

15 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்களை அகற்றிவிட்டு பார்க்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்.  

அந்தக் கண்களை ஜூம் செய்து பார்த்தால் மனித கண்களைப் போலவே தெரியும்.

SRI KANCHI KAMATCHI


MAHA PERIYAVAA STORIES

 "குரு சிஷ்யனும்- பிளிறிய யானையும்"


( என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, 'பயப்படாதே!' என்று சொல்லி அனுப்பியது, மகாபெரியவாளோட தீர்க்கதரிசனம். யானை மதம் பிடித்த மாதிரி நடந்து கொண்டபோதும், ஜெயேந்திரர் கொஞ்சமும் பயப்படாமல் இருந்தது, தன் குருவான மகாபெரியவாளின் வார்த்தைகளில் அவருக்கு இருந்த நம்பிக்கைக்கும், அவரோட குருபக்திக்கும் அடையாளம்.)


குரு - சிஷ்ய பாரம்பரியம் என்பது, இந்தியாவுக்கே உரித்தான தனிச்சிறப்பு என்று சொல்லலாம். ஏன்னா, நம்ம நாட்டுல மட்டும் தான் மாதா, பிதாவுக்கு அப்புறம் தெய்வத்துக்கும் முன்னால குருவுக்கு இடம் க  கொடுக்கப்பட்டிருக்கு.


கிருஷ்ணபரமாத்வே தன் குருவான சாந்தீபினி முனிவருக்குக் கட்டுப்பட்டு நடந்தார். விஸ்வாமித்ரரோட வார்த்தைகளுக்கு ராமர் கீழ்ப்படிந்து செயல்பட்டார். இப்படி தெய்வமே அவதாரங்கள் எடுத்த காலகட்டத்திலும், குருவுக்கு மரியாதை தரணும் என்பதை உணர்த்தியுள்ளனர்.


மகாபெரியவாள்னு பரமாசார்யாளையும். புது பெரியவாள்னு ஜெயேந்திரரையும் அழைச்சு தரிசனம் பண்ணறது பக்தர்களோட வழக்கமா இருந்தது. விஜய யாத்திரை செய்யும் சமயத்துல எல்லாம் புதுப்பெரியவாளான ஜெயேந்திரரும் கூடப் போவார்.


பொதுவா எங்கே போனாலும் முடிஞ்சவரைக்கும் நடந்தேதான் செல்வதுன்னு கொள்கை உடையவர், மகாபெரியவா. ஆனா, புதுப்பெரியவரான ஜெயேந்திரருக்கு நடக்கறது பழகாத காலகட்டம் என்பதாலும் சின்ன வயசு என்பதாலும் அவர் கொஞ்சம் சங்கடப்படுவார். அந்த சமயத்துல மகாபெரியவா ரொம்ப ஆதுரமா, ஜெயேந்திரரை பல்லக்குல ஏறிக்கச் சொல்லுவார்.


குரு பரவாயில்லைனு சொன்னாலும் சிஷ்யர் ரொம்ப தயங்குவார். கடைசியில குருவோட கட்டளைபோல கண்டிச்சு சொல்வார் மகாபெரியவா. அப்புறம்தான் ஜெயேந்திரர் பல்லக்குல ஏறிப்பார்.


அப்படி ஒரு சமயம் வேலூரை அடுத்து உள்ள சேண்பாக்கம் என்கிற ஊருக்குப் பக்கதுல மகாபெரியவா யாத்திரை மேற்கொண்டு இருந்தார். அந்த சமயத்துல பலரும் அவரை யானைமேல ஏறி ஊர்வலமா வரும்படி வேண்டினார்கள். மகாபெரியவா அதுக்கு மறுப்பு சொன்னதால, புதுப்பெரியாளையாவது யானை மேல் ஏத்தி ஊர்வலமாக அழைத்து வர சம்மதிக்கும்படி கேட்டார்கள் பலரும். அதையும் வேண்டாம்னு மறுத்தார், மகாபெரியவா.


ஆனால், எல்லாரும் மறுபடியும்,மறுபடியும் கெஞ்சவே, கொஞ்ச யோசித்துவிட்டு, புதுபெரியவாளான ஜெயேந்திரரை யானையில் அமர்த்தி ஊர்வலம் நடத்த ஒப்புதல் தந்தார். அவர் ஏன் அவ்வளவு யோசிச்சார் என்பது, அந்த சமயத்துல யாருக்கும் தெரியலை. ஆனா, அதுக்கப்புறம் நடந்த சம்பவத்தின் மூலம் அது தெரிய வந்தது. 


புதுப்பெரியவா, யானைமீது ஏறுவதற்கு முன், தன் குருவான மகாபெரியவாளிடம் சென்று, அதற்கான சம்மதத்தையும், ஆசிர்வாதத்தையும் வாங்கச் சென்றார்.


"தைரியமா போ....எதுக்கும் பயப்படவேண்டாம். எல்லாம் நல்லபடியா நடக்கும்!" என்று சொல்லி ஆசிர்வாதம் பண்ணினார், மகாபெரியவா.


அதையடுத்து, அலங்கரிக்கப்பட்டிருந்த யானைமேல் ஏறி ஊர்வலம் புறப்பட்டார், ஜெயேந்திரர். இளைய ஆசார்யாளைச் சுமந்து கொண்டு சந்தோஷமாக, கம்பீரமாக நடந்துண்டிருந்த யானை, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், திடீர் என்று, மதம் பிடித்ததுபோல் சத்தமாக பிளிறத் தொடங்கியது. பாகன் எவ்வளவோ முயற்சித்தும் கட்டுப்படாமல் அங்கேயும் இங்கேயும் வேகமாக ஓடியது.


எல்லாருக்கும் ஒரே பயம். யானைமேலே இருக்கறவர் மகாபெரியவரின் சீடர். அதோடு வருங்காலத்தில் ஸ்ரீமடத்தை நிர்வகிக்கப் போறவர். அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ! மகாபெரியவா முதலில் வேண்டாம் என்று சொல்லித் தயங்கியது இதுக்குத்தானோ! நாம்தான் தப்புப்பண்ணிட்டோமோ என்றெல்லாம் ஆளாளுக்கு பதற ஆரம்பித்தார்கள்.


இத்தனை களேபரத்துலயும் யானை மேல் இருந்த புதுப்பெரியவா கொஞ்சமும்  பயப்படவில்லை. எல்லாரும் பதட்டத்தோடு அங்கேயும், இங்கேயும் ஓட, யானை மேலிருந்த ஜெயேந்திரர்,"யாரும் பயப்படவேண்டாம். யானை அமைதியாகிவிடும். எல்லாத்தையும்

மகாபெரியவா பார்த்துப்பார்!" என்று குரல் கொடுத்தார்.


அப்போதான் எல்லாருக்குமே மகாபெரியவா பற்றி ஞாபகம் வந்தது. இந்த ஊர்வலம் நடந்து கொண்டு இருந்த இடத்துக்கு கொஞ்சம் தொலைவில் நடந்து வந்து கொண்டு இருந்த ஆசார்யாகிட்டே சிலர் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னார்கள்.


சில விநாடி தலையை உயர்த்தி யோசித்தார், மகாபெரியவா.


"இந்த ஊர்ல ஒரு இடத்துல கணபதியோட ஏகாதச (பதினொரு) சுயம்பு மூர்த்தம் இருக்கே, அந்தக் கோயிலுக்கு நூத்தியெட்டு சிதறு தேங்காய் உடைக்கறதா ஒரு வேண்டுதல் மடத்துல இருக்கு. அதை இன்னும் நிறைவேத்தலை. அதைத்தான் பிள்ளையார் நினைவுபடுத்தறார் போல இருக்கு. உடனடியா அதை நிறைவேத்தறதுக்கு ஏற்பாடு பண்ணுங்கோ. அவரையே வேண்டிக்குங்கோ. ஒரு பிரச்னையும் வராது!" என்று  மகாபெரியவா சொல்ல, அப்படியே வேண்டினார்கள் எல்லாரும்.


அதுவரை அல்லோலகல்லோலப்படுத்திக் கொண்டு இருந்த யானை, சேண்பாக்கம் விநாயகரை வேண்டிய மறு நிமிடமே சட்டென்று அமைதியாகி நின்றது. சுத்தி இருந்த எல்லோரும், 'ஜெயஜெய சங்கர, ஹர ஹர சங்கர'ன்னு குரல் எழுப்பினார்கள்.


தன் சீடர் யானைமேல் யாத்திரை பண்ணும்போது என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து,'பயப்படாதே!' என்று சொல்லி அனுப்பியது, மகாபெரியவாளோட தீர்க்கதரிசனம். யானை மதம் பிடித்த மாதிரி நடந்து கொண்டபோதும், ஜெயேந்திரர் கொஞ்சமும் பயப்படாமல் இருந்தது, தன் குருவான மகாபெரியவாளின் வார்த்தைகளில் அவருக்கு இருந்த நம்பிக்கைக்கும், அவரோட குருபக்திக்கும் அடையாளம்.


தஞ்சை திருவிடைமருதூர் யோகாம்பிகா சமேத ஶ்ரீஅட்சய நாதர் ஸ்வாமி கோவில் சந்திரகிணறு ஆண்டுக்கொரு முறை பொங்கி வழியும் அற்புதக் காட்சி.

 சிவாயநம


MAHA PERIYAVAA STORIES

 "ரொம்ப சின்னவரா இருக்கார்  இவர்கிட்டே , எப்படி எங்க பிரச்னையைச் சொல்றது? அதுக்கு ஆலோசனை எப்படிக் கேட்கறது? இதெல்லாம் சரிவராதுன்னு தோணித்து. அதான் வெளியில வந்துட்டோம்!"- ஒரு தம்பதி (பெரியவா இளம் வயதில் இருக்கும்போது)


மகாபெரியவா சன்யாசம் ஏத்துண்டு ஆசார்யாளா பீடம் ஏத்துண்டு பத்துப் பன்னிரண்டு வருஷத்துக்கு அப்புறம் நடந்த சம்பவம் இது. அப்போ ஆசார்யாளுக்கு சின்ன வயசு. அவரோட  மகிமையெல்லாம் பலருக்கும் புரியாத காலகட்டம். மடத்துக்கு புதுசா வர்ற பக்தர்கள் பலர், ஆசார்யா இவ்வளவு சின்னவரா இருக்காரே இவர்கிட்டே நம்ம பிரச்னையைச் சொல்லலாமா? வேண்டாமா?ன்னு தயங்குவது உண்டு.


வேதம், புராணங்கள்ல சந்தேகம் கேட்க வர்றவாளா இருந்தா, இவருக்கு அதெல்லாம் தெரிஞ்சிருக்குமா? கேட்கலாமான்னு தயங்கி நிற்பா. சிலர் இன்னும் ஒருபடி மேலேபோய் இவர்கிட்டே எதுக்கு நம்ம குறையைச் சொல்லணம்னு அப்படியே திரும்பிப் போயிடலாம்னு நினைக்கறதும் உண்டு. ஆனா யாரா இருந்தாலும் ஒரே ஒருதரம் மகாபெரியவா முன்னால வந்து நின்னுட்டான்னா, அவாளோட எல்லா சந்தேகமும் போயிடும். உதிக்கறப்போ சூரியன் பால சூரியனாதான் இருக்கும். அது உச்சியில ஏறினத்துக்கு அப்புறம்தான் அதோட உக்ரம் தெரியும்கற மாதிரி, தொலைவுல இருந்து பார்க்கறச்சே, பாலகனா தெரியற பெரியவா முன்னால வந்து நின்னாதான், அவர் பாலகன் இல்லை, பரமேஸ்வரன்னே புரியும்.


அந்த மாதிரியான காலகட்டத்துல ஒருநாள், மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காக நிறைய பேர் மடத்துக்கு வந்திருந்தா. அவாள்ல, வெளியூர்லேர்ந்து காஞ்சிபுரத்துக்கு க்ஷேத்ராடனம் வந்த பக்தர் கூட்டம் ஒண்ணும் இருந்தது. காமாட்சியை தரிசனம் பண்ண  வந்த அவாள்லாம். இங்கே ஆசார்யா இருக்கார்னு தெரிஞ்சதும் அவரை தரிசனம் செய்ய வந்திருந்தா!


வந்தவாள்ல பலர் ஆசார்யாளை தரிசனம் பண்ணறது இதுதான் முதல் தரம்.சிலர் ஏற்கனவே வந்தவா. ஏற்கனவே வந்திருந்தவா, ஆசார்யாளோட பெருமையை வராதவாளுக்கு சொல்லிண்டு இருந்தா. அதையெல்லாம் கேட்டுண்டு, எல்லாரும் வரிசையாக வந்து மகா பெரியவாளை நமஸ்காரம் செஞ்சு அவர்கிட்டே ஆசிர்வாதம் வாங்கிண்டு புறப்பட்டுண்டு இருந்தா.


அப்போ அந்தக் கூட்டத்தோட வந்திருந்த ஒரு தம்பதி மட்டும் வரிசைலேர்ந்து பாதியிலயே

திரும்பி வெளியில போய் நின்னுட்டா.


அவாகூட வந்தவா எல்லாரும் மகாபெரியவாளை தரிசனம் பண்ணி பிரசாதம் வாங்கிண்டு  வெளியில வந்ததும், 'ஆசார்யாளை நீங்க ஏன் தரிசனம் பண்ண வரலை?'ன்னு பலரும் அவாகிட்டே கேட்டா.


"இங்கே மடத்துல ஆசார்யா இருக்கார்னதும் அவர்கிட்டே எங்க பிரச்னை ஒண்ணைச் சொல்லி அதுக்குப்  பரிகாரம் ஏதானும் இருக்கான்னு கேட்கலாம்னு நினைச்சுண்டுதான் வந்தோம். இங்கே வந்து பார்த்தா, அவர் ரொம்ப சின்னவரா இருக்கார். இவர்கிட்டே,எப்படி எங்க பிரச்னையைச் சொல்றது? அதுக்கு ஆலோசனை எப்படிக் கேட்கறது? இதெல்லாம் சரிவராதுன்னு தோணித்து. அதான் வெளியில வந்துட்டோம்!" அவா சொல்லிண்டு இருந்த  சமயத்துலயே ஆசார்யாளோட அணுக்கத் தொண்டர் அங்கே வந்தார். 


"இங்கே தீராத வயத்துவலியால தவிக்கற ஒரு மாமி வந்திருக்காளாமே, அவா யாரு? அவாளை  ஆசார்யா அழைச்சுண்டு வரச் சொன்னார்" அப்படின்னார்.


அதைக் கேட்டதுதான் தாமதம், அப்படியே பதறிப்போனா அந்த தம்பதி.


அந்த மாமி கொஞ்சம் தயக்கத்தோட 'எனக்குதான் வயத்துவலி.!' என்று வார்த்தைகளை முடிக்காமல் இழுக்க அந்த தொண்டர் அவசரமா அவாளை கூட்டிண்டு போனார்.


மகாபெரியவா முன்னாலபோய் நின்னா, அந்தத் தம்பதி. இவர் எப்படி என்னோட வயத்துவலியைத் தெரிஞ்சுண்டார்ங்கற மாதிரியான ஆச்சரியம் அந்த மாமி முகத்துல பட்டவர்த்தனமா தெரிஞ்சுது.


"என்ன அடிவயத்தைப் பிசையறாப்புல வலிக்கறதா? டாக்டர்களெல்லாம் அல்சர் ரொம்ப அதிகமாயிடுத்து, தீவிரமா சிகிச்சை பண்ணியாகணும்ணு சொல்றாளா?" அவாகிட்டே கேட்டுண்டே சாத்துக்குடி பழம் ஒண்ணை எடுத்து கையில வைச்சு உருட்டிண்டு இருந்தார் மகாபெரியவா.


"ஆமாம் நேரத்துக்கு சாப்பிடாததால வயத்துல அமிலம் அரிச்சு புண்ணாயிடுத்தாம் . குணப்படுத்தறது ரொம்ப கஷ்டம்னு சொல்றா டாக்டர்கள்.! அடிக்கடி தாங்க முடியாம வலிக்கிறது" சொன்ன அந்த மாமியோட கண்ணுல இருந்து வலி தாங்காம ஜலம் வழியத் தொடங்கித்து.


தான் கையில் வைச்சு உருட்டிண்டு இருந்த சாத்துக்குடியை சட்டுனு அந்த மாமியோட ஆத்துக்காரர்கிட்டே  தூக்கிப் போட்டார் மகாபெரியவா."அதை உடனே உரிச்சுக் குடு..!" கட்டளை மாதிரி சொன்னார்.


ஏதோ ஒரு உத்வேகத்துல அவரும் அந்தப் பழத்தை உரிச்சு ஆத்துக்காரிக்குக் குடுத்தார். தாங்க முடியாத வயித்துவலியில தவிச்சுண்டு இருந்த அந்த மாமி, ஒவ்வொரு சுளையா வாங்கி ஏதோ குழந்தை சாப்பிடறாப்புல சாப்பிட்டு முடிச்சா. இத்தனையும் ஒரு சில நிமிடத்துல நடந்துடுத்து.


அதுக்கு அப்புறம் நடந்துதான் பேரதிசயம்! அதுவரைக்கும் வலியால துடிச்சுண்டு இருந்த அந்த மாமி, இதுவரைக்கும் வலிச்சதெல்லாம் கனவா? நனவா?ங்கற மாதிரி ரொம்பவே சந்தோஷமா பேச ஆரம்பிச்சுட்டா.


"இதுவரைக்கும் என்னை வாட்டிண்டு இருந்த வலி போன இடம் தெரியலை. சாதாரணமா இந்த  வலி வந்துட்டா ரெண்டு மூணு மணி நேரமாவது என்னை வாட்டி வதைச்சுடும். மருந்து எடுத்துண்டாலும் அது வேலை செய்யறவரைக்கும் சகிச்சுண்டு இருக்கணும். ஆனா இப்போ ரொம்பவே ஆச்சரியமா எனக்கு வலி போன இடம் தெரியலை. ஆசார்யா தந்த பழத்தோட முதல் சுளையைத் தின்னதுமே என்னோட வலி குறைய ஆரம்பிச்சுடுத்து. முழுசா தின்னு முடிச்சதும் எனக்கா வலிச்சுதுங்கறமாதிரி பூரணமா நிவர்த்தி ஆயிடுத்து!" வார்த்தைகள் நெகிழ, கண்ணு கசிய சொன்னார் அந்த மாமி. நின்னுண்ட இருந்த அவர் அகத்துக்காரர் மாமி சொல்லி முடிச்ச மறுகணம் அப்படியே சாஷ்டாங்கமாக ஆசார்யா திருவடியிலே விழுந்தார்.


"எங்களை மன்னிச்சுடுங்கோ! இவ்வளவு சின்னவரா இருக்கேளேன்னு நாங்க சந்தேகப்பட்டோம். ஆனா, நாங்க சொல்லாமலே என் ஆத்துக்காரியோட பிரச்னையைத் தெரிஞ்சுண்டு, அது போகறதுக்கு மருந்தாட்டம் ஒரு கனியைப் பிரசாதமாவும் தந்து எங்க கண்ணைத் திறந்துட்டேள்" தழுதழுப்பா சொன்னார்.


மௌனமா ஒரு புன்னகையை மட்டும் பதிலாக்கி அந்தப் பெண்மணிகிட்டே கொஞ்சம் குங்குமப் பிரசாதத்தைக் குடுத்து ஆசிர்வதிச்சார் மகாபெரியவா.


அந்தப் பெண்மணிக்கு தீராத வயத்துவலின்னு ஆசார்யாளுக்கு  எப்படித் தெரிஞ்சுதுங்கறது அதிசயம்னா, அதைவிட பேரதிசயம் ஒரே ஒரு சாத்துக்குடியைத் தந்து அவாளோட வியாதியைப் போக்கினது. இதெல்லாம் சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனோட  அம்சமான மகாபெரியவாளோட லீலை இல்லாம வேறு என்ன?. 


MAHA PERIYAVAA STORIES

 "நல்லெண்ணெய், வெளக்கெண்ணெய் வேப்பெண்ணெய்" 

''எல்லா கிரஹஸ்தாளும் வீடுகள்ல மூணு தினுசு எண்ணெயை எப்பவும் வைச்சு இருக்கணும்."

மகாபெரியவா மடத்துல இருந்த சமயம் அது. 

எத்தனை

எத்தனையோ பேர் அவரைத் தரிசிக்க தினமும் வருவார்கள்.


வயசானவர்கள், இளம் வயசுக்காரர்கள், சின்னக் குழந்தைகள்

இப்படியெல்லாம் எந்த வித்தியாசமும் இல்லாம, ஆண்கள்

பெரியவருக்கு  நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க

நமஸ்காரமும் பண்ணுவார்கள்.


(இரண்டு முழங்கால்கள், இரண்டு

முழங்கைகள், நெற்றித் தரையில படற மாதிரி முழங்காலை

மடக்கிச் செய்யறது பஞ்சாங்க நமஸ்காரம்).


(நெடுஞ்சாண்கிடையாக அப்படியே விழுந்து செய்யறது 

சாஷ்டாங்க நமஸ்காரம்.)



தன்னை மத்தவர்கள் நமஸ்காரம் செய்யறச்சே எல்லாம்

நாராயணா, நாராயணான்னு சொல்வார் ஆசார்யர். 


அதாவது

நமஸ்காரம் தனக்கு இல்லை. பகவானுக்குன்னு அர்த்தம்.


அந்தமாதிரி ஒரு சமயம் நடுத்தர வயசுப் பக்தர் ஒருத்தர்,

மகாபெரியவாளுக்கு நமஸ்காரம் செஞ்சுட்டு ரொம்ப

கஷ்டப்பட்டு முழங்கால்களை பிடிச்சுண்டு எழுந்திருந்தார்.


மகாபெரியவா அவரைக் கொஞ்சம் உத்துப் பார்த்தார்.


அந்தப் பார்வையோட அர்த்தத்தைப் புரிஞ்சுண்ட அந்த

பக்தர்,"முதுகுத் தண்டு பயங்கரமா வலிக்கிறது பெரியவா.


அலோபதிலேர்ந்து ஹோமியோபதி வரைக்கும் 

பார்த்துட்டேன். ஒண்ணும் கேட்கலை! குனிஞ்சு நிமிர்ந்தா

வலீல உசுரு போகறது!" அப்படின்னு சொன்னார்.


"தைல ஸ்நானம் பண்ணற (எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கற)

பழக்கம் இருக்கோ நோக்கு?" கேட்டார், மகாபெரியவா.


பெரியவா அப்படிக் கேட்டதும் கொஞ்சம் நெளிஞ்ச அவர்,

"இல்லை பெரியவா...முந்தியெல்லாம் பண்ணிண்டு 

இருந்தேன். இப்போ வேலை, வர்த்தகம் அது இதுன்னு

தினமும் இருக்கற அவசரத்துல வெறும் ஜலத்தைத் தலைல

விட்டுண்டு ஓடவேண்டியதா இருக்கு..!" சங்கடமாகச் சொன்னார்.


"ம்..எல்லாம் அவசர யுகமாயிடுத்து. செக்குல ஆட்டின

நல்லெண்ணெயை சரீரம் முழுக்க தேய்ச்சுண்டு நன்னா

ஊறினதும் அரப்புப் பொடி தேய்ச்சுக் குளிச்ச காலத்துல

யாருக்கும் இப்படி முதுகு வலி, மூட்டிவலியெல்லாம் வரலை..

இப்போ அவா அவா தேகத்தை கவனிச்சுக்கறதுக்குக்கூட நேரம்

இல்லைங்கறா..!"சொன்ன பரமாசார்யா மறுபடியும் தொடர்ந்தார்


"பழசை மறக்கக்கூடாதுன்னுட்டு, சனிநீராடுன்னு பாடத்துலயே

வைச்சு சொல்லிக் குடுத்தா. ஆனா படிச்சதையெல்லாம் யாரு

இப்ப  ஃபாலோ பண்றா? 


"நீ ஒண்ணு பண்ணு. இனிமேலாவது

வாரத்துக்கு ரெண்டு நாள் தைல ஸ்நானம் பண்ணு. மிளகு

ரசத்தையும், பிபெரண்டைத் தொகையலையும் அடிக்கடி

சேர்த்துக்கோ!"


பெரியவா சொல்ல, "அப்படியே செய்யறேன் பெரியவா..!"

பணிவாகச் சொல்லிட்டு பிரசாதம் வாங்கிக்கறதுக்காக கையை

நீட்டினார் அந்த பக்தர்.


"கொஞ்சம் இரு...இந்த சமயத்துல எல்லாருக்குமே பொதுவான

இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். அதையும் 

கேட்டுட்டுப் போ..!" 


பெரியவா சொல்ல, அவர் என்ன சொல்லப்

போறார்ங்கறதைக் கேட்க எல்லாரும் ஆர்வத்தோடு தயாரானா.


"எல்லா கிரஹஸ்தாளும் வீடுகள்ல மூணு தினுசு எண்ணெயை

எப்பவும் வைச்சு இருக்கணும்." 


"சுவாமிக்கு வெளக்கு ஏத்தவும்,

சமையல் பண்ணவும் நல்லெண்ணெய். இதுல சிலர் 

சமைக்கறதுக்கு நல்ல எண்ணெயும், சுவாமிக்கு கொஞ்சம் 

மட்டரகத்தையும் வாங்கறதா கேள்வி. அது தப்பானது. 


எப்பவுமே பகவானுக்கு ஒசத்தியானதைத்தான் தரணும்.


அடுத்தது வெளக்கெண்ணெய். பச்சைக் குழந்தையோ,

பெரியவாளோ உஷ்ணத்தால் வயத்துவலி வந்துட்டா, இது

கண்கண்ட மருந்து. 


நாபியைச் சுத்தி தடவிண்டா போதும்.

சட்டுன்னு குணம் தெரியும். அந்தக் காலத்துல ரொம்ப

ப்யூரான வெளக்கெண்ணெயை உள்ளுக்கே மருந்தா குடுப்பா.

வயத்தை சுத்தப்படுத்திடும்.


மூணாவது, வேப்பெண்ணெய். இதை யாரும் இப்போ

வாங்கறமாதிரியே தெரியலை. ஆனா இது மூட்டுவலிக்கு

சரியான ஔஷதம். வயசானவா தெனமும் இதை கை,கால்,

மூட்டுல தடவிண்டா, முட்டிவலி சுத்தமா வரவே வராது.


இன்னொரு முக்கியமான விஷயம். எண் ஜாண் ஒடம்புக்கு

சிரஸே ப்ரதானம்னு சொல்லுவா. ஆனா அந்த சிரஸுலேர்ந்து

தேகம் முழுக்க சௌகர்யமா இருக்கணும்னா, அதுக்கு

பாதத்தை பத்திரமா பார்த்துக்கறது ரொம்ப அவஸ்யம்.


ஸ்நானம் பண்ணி முடிச்சதும், தலையைத் தொடைச்சுக்கறது

மாதிரியே பாதத்தையும் அக்கறையா தொடைச்சுக்கணும்.


தெனோம் ராத்திரி தூங்கறதுக்கு முன்னால காலை நன்னா

அலம்பி, பாதத்தை ஈரம் போகத் தொடைச்சுக்கணும்.


பாதத்தை பத்திரமா பார்த்துண்டாலே தேகம் சீர்கெடாம

பத்திரமா இருக்கும்.


அந்தக் காலத்துல, வெளீல போய்ட்டு ஆத்துக்குத் திரும்பி

வந்தா, காலை நன்னா அலம்பிட்டு, வாய் கொப்பளிச்சுட்டுத்தான் உள்ளேயே நொழைவா! 


வெளி மனுஷா 

வந்தாலும் வாசல்ல கால் அலம்பச் சொல்லுவா. ஆனா

இன்னிக்கு வீட்டுக்கு உள்ளறை வரைக்கும் செருப்புக்காலோட

நடமாட ஆரம்பிச்சுட்டா.


அப்புறம் நோய் எப்படி வராம இருக்கும் ?! இதையெல்லாம்

சொன்னாலும் இப்போதைக்குக் கேட்டுக்கறவா, அப்புறம்

அதைக் கடைப்பிடிப்பாங்கறதுக்கு நிச்சயம் இல்லை. 


ஏதோ

சரீரத்துமேல அக்கறை உள்ளவாளுக்கு உப்யோகப்படுமேன்னு

சொன்னேன். புரிஞ்சுண்டா சரி!" சொல்லி முடித்த ஆசார்யர்,

பக்தருக்குப் பிரசாதம் குடுத்து அனுப்பினார்.


இது நடந்து ஒரு மாசம் இருக்கும். மறுபடியும் 

மகாபெரியவாளை தரிசிக்க வந்திருந்தார் அந்த பக்தர். 

இந்த முறை நெடுஞ்சாண்கிடையா ஆசார்யா திருவடியில

விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு, அப்படியே எழுந்து நின்னார்.


அந்த வேகமே அவரோட முதுகுவலி முழுசா

குணமாயிடுத்துங்கறதைக் காட்டியது.


மஹாபெரியவா திருவடிக்கே...

MAHA PERIYAVAA STORIES

 "திருவிசநல்லூர் மடத்து கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்துக்கு, எப்போதும் போல இந்த வருஷமும் கங்கை வந்தாளா ?"

1991ம் வருஷம். 


திருவிசநல்லூர் ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் நடைபெறும் கார்த்திகை அமாவாஸ்யை கங்காவதரண உத்ஸவம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி.


சில வருஷங்களுக்கு முன்னால் தஞ்சாவூர் ப்ரதேசத்தில் ஐப்பசியில் பருவ மழை பெய்யாது பொய்த்தது.. மேட்டூர் ஜலமும் வரவில்லை. காவேரியில் சுத்தமாக வரத்து இல்லை. 



ஸ்ரீஐயாவாள் மடத்தின் பின்புறம் கங்கை ஆவிர்பவிக்கும் கிணறும் வறண்டு போனது. 


ஸ்ரீஐயாவாள் மடத்தின் கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவம் அந்த வருஷம் நடக்குமா என்ற பயம் வந்து விட்டது. 


உத்ஸவ பத்ரிகையை எடுத்துக் கொண்டு போய் ஸ்ரீபெரிவாளின் ஸன்னதியில் ஸமர்ப்பித்தோம். மெதுவாக அங்குள்ள பிரச்னை பற்றிச் சொன்னோம். 


அப்படியே சில நிமிஷங்கள் கழிந்தன. 


ஸ்ரீபெரியவா சற்றுநேரம் மோனமாக இருந்து விட்டுச் சைகையால் அருகிலிருந்த ஸ்ரீமடத்து அன்பரை அழைத்து ஒரு பெரிய செப்புக் குடத்தில் கங்கா ஜலத்தை நிரப்பி வரச் சொன்னார்கள். 


அங்கு கங்கா ஜலம் இருப்பது பற்றி எங்களுக்கு ஏதும் அதற்கு முன்னால் தெரியாது. அந்த அன்பரும் அவ்வண்ணமே கங்கா ஜலம் நிரம்பிய ஒரு பெரிய செப்புக் குடத்தைத் தூக்கி வந்து ஸ்ரீபெரிவாளின் திருமுன்னர்க் கொண்டு வைத்தார். 


உடனே ஸ்ரீபெரியவா எங்களிடம் “இந்தக் குடத்தில் இருக்கும் கங்கா ஜலத்தை ஜாக்ரதையாகத் திருவிசநல்லூருக்குக் கொண்டு போய் வையுங்கள். 


மழை வராவிட்டால் ஸ்ரீஐயாவாள் மடத்தில் இருக்கும் கங்கை ஆவிர்பவிக்கும் கிணற்றில் கார்த்திகை அமாவாஸ்யைக்கு முன்னால் சேர்த்து விடுங்கள் .. ! ” 


என்று அபயம் காட்டி எங்களுக்கு ப்ரஸாதம் அளித்து அனுப்பி வைத்தார்கள். 


திருவிசநல்லூருக்குத்  திரும்பினோம். 


ஸ்ரீபெரிவாளின் வாக்கு என்றும் பொய்க்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தபோதிலும் அப்போதிருந்த வறட்சியான கால நிலை எங்களை ஸஞ்சலத்தில் ஆழ்த்தியபடியே இருந்தது. 


உத்ஸவத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையிலும் மழை பெய்யவே இல்லை. 


காவேரியில் ப்ரவாஹமேயில்லை. வயல் வெளிகளும் காய்ந்து வெடித்துப் போயிருந்தன.


ஸ்ரீஐயாவாள் மடத்துக் கிணறும் சுத்தமாகக் காய்ந்துபோயிருந்தது. உத்ஸவ கமிட்டி மீட்டிங் போட்டோம். 


என்ன செய்வது என்று கலந்து பேச ஆரம்பித்தோம். எல்லோரும் ஒருமித்ததொரு முடிவுக்கு வந்தோம்.


“ஸ்ரீபெரியவா அவர்களின் உத்தரவு ப்ரகாரம் செப்புக் குடத்திலிருந்த கங்கா ஜலத்தைக் கிணற்றில் ஊற்றிவிடுவோம். அப்புறமாக அதைக் கொஞ்சமாக எடுத்து அனைவருக்கும் ப்ரோக்ஷணம் செய்து விட வேண்டியதுதான் என்று தீர்மானித்து அவ்விதமே கங்கா ஜலத்தைக் கிணற்றில் சேர்த்தோம். 


அடுத்து நடந்ததுதான் ஆச்சர்யம் … 


கார்த்திகை அமாவாஸ்யை தினத்தில் ஸ்ரீஐயாவாள் அவர்களின் ஸ்தோத்ரத்தைக் கேட்டவுடன் கங்கை அவரது இல்லத்தின் பின்புறமிருந்த கிணற்றில் ஆவிர்பவித்துப் பெருகி ஊரெங்கும் காணும்படி வழிந்தோடினாள் என்பது சரித்ரம். 


அதை மீண்டும் காட்டும்படியாக கார்த்திகை அமாவாஸ்யைக்கு முதல் நாள் செப்புக் குடத்திலிருந்த ஸ்ரீபெரியவா அனுக்ரஹித்திருந்த கங்கையைக் கிணற்றில் சேர்த்த சில மணி நேரத்தில் தொடங்கியது பெரும் மழை. 


விடிய விடிய விடாது பெய்து ஊரையே வெள்ளத்தில் மிதக்க வைத்தது. ஸ்ரீஐயாவாள் அவர்கள் கங்கையை வரவழைத்தது போல் மடத்திலிருந்த கிணற்றில் ஜலம் பெருகியது. 


அமாவாஸ்யை அன்று விடியற்காலை கிணற்றின் கைப்பிடிச் சுவற்றிற்கு மேல் ஜலம் பெருகி வழிந்தோடியதைக் கண்டோர் அதிசயித்தனர். 


அதேவிதமாகக் காவேரியிலும் கால் வைக்கக்கூட முடியாத அளவிற்கு ப்ரவாஹம் மிக அதிகமாக இருந்தது. 


பல நூறு பக்த ஜனங்கள் அன்று மடத்திலிருந்த கிணற்றில் ஸ்நானம் செய்தும் வழிபட்டனர். 


இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஸ்ரீபெரிவாளைத் தரிசிக்கச் சென்றோம். திருவிசநல்லூர் மடத்தார் வந்திருக்கும் விபரம் அவர்கள் ஸந்நிதானத்தில் தெரிவிக்கப்பட்டது. 


உடனே ஸ்ரீபெரியவா அவர்கள் புன்முறுவலுடன் "திருவிசநல்லூர் மடத்து கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்துக்கு, எப்போதும் போல இந்த வருஷமும் கங்கை வந்தாளா? என்று எங்களை பார்த்துக் கேட்டதை என்னிக்கும் மறக்க முடியாது!” என்று முடித்தார் ராவ்ஜீ. 


மஹாபெரியவா திருவடிக்கே


Saturday, July 24, 2021

MAHA PERIYAVAA STORIES

 "என்ன உன் தாயாரோட ஆசை பூர்த்தி ஆச்சா!?" 


மகாபெரியவாளோட பரமபக்தர் ஒருத்தர் இருந்தார். வைஷ்ணவர் தான்னாலும் பெரியவாளும், பெருமாளும் ஒருத்தார்ன்கற அளவுக்கு பக்தி உள்ளவர்.


ஒரு சமயம் காசியாத்திரை பண்ணிட்டு அங்கேர்ந்து கங்காஜலத்தை எடுத்துண்டு வந்து தன்னோட அம்மாகிட்டே குடுத்தார். அவர், அவரோட தாயாரும், ஆசார்யாமேல ரொம்ப பக்தி உள்ளவாதான். பிள்ளை குடுத்த கங்காஜல செம்பை வாங்கி கண்ணுல ஒத்திண்டா. "இந்த கங்கா ஜலத்தை மகாபெரியவாகிட்டே குடு.  அதை அவர் அமாவாசை ஸ்நானம் பண்றச்சே உபயோகப்படுத்திக்கணும்னு வேண்டிக்கோ. எனக்கு அதான் பரம திருப்தி!"ன்னு சொன்னா.


'ஆகட்டும்'னு சொன்ன பக்தர் கொஞ்ச நாள் கழிச்சு, பெரியவாளை தரிசிக்க புறப்பட்டார். அப்போ, கர்நாடகாவுல ஹம்பியில் உள்ள ஒரு சின்னக் கோயில்ல

தங்கியிருந்தார் பெரியவா.  தற்செயலா அன்னிக்கு அமாவாசை அமைஞ்சிருந்தது.


காசிச் செம்பை மகாபெரியவா முன்னால வச்சுட்டு நமஸ்காரம் செஞ்சார் பக்தர். "பெரியவா இந்த

கங்காஜலத்தை..." முடிக்கறதுக்குள்ளே கோயில் வாசல்ல ஒரே பரபரப்பாச்சு.


மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காக,

ஆந்திராவோட அப்போதைய முதல்வர் சென்னா ரெட்டி வந்திருந்தார். உடனே பாதுகாப்பு அது இதுன்னு போலீஸ்காரர் சுத்தி வந்ததுலதான் பரபரப்பாகியிருந்தது.


"என்ன, காசி யாத்ரை நன்னா முடிஞ்சுதா!" பேசத் தயங்கி நிறுத்தியிருந்த பக்தர்கிட்டே பெரியவாளே ஆரம்பிச்சார்.


"உங்க ஆசிர்வாதத்துல க்ஷேமமா போய்ட்டு வந்தேன். சுவாமி தரிசனம் எல்லாம் நன்னா ஆச்சு. அங்கேர்ந்து தான் கங்கா ஜலம்....." இந்த முறையும் அவர் சொல்லி முடிக்கறதுக்குள்ளே மறுபடியும் சலசலப்பு எழுந்தது.


பெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காக 

இங்கிலாந்துலேர்ந்து இளவரசர் சார்லஸ் அங்கே வந்திருந்தார். அவரோட நூறுபேர் செக்யூரிட்டி

காரணங்களுக்காக வந்திருந்தா. இங்கே உள்ளூர் போலீசும்

அவாளுக்கு வேண்டியதை செஞ்சு தர்றதுக்காக மத்தவாளை ஒதுங்கச் சொல்லிண்டு இருந்தா. அந்த சலசலப்புதான் அது.


எல்லாருமா சேர்ந்து, வந்த முக்கியஸ்தர்களை 

மகாபெரியவா முன்னால அழைச்சுண்டு வந்தது பக்தர்  கொண்டு வந்த காசிச் செம்பு ஏதோ ஒரு தட்டோட எங்கேயோ 

ஒரு மூலைக்கு போய்டுத்து. அந்த பக்தரும் சொல்ல வந்ததை  முழுசா சொல்றதுக்கு முன்னால அங்கேர்ந்து நகர்ந்துக்க

வேண்டியதாயிடுத்து.


வந்தவா எல்லாரும் கொண்டுவந்த பழங்கள்,பூக்கள்

மாலைகள்னு எல்லாமும் பெரியவா முன்னால நிரம்பி

வழிஞ்சுது.


வந்தவா தரிசனம் பண்ணிட்டு கிளம்பறச்சே கிட்டத்தட்ட மூணு மணியாகிடுத்து. புஷ்பம், பழங்கள் எல்லாத்தையும்

உள்ளே எடுத்து வைக்க ஆரம்பிச்சா மடத்து சிப்பந்திகள்.


அப்போ தனக்குப் பக்கத்துல இருந்த மூங்கில் தட்டை

எடுக்க வந்தவர்கிட்டே ஏதோ கண் ஜாடை காட்டினார் பெரியவா. அதைப் புரிஞ்சுண்ட அந்த சிஷ்யர் அந்தத் தட்டுல பூக்குவியலுக்கு உள்ளே மறைஞ்சு இருந்த  காசிச்செம்பை எடுத்து பெரியவா முன்னால வைச்சார்.


அதைப் பார்த்ததும் அந்த பக்தருக்கு ஆனந்தத்துல நெஞ்சு

விம்மித்து. இத்தனை பரபரப்புலயும் பெரியவா இதை

ஞாபகம் வைச்சுண்டு இருக்காரேன்னு சந்தோஷத்துல

அவரோட கண்ணுலேர்ந்து ஜலம் பெருகி வழிஞ்சு து. அதைவிட அதிசயம் அடுத்து நடந்தது.


பக்கத்துல இருந்த தண்டத்தை எடுத்த பெரியவா, சட்டுன்னு 

அதை ஊன்றிண்டு எழுந்தார். பக்கத்திலிருந்த பாரிஷதரிடம்,

கண்ஜாடை காட்டினார். அவர், அங்கிருந்த கங்கைச் செம்பை 

எடுத்துக்கொண்டு பெரியவாளுடன் நடந்தார்.


"பெரியவா ஸ்நானம் பண்ணப் போறா.. இன்ன்னிக்கு சரியா மூணு இருபதுக்குதான் அமாவாசை

பொறக்கறது. கரெக்டா அதே நேரத்துக்கு ஸ்நானம் பண்ண

துங்கபத்ரைக்கு வந்துட்டார். இத்தனை பெரிய மனுஷா

தரிசனத்துக்கு வந்திருக்கறச்சே கூட சாஸ்திரத்தை விட்டுக்

குடுக்காம சரியான நேரத்துல நதிக்கரைக்கு வந்துட்டார்!"

யாரோ சொல்லிண்டது அந்த பக்தர் காதுல விழுந்தது.


ஆனா, தன்னோட ஆத்மார்த்தமான வேண்டுதலும்,தன் தாயாரோட மானசீகமான ஆசையையும் நிறைவேத்தறதுக்காகவே பெரியவா அங்கே ஸ்நானத்துக்கு வந்திருக்கார்னே தோணித்து அவருக்கு.


அது ஆமான்னு சொல்லாம சொல்றமாதிரி, துங்கபத்ராவுல

இறங்கி ரெண்டுதரம் முங்கி ஸ்நானம் பண்ணின பெரியவா. அடுத்ததா ஜாடை காட்ட, பக்கத்துல இருந்த

பாரிஷதர் காசிச் செம்பை திறந்து அதுல இருந்த கங்கா

ஜலத்தை அப்படியே மகாபெரியவா சிரசுல கவிழ்த்தார்.


பரமேஸ்வரன் ஜடாபாரத்துலேர்ந்து கங்காதேவி பெருகி வழியறாப்புல பெரியவா சிரசைத் தொட்ட சிலிர்ப்போட பெருகி வழிஞ்சு துங்கபத்ராவுல கலந்து ஆனந்தமா ஓடினா கங்காதேவி.


கரை ஏறின பெரியவா அந்த பக்தரை ஒரே ஒரு விநாடி

திரும்பிப் பார்த்தார். "என்ன உன் தாயாரோட ஆசை பூர்த்தி

ஆச்சா!?" அப்படின்னு கேட்காம கேட்ட அந்தப் பார்வையோட

அர்த்தத்தைப் புரிஞ்சுண்ட பக்தர் பரம சந்தோஷமா

அங்கேர்ந்து புறப்பட்டார்.



MAHA PERIYAVAA STORIES

 "உன் ஊருக்கு அந்தப் பேர் எப்படி வந்தது தெரியுமா"



தன்னை வணங்க வந்த ஒருவரை ஊர்,பேர் விசாரித்தார் பெரியவர். 


ஈரோட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது.

 

"உன் ஊருக்கு அந்தப் பேர் எப்படி வந்தது தெரியுமா" என்றார்.


அவருக்குத் தெரியவில்லை.


 "சரி உங்க ஊர் சுவாமி பேரென்ன?" என்றார்.


 "ஏதோ வித்தியாசமாக இருக்கும் மறந்து போச்சு.."என்றார்.


"ஆர்த்ர கபாலீசுவரர்னு பேரோ?" என்றார் பெரியவா.


"ஆமாம்..ஆமாம்!" என்று அவர் சொல்லவே,

 

'"அதற்குத்தான் ஈரோடு'னு அர்த்தம். '


ஆர்த்ரம்னா ஈரம்; கபாலம்னா மண்டையோடு


ஈர ஓட்டைக் கையிலே வைத்திருப்பதால் [ஈரோடு} 

சுவாமிக்கு அந்தப் பெயர்.


பிரும்மாவோட அஞ்சு தலைலே ஒரு  தலையை

சிவபெருமான் திருகி எடுத்ததால், பிரம்மஹத்தி

தோஷத்தினால் சிவன் கையிலேயே கபாலம்

ஒட்டிக் கொண்டுவிட்டது. 


திருகி எடுத்தால் ரத்தம் சொட்டிய ஈரத்துடன் 

கூடிய ஓட்டைக் கையிலே வைத்திருக்கும்

 சுவாமியை உடைய ஊர் 'ஈரோடு' என்றார்.

அயோத்தி கோவிலை அலங்கரிக்க போகும் உற்சவர்

 அயோத்தி கோவிலை அலங்கரிக்க போகும் உற்சவர் கும்பகோணத்தில் செய்து இப்போது அயோத்தி செல்லும் வழியில் சென்னை வந்துள்ளார்.  அவரின் தரிசனம் .



Video of Bhagawan Vishnu in Sleeping Position

Video of 1400 years of the old murti of  Bhagwan Vishnu in a sleeping position at Budhanilkantha, Nepal



Tuesday, July 20, 2021

Ashada Navaraathiri Festival 2021 - Tanjore - (19-7-21) Tenth Day decoration

SRI MAHA VARAHI - FLOWER DECORATION

தஞ்சை பெரிய கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். 

அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் 9-ம் தேதி தொடங்கியது. பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நேற்றுடன் ஆஷாட   நவராத்திரி  விழா நிறைவடைந்ததுநேற்றைய தினம்  வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெற்றது.

Source: https://in.pinterest.com/pin/524036106646314197/

Ashada Navaraathiri Festival 2021 - Tanjore - (18-7-21) Nineth Day decoration

SRI MAHA VARAHI - VEGETABLE DECORATION

     தஞ்சை பெரிய கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். 

    அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் 9-ம் தேதி தொடங்கியது. பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    9-ம் நாளான நேற்று முந்தினம் (18-7-21) காய்கறி அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

Source: https://www.maalaimalar.com/devotional/worship/2021/07/19113925/2836178/Ashada-Navaratri-Varahi-Amman-Big-Temple.vpf

Sunday, July 18, 2021

ராமேஸ்வரம் பற்றி அறியாத 120 தகவல்கள்... (120 interesting facts about Rameshwaram)

 1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம்.

 

2. ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தி வாகனம், விக்கிரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் பொன்னாலானது.

 

3. பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் பொழுது நந்தி தேவர், சுவாமிக்குப் புறங்காட்டாமல் சுவாமிக்குப் பின்புறமாக சுவாமியை முன்னோக்கியவாறு செல்வது இங்கு மரபு.

 

4. கோவிலின் முதல் பிரகாரத்தில் 144 விக்கிரகங்களும் இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கோவிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள் தோறும் பூஜை நடத்தப்படுகிறது.

 

5. வெள்ளிக்கிழமை இரவு மலைவளர்க் காதலி அம்மன் கொலு முடிந்து தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வரும் பொழுது மேல் கோபுர வாசலுக்கு அருகில் உள்ள மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் சிலைக்கு பரிவட்டம் சூட்டும் முறை இன்றும் இருந்து வருகிறது.

 

6. தாய்லாந்து மன்னர் முடி சூட்டும் பொழுது கங்கை நீரினால் நீராட்டும் சடங்கு ஒன்று அங்கே உள்ளது. இதனைச் செய்பவர்கள் உச்சிக்குடும்பி வைத்துள்ள ஆத்திக மக்கள். இவர்களது முன்னோர்கள் ராமேசுவரத்தில் இருந்து சென்று தாய்லாந்தில் நிலைத்தவர்கள்.

 

7. பாரத நாட்டின் மிகுந்த புனிதத் தலங்களாக நான்கு தலங்கள் மட்டும் கருதப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ராம்நாத் என்ற ராமேசுவரம் எஞ்சிய மூன்று தலங்களும் வட நாட்டில் அமைந்து இருப்பன. இவை துவாரகநாத், பத்ரிநாத், கேதாரிநாத் என்ற வைணவத் தலங்கள்.

 

8. ராமேசுவரம் கோவிலுக்கு திருப்பணிகள் செய்து சேதுபதி மன்னர்களை கவுரவிக்கும் வகையில் சேதுபதி ஈஸ்வரர் என்ற பெயரில் சிறு கோவில் ஒன்று ராமேசுவரம் கோவிலில் உள்ளது. அணுக்க மண்டபத்திற்கு வடமேற்கு மூலையில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

 

9. ராமேசுவரம் கோவிலின் வழிபாடுகள், விழாக்கள், ஆகியவற்றைக் காலமெல்லாம் சிறப்பாக நடைபெற சேதுபதி மன்னர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

 

10. விழாக்காலங்களில் இரவு நேரங்களில் கோவிலினை அடுத்த பரந்த வெளிகளில் ராமாயணக் கதையை எளிதாக மக்களுக்கு உணர்த்தும் வகையில் எளிய இனிய ஒயில் ஆட்டக்காரர்களின் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் முன்பு நடைபெற்று வந்தன. இப்போது அந்த வழக்கம் இல்லை.

 

11. ராமேசுவரம் கோவிலின் மண்டபங்கள், சன்னதிகள் முதலியவை பாண்டிய நாட்டு முறையில் காணப்படுகின்றன. 40 அடிகள் நீளமுள்ள பெருங்கற்களினால் செய்யப்பட்ட உத்திரங்கள் முதலியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

12. செதுக்கி மெருகிடப்பட்ட ஒருவகைக் கருப்புக் கல்லால் கருவறை கட்டப்பட்டுள்ளது.

 

13. இக்கோவிலுள்ள நந்தி வேலைப்பாடுமிக்க சுதையினாலான பெரிய உருவமுடையதாகும். இந்நந்தி 23 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் உடையதாக விளங்குகின்றது.

 

14. மூன்றாம் பிரகாரத்திலிருக்கும் ராமலிங்கப் பிரதிஷ்டை உருவங்கள் தத்ரூபமாக காட்சியளிக்கின்றன. அவ்வுருவங்கள் உயிருள்ளவை போன்றே விளங்குகின்றன.

 

15. அனுப்புமண்டபம், சுக்கிர வார மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை விசாலமாகவும் காற்றோட்டம் மிக்கவையாகவும் அமைக்கப்பட்டுள்ளமை தனிச்சிறப்புடையது.

 

16. கோவிலில் உள்ள உலோகத்தினால் செய்யப்பட்ட குதிரைச்சொக்கர் உருவம் மிகவும் கம்பீரமாக கலைத்திறன் மிக்கதாக காணப்படுகிறது.

 

17. ராமநாதர் கோவிலிலிருந்து 1903,1905,1915-ம் ஆண்டுகளில் அரசாங்கத்தார் பல கல்வெட்டுக்களை படியெடுத்து பதிவு செய்துள்ளனர்.

 

18. அம்பிகை சன்னதியில் உள்ள தூண் ஒன்றின்மீது "இரணிய கர்ப்பயாஜி விஜயரகுநாத சேதுபதி கட்டத்தேவர்'' என்று பொறிக்கப்பட்டுள்ளது.

 

19. முதல் பிரகாரத்திலிருந்து வெளிவரும் வாயிலில் உள்ள கதவுக்கு மேல்புறமுள்ள ஒரு கல்வெட்டில் சைவ ஆகமங்களில் வல்லவரான ராமநாதர் என்ற பெருந்துறவி அழிந்து போன பிரகாரத்தை கட்டினார் என்று கூறப்படுகின்றது.

 

20. பள்ளியறையில் உள்ள வெள்ளி ஊஞ்சலின் முன்பக்கம் விஜயரகுநாத சேதுபதி கட்டதேவரால் அளிக்கப்பட்டது என்றும் வெள்ளியின் நிறையும் மதிப்பும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன.

 

21. முதற்பிரகாரத்தின் வடசுவரில் உள்ள கல்வெட்டில் சகம்1545 (கி.பி.1623) ஆம் ஆண்டில் நடமாளிகை மண்டபம், அர்த்த மண்டபம் இவற்றை உடையான் சேதுபதி கட்டத்தேவர் மகன் கூத்தன் சேதுபதி கட்டத்தேவர் கட்டியதாக கூறப்பட்டுள்ளது.

 

22. அம்பிகை சந்நிதியிலுள்ள கொடிமரத்தில் கோபதிப்பர் சகம் 1390 (கி.பி.1468) ஆம் ஆண்டில் அதை நிலைநிறுத்தியதாகக் கூறும் எழுத்துக்கள் காணப்படுகின்றன.

 

23. ராமநாதர் கருவறை நுழைவாயிலில் உள்ள கன்னடக் கல்வெட்டு ஒன்று ராமநாதருக்கு கவசம் அளிக்கப்பட்டதை கூறுகின்றது.

 

24. தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற முப்பெரும் சிறப்புக்களை உடையது ராமேஸ்வரம்.

 

25. ராமேஸ்வரம் கோவிலின் கருவறையில் ராமநாத சுவாமிக்கும் ஏனைய இறைமேனிகளுக்கும் பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகிய தெய்வ கைங்கரியங்களில் பல நூற்றாண்டுகளாக ஈடுபட்டு இருப்பவர்கள் மராட்டிய பிராமணர்கள் ஆவர். இது தமிழக திருக்கோவில்களில் வழிபாட்டு நடைமுறைகளுக்கு வேறுபட்ட ஒன்று ஆகும்.

 

26. ராமேசுவரத்தில் பூஜை செய்யும் மராட்டிய பிராமணர்கள் மொத்தம் 512 பேர் என்பதும் அவர்கள் கி.பி.14-ம் நூற்றாண்டு முதல் ராமேஸ்வரத்தில் இருந்து வருவதும் தெரிய வருகிறது. இவர்களைப் பண்டாக்கள் என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்.

 

27. ராமேஸ்வரம் ராமநாதர் கோவில் ராமபிரானால் எழுப்பப்பட்ட பெருமையுடையது.

 

28. காசி யாத்திரை சென்றவர்கள், ராமேஸ்வரத்திற்கு சென்று தனுஷ்கோடியில் தீர்த்தமாடி ராமேஸ்வர லிங்கத்தை வழிபட்டால் தான், அக்காசியாத்திரை முழுமை பெறும் என்பது இந்து சமயத்தவரின் கொள்கை - நம்பிக்கை.

 

29. இத்தலத்து கோவிலில் எழுந்தருளியுள்ள ராமநாதப் பெருமானுக்கு நாள்தோறும் கங்கையிலிருந்து கொண்டுவரப்படும் தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படுவது தனிச்சிறப்புடையது.

 

30. பாடல் பெற்ற சிவதலங்களுள் இத்தலமும் ஒன்று. இத்தலத்தை திருஞான சம்பந்த சுவாமிகள் இரண்டு திருப்பதிகங்களாலும், திருநாவுக்கரசு சுவாமிகள் ஒரு திருப்பதிகத்தாலும் போற்றிப்பாடியுள்ளனர்.

 

31. இத்தலத்திற்கு தமிழிலும், வடமொழியிலும் நூல்கள் உண்டு. மிகப்பழைய நூல்களிலெல்லாம் இத்தலம் குறிக்கப்பெற்றுள்ளதால் இதன் பழமைச் சிறப்பு நன்கு விளங்குகின்றது.

 

32. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இதுவாகும்.

 

33. ராமேஸ்வரத்திற்கு "கந்தமானதனபர்வதம்" என்ற புராணப்பெயரும் உண்டு.

 

34. ராமேசுவரம் கோவில் பிரகாரங்களின் மொத்த நீளம் 3850 அடி. இக்காலத்தை போல போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில் இத்துணை கற்களை கொண்டு ராமேசுவரம் தீவில் இத்திருக்கோவிலை நம் முன்னோர்கள் எவ்வாறு எழுப்பினார்கள் என்பது வியப்பாக உள்ளது.

 

35. பெர்கூசன் என்னும் அறிஞர், "திராவிடக் கட்டிடக் கலையமைப்பின் சிறப்பை ராமேசுவரம் கோவிலில் முழுமையாக காண முடியும். அதே நேரத்தில் கட்டிடக் கலையின் குறைபாடுகள் உள்ள ஒரு கோவிலை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அதற்கும் ராமேசுவரம் கோவிலைத்தான் காட்ட முடியும்'' என கூறியுள்ளார்.

 

36. கி.பி.12ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட பராக்கிரமபாகு என்ற மன்னன் இக்கோவிலை புதுப்பித்ததாக தெரிய வருகின்றது.

 

37. சுவாமி விவேகானந்தர் 1897-ம் ஆண்டு ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தந்து "உண்மை வழிபாடு'' என்னும் பொருள் பற்றி ஓர் அரிய சொற்பொழிவாற்றினார்.

 

38. ஆனி மாதம் நடைபெறும் பிரதிஷ்டை விழாவும், ஆடிமாதம் நடைபெறும் திருக்கல்யாண விழாவும், மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி விழாவும், ராமேசுவரம் கோவிலில் நடக்கும் மிகவும் சிறப்பான திருவிழாக்களாகும்.

 

39. தென்பாண்டி நாட்டிலே தேவாரப் பாடல் பெற்ற பதினான்கு திருத்தலங்களுள் ஒன்றாகிய ராமேசுவரத்திற்கு இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை வழிபடுகின்றனர்.

 

40. ராமநாதபுரம் மாவட்டத்தின் தென்கிழக்கு கோடியில் உள்ள ராமேசுவரம் என்னும் தீவின் வடபாகத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவிலும், ராமநாதபுரத்திலிருந்து 33 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

 

41. இத்தலத்திற்கு "தேவநகரம்தேவை" என்னும் திருப்பெயர்களும் உண்டு.

 

42. கந்தமாதனம், தனுஷ்கோடி, தர்ப்பசயனம் ஆகிய மூன்றும் உள்ளதால் "முக்தி தரும் சக்தி உடைய தலம்'' என்ற சிறப்பை ராமேசுவரம் பெற்றுள்ளது.

 

43. ராமபிரான் ராமேசுவரத்தில் மட்டுமல்ல வேதாரண்யம், பட்டீசுவரத்திலும் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.

 

44. ராமேஸ்வர சேதுக்கடல் தீர்த்தம் 2 லட்சம் மைல் சுற்றி, சுழன்று வருவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

 

45. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடலின் கீழ் உள்ள மூலிகைகள் கடல் மேல் மட்டத்துக்கு வந்து சேது கரையில் மட்டுமே ஒதுங்குவதையும் விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

 

46. கயிலாய மலையில் உள்ள மானசரோவர் தீர்த்தமும், சேது தீர்த்தமும் தனுஷ் கோடியில் சங்கமம் ஆவதாக நம் முன்னோர்கள் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர்.

 

47. ராமேசுவரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் அந்த காலத்தில் 36 நாட்கள் தங்கி இருந்து தீர்த்தமாடி செல்வார்கள். அது மெல்ல, மெல்ல குறைந்து தற்போது ராமேசுவரத்துக்கு ஒரே நாளில் சென்று விட்டு வந்து விடுகிறார்கள்.

 

48. ராமேஸ்வரம் தல யாத்திரையில் முக்கிய அங்கம் வகிக்கும் தேவிபட்டினம். சூரியனாக கருதப்படுகிறது. பாம்பன் பைரவராகவும், ராமேசுவரம் அம்பாளாகவும், தனுஷ்கோடி சேதுவாகவும், திரும்புல்லாணி மகா விஷ்ணுவாகவும், உத்தரகோடி மங்கை நடராசர் ஆகவும் கருதப்படுகிறது.

 

49. ராமேசுவரம் கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களிலும் நீராடும் போது நிதானமாக நீராட வேண்டும். சில வழிகாட்டிகள் பக்தர்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நீராட வைத்து விடுகிறார்கள்.

 

50. ராமேசுவரம் கோவிலில் உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் ஜீவ சத்துக்கள், மின் காந்த அலைகள் உள்ளன. தீர்த்தம் உங்கள் தலையில் நன்கு பட்டால்தான் அந்த சக்திகளை நீங்கள் முழுமையாக பெற முடியும்.

 

51. ராமேசுவரம் கோவிலில் ஒரே சங்கினுள் அடுத்தடுத்து இரு சங்குகளை கொண்ட தெய்வீக திரிசங்கு உள்ளது.

 

52. ராமநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காகவே இத்தலத்தில் பிரத்யேகமாக 1008 அபிஷேகச் சங்குகள் உள்ளன.

 

53. ராமேசுவரம் கோவிலில் முழுக்க, முழுக்க மூலிகைகளால் உருவாக்கப்பட்ட புதுமையான ஒரு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்துக்கு வைணலிங்கம் என்றுபெயர்.

 

54. ராமேசுவரம் மூலவரை தொட்டு பூஜை செய்யும் உரிமை காஞ்சி பெரியவர், சிருங்கேரி மகா சன்னிதானம், நேபாள நாட்டு மன்னர் ஆகிய 3 பேருக்கும் மட்டுமே உண்டு.

 

55. ராமபிரான் சூரிய குலத்தை சேர்ந்தவர். அந்த குலத்தின் நேரடி வாரிசாக நேபாள மன்னர் குடும்பம் கருதப்படுகிறது. எனவே நேபாள மன்னர்களின் குல தெய்வமாக ராமேசுவரம் தலம் திகழ்கிறது.

 

56. ராமேஸ்வரம் ஆலயத்துக்குள் பூஜை செய்யும் ஒவ்வொருவரும் சிருங்கேரி மகா சன்னிதானத்திடம் சிவாச்சாரிய தீட்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

57. ராமேசுவரம் தலத்தில் மனம் உருகி வழிபட்டால் புத்திரபேறு, நாகதோஷம் நிவர்த்தி இரண்டையும் உறுதியாகப் பெறலாம்.

 

58. ராமேசுவரம் தலம் தோன்றி 10 சதுர்யுகம் ஆகிறது என்கிறது ஒரு குறிப்பு. அதன்படி கணக்கிட்டால் ராமேஸ்வரம் கோவில் தோன்றி சுமார் 4 கோடி ஆண்டுகள் ஆகிறது.

 

59. ராமனுக்கு உதவிய குகன் பற்றி உங்களுக்குத் தெரிந்து இருக்கும். அந்த குகனின் வழித் தோன்றல்கள் தான் சேதுபதி மன்னர்கள் என்று கருதப்படுகிறது.

 

60. ராமேஸ்வரம் கோவில் கட்டுமானத்துக்கு இலங்கை திரிகோண மலையில் இருந்து பிரமாண்டமான கருங்கற்கள் வெட்டி எடுத்து வரப்பட்டது.

 

61. 1693-ல் ராமேஸ்வரம் கோவிலை தகர்க்க முயன்றனர். சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் வெகுண்டு எழுந்து ராமேசுவரம் கோவிலை காப்பாற்றினார்கள்.

 

62. ராமேசுவரம் கோவிலுக்கு அள்ளி, அள்ளி கொடுத்த சேதுபதி மன்னர்களுக்கு ஆண் வாரிசு இல்லாமல் போகும் என்று தாயுமானவர் சாபம் விட்டாராம். எனவே தான் அந்த அரச குடும்பம் பலதடவை வாரிசு இன்றி போனதாக சொல்கிறார்கள்.

 

63. 1803-ல் சேதுபதிகளின் வாரிசு பலவீனத்தால் ராமேஸ்வரம் ஆலய உரிமையை மன்னர் குடும்பம் இழந்தது. 1853-ல் ஆங்கிலேயர்கள் நிர்வாகத்துக்காக ஒரு குழுவை ஏற்படுத்தினார்கள். பாஸ்கர சேதுபதி மன்னர் லண்டன் பிரிவியூ கவுன்சில் வரை சென்று போராடி 1893-ல் ஆலய உரிமையை மீட்டார்.

 

64. 1901-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஆலய நிர்வாகத்தை .எல்.ஆர். அருணாச்சலம் செட்டியார் ஏற்றார்.

 

65. ராமேசுவரம் கோவிலுக்கு ஏராளமான மண்டபங்கள் உள்ளிட்ட திருப்பணிகளை செய்ய வட மாநில கோடீசுவரர்கள் பலர் முன் வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை செயல் வடிவம் பெறாமல் போய்விட்டது.

 

66. ராமேஸ்வரம் கோவில் ராஜ கோபுரத்தில் பல தடவை பழுது ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது.

 

67. ராமேசுவரம் கோவிலுக்கு 1975-ம் ஆண்டுக்கு பிறகு 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் கும்பாபிஷேகம் சீராக நடத்தப்படவில்லை.

 

68. ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதால் கோவிலின் பெரும் பகுதி எப்போதும் ஈரமாக மாறி விடுகிறது. சிலர் அதில் வழுக்கி விழுகிறார்கள். இதை தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்தால் நல்லது.

 

69. ராமேசுவரம் ராமநாதரை நேபாள மன்னர்கள் மட்டுமின்றி தாய்லாந்து, மைசூர், திருவிதாங்கூர் மன்னர்களும் வழிபட்டு பலன் பெற்றுள்ளனர்.

 

70. 1925-ல் ராமேசுவரம் கோவிலில் கடல் அரிப்பு ஏற்பட்டது. அம்பா சமுத்திரத்தில் இருந்து

ரூ.25 லட்சம் செலவில் கருங்கற்கள் கொண்டு வந்து கடல் அரிப்பை தடுத்து ஆலயத்தை விரிவுபடுத்தினார்கள்.

 

71. ஆங்கிலேயர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியாவிலே மிகச் சிறந்த ஆலயம் என்று ராமேசுவரம் கோவிலை கூறினார்கள்.

 

72. மத்திய அரசு 1951-ல் இனாம் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்ததால் ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி சொத்துக்கள் பறி போனது.

 

74. ராமேஸ்வரம் கோவில் ஆலய நிர்வாகத்தை 1959-ம் ஆண்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஏற்றது.

 

75. ராமேசுவரம் கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் உண்டியல் வசூல் மிகவும் குறைவாகவே வருகிறது.

 

76. ராமேசுவரம் கோவிலில் சுமார் 300 பேர் நிரந்தர ஆலய ஊழியர்களாக உள்ளனர்.

 

77. ராமேசுவரம் கோவிலுக்கு சேதுபதி மன்னர்கள் செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் அவர்களது பெயர், நட்சத்திரங்கள் இன்றும் மூலவர் முன்பு சங்கல்பத்தில் ஓதப்படுகிறது.

 

78. ராமேசுவரத்தில் உள்ள ஜோதிலிங்கம், இந்தியாவில் உள்ள ஜோதிலிங்கங்களில் 7-வது லிங்கமாக கருதப்படுகிறது.

 

79. ராமேசுவரம் தலத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் இன்னும் பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதியில் நெய் ஊற்றி விளக்கை எரிய வைத்தால் ராகு-கேது தோஷம் நீங்கும்.

 

80. ராமேசுவரம் கோவிலில் வைணவ ஆலயங்களில் கொடுப்பது போல தீர்த்தம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

 

81. நேபாள நாட்டு பக்தர் ஒருவர் ஒரு லட்சம் ருத்ரங்களால் ஆன ருத்ராட்ச பந்தல் ஒன்றை இத்தலத்தில் அமைத்து கொடுத்துள்ளார்.

 

82. ஐதீகப்படி ராமேசுவரத்தில் வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

 

83. 1935-ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவின் வெள்ளி விழா ஆண்டாகும். அப்போது ராமேசுவரம் கோவில் இந்திய அஞ்சல் தலைகளில் பொறிக்கப் பெற்றது.

 

84. இதிகாச புராண காலத்திலிருந்தே ராமேசுவரம் புனித பூமி என்று இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

 

85. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காலம் தெரியாத காலத்தில் பாடியவற்றைச் சங்க இலக்கியம் என்று தொகுத்தார்கள். அதில் அகநானூறு தனுஷ்கோடி பற்றிப் பேசுகிறது.

 

86. சேது என்ற சொல்லுக்கே பாலம் என்பதுதான் பொருள். அந்தப் பாலத்தையே ஒரு பாலத்தின் மூலமாக நாம் கடக்கிறோம்.

 

87. தமிழ்நாட்டில் பிறந்து வாழ்பவர்களை விட வடநாட்டுக்காரர்களே மிகுதியாக ராமேசுவரத்தைத் தரிசிக்கிறார்கள். ஆண்டு தோறும் இங்கு வருவதை ஓர் ஆன்மீகப் பயணமாகவே வடமாநிலத்தவர்கள் எண்ணியுள்ளார்கள்.

 

88. முத்துப்பேட்டைக்கு அருகில் திருவான்மியூரிலும் ராமன் இலங்கை போகும்போது இறைவனை வணங்கி வழி கேட்டிருக்கிறான். அந்த இடம் திருஉசாத்தானம் என்று அழைக்கப்படுகிறது.

 

89. காசியிலும், சிதம்பரத்திலும் பத்து மாதம் தங்கிய பலனையும், நைமிசாரண்யம், திருப்பதி, ஸ்ரீபர்வதம், மதுரை, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, குடந்தை, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருவாரூர், திருவெண்காடு, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருமுதுகுன்றம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருக்காளத்தி ஆகிய பகுதிகளில் ஓராண்டு தங்கிய பலனையும் தனுஷ்கோடியில் நீராடி ராமநாதரை வணங்கி மூன்றே நாளில் பெறலாம்.

 

90. காசியில் இறப்பது முக்தி தரும், பாணலிங்கம் பல திரளும், நர்மதையில் விரதம் இருப்பது முக்தி தரும், பொறாமையால் போர்க்களமாகிய குருசேத்திரத்தில் பிறருக்குத் தானம் செய்வதே முக்தி தரும் அந்த மூன்று பலனையும் ஒன்றாக்கித் தரும் பெருமை ராமேசுவரத்திற்கே உண்டு.

 

91. இந்திய நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் சி.வி.மாவ்லங்கர் ராமேசுவரம் கோவில் இந்திய தேசியச் சொத்து எனவும் ஒருமைப்பாட்டுக்கு உதவும் சாதனம் என கூறியதைக் கோவில் குறிப்பேடுகளில் காணலாம்.

 

92. மண்ணினால் லிங்கம் செய்தாள் சீதை. அதனால் ராமேசுவரத்தில் யாரும் மண்ணை உழுது பயிர் செய்வதே இல்லை.

 

93. ஆவுடையாராக நிலமே இருக்க பாணலிங்கமாக மட்டுமே இருக்கும். ராமலிங்கத்தைப் போல் இருப்பதால், செக்கை ஆட்டி எண்ணை எடுப்பதும் இவ்வூரில் இல்லை.

 

94. 1925-ல் முதல் குடமுழுக்கும், 27.2.1948-ல் இரண்டாவது குடமுழுக்கும், 5.2.1975-ல் மூன்றாவது குடமுழுக்கும் நடந்தன.

 

95. ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடியவுடன் உடம்பில் மின்சக்தி பாய்ந்தது போல் ஒரு சுறுசுறுப்பு உணர்வைப் பெற முடிகிறது.

 

96. புத்திரகாரகனாகிய குருவுக்குப் பகையான கிரகம் சுக்கிரன். புத்திரஸ்தானத்தில் விரோதமானதாகக் கருதப்படுபவர் சூரியனும் செவ்வாயும் ஆவர். எனவே மகப்பேறு விரும்பியவர்கள் மேற்கூறிய கிரகங்களுக்குரிய ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் நீராடுவது கூடாது என்று விலக்கினார்கள். என்றாலும் சேதுவில் இக்காரணத்திற்காக இந்த நாட்களில் நீராடினால் தவறில்லை என்று கூறப்பட்டுள்ளது.

 

97. பிரேதத்திற்கு நீர்க்கடன் செய்யாதவன், கருவுற்ற மனைவியை உடையவன் வேறு தீர்த்தங்களில் நீராடுவதற்கு உரிமை இல்லை. ஆனால் சேதுவில் நீராடுவதற்கு இவர்களுக்கு தடையுமில்லை. காரணம் நீர்க்கடனுக்குரிய காசியின் பலனை சேது தரும். மேலும் மகப்பேறு தருவதில் இத்தலம் சிறந்திருக்கிறது.

 

98. தீர்த்தமே தெய்வமாயிருப்பதால் கடல் நீராட்டிற்கு விதிக்கப்பட்ட திதி, கிழமை, நட்சத்திரம் முதலிய நியமங்களை மீறியும் இங்கே என்றும் எப்போதும் ஆடலாம். பாதி உதயம், முழு உதயம் என்றெல்லாம் பார்க்காமல் நீராடலாம்.

 

99. பலதீபிகை என்னும் சோதிட நூல் கர்ம நாசத்துக்கு நாகப்பிரதிஷ்டை செய்வதற்குச் சேது உரியது என்று கூறுகிறது.

 

100. புத்திரதோஷம் எதுவாயினும் சேதுவில் நீராடினால் மறையும்.

 

101. காசிக்கு மட்டும் போய் வந்தால் போதாதாம், முதலில் ராமேசுவரம் சென்று நீராடி வணங்கிக் கடலில் மண் எடுத்துக் காசிக்குப் போய், கங்கையில் அதனைக் கொட்டி காசியிலிருந்து மீண்டும் வந்து மறுமுறையும் ராமேசுவரம் போய், காசியிலிருந்து கொண்டு வந்த கங்கை நீரால் ராமநாதருக்கு அபிஷேகம் செய்தால்தான் காசியின் பலன் பூர்த்தியாகக் கிடைக்கும். இந்த மரபு தவறி காசிக்கு மட்டும் போய் வந்தால் பயனில்லை. இதைத்தான் காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது என்ற பழமொழி கூறுகிறது.

 

102. காசி முக்திக்குச் சிறப்புடையது. அதனால்தான் உயிரை உடனே விட விரும்பாமல் வேறு எதையாவது விட்டுவிட்டு வருகிறார்கள். ராமேசுவரமோ உரிய காலத்தில் முக்தியும் பிற்காலத்தில் போகமும் அருளும் பாக்கியமுடையதாகும்.

 

103. மிகுந்த சிறப்புடையது ராமேசுவரம் என்றாலும் தனுஷ்கோடிக்குப் போய் விட்டுத்தான் பிறகு ராமேசுவரம் வர வேண்டும்.

 

104. பாம்பன் நீர் இணைப்பை வில் நாணாகவும், சுற்றிலும் வளைந்த கடல்நீரை வளைந்த வில்லாகவும் கற்பனை செய்தால் அந்த வில்லில் நாண்பூட்டி நிற்கும் அம்புபோலவே ராமேசுவரமும், தனுஷ்கோடியும் நமக்கு ஆகாயத்தில் நின்று பார்க்கும்போது தெரியும்.

 

105. 1964-ல் அடித்த புயலில் ஓர் ரெயில் தனுஷ்கோடியில் தடம் புரண்டது. ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். இருப்புப்பாதை மண் மூடிப்போனது. ராமேசுவரம் கோவில் அகதிகள் புகலிடமானது. மீனவர்களை தவிர வேறு யாரும் தனுஷ்கோடிக்குப் போய் மீண்டும் வாழ்வதற்கு இன்று வரை துணியவில்லை.

 

106. நம்பு நாயகியம்மன் என்னும் மாரியம்மன் கோவிலும் முன்பு தனுஷ்கோடியில் தான் இருந்தது. புயல் அழிவுக்குப் பின் நடராஜபுரத்தில் இருக்கிறது. ராமேசுவரத்தில் காவல் தெய்வங்களில் இதுவும் ஒன்று.

 

107. சித்தப்பிரமை கொண்டோர் சேதுவால் குணம் பெறுவர்.

 

108.ராமேசுவரத்திற்கு பழைய பெயர் கந்தமாதனப் பர்வதம் என்பதே ஆகும். ராமனுக்குப் பின்தான் பெயர் மாறியது.

 

109. சிவனும் உமாதேவியும் ராமேசுவரத்தில் தினமும் வெளிப்படத் தோன்றியபடி உள்ளனர் என்று சேது தல புராணம் சொல்கிறது.

 

110. தனுஷ்கோடிக்குப் போனாலும் போகாவிட்டாலும் ராமேசுவரத்தில் உறுதியாக அக்னி தீர்த்திற்க்குப் போய் நீராடாமல் எந்த யாத்திரிகரும் திரும்ப மாட்டார். இன்றைய நிலையில் அக்னி தீர்த்தத்தில் நீராடுவதே நடைமுறையில் அதிகமாகி உள்ளது.

 

111. 78 அடி உயரமான மேற்குக் கோபுரத்தை சேதுபதிகள் முழுவதும் கருங்கல்லாகவே கட்டி விட்டார்கள். பெரும்பாலும் நிலையும் மேல் தளமும் வரைதான் கருங்கல்லாக இருப்பது வழக்கம். இவர்களோ கலசம் வரை அப்படியே கருங்கல்லாக கட்டியது ஒரு சிறப்பே ஆகும்.

 

112. கீழ்க்கோபுரம் கட்டிய தேவகோட்டை ஜமீன்தார் .எல்..ஆர். செட்டியார் குடும்பத்தினரும் 128 அடி உயரமாக அதே போல் கருங்கல்லாய்க் கட்டி விட்டார்கள். இக்கீழ்க்கோபுரம் 1649-ல் சேதுபதியால் தொடங்கப்பட்டுக் கைவிடப்பட்டதால், 1879 முதல் 1904-க்குள் ஜமீன்தார் இதைக் கட்டியிருக்கிறார். இலங்கை வடகரையில் நெடுந்தீவில் நின்று பார்த்தால் இக்கோபுரம் தெரியும்.

 

113. ராமன் நிறுவிய லிங்கம், அனுமன் லிங்கம், விசாலாட்சி, பருவதவர்த்தினி, நடராசர் ஆகிய ஐவர்க்கும் தனி விமானங்கள் உள்ளன. கோவில் பதினைந்து ஏக்கர் பரப்புள்ளது. நீளம் 865 அடியும், அகலம் 657 அடியும் உள்ள கோவில் இதுவாகும். சில உத்திரங்கள் 49 அடி நீளம் உடையவை ஒரே கல்லால் ஆகியவை.

 

114. வைணவத்தில் கருடசேவையும் சைவத்தில் ரிஷபவாகன காட்சியும் முக்தி தரும் என்பார்கள். அதுவும் கோபுர தரிசனமாகும்போது தான் இக்காட்சிகள் மிகவும் சிறப்புக்குரியதாகக் கருதப்படும். அதற்கு ஏற்ப மண்டப உச்சியில் ரிஷப வாகனக் காட்சியும் பின்புறம் கீழைக் கோபுரம் இருப்பதும் முக்திதரும் தலத்தில் சிறந்த ராமேசுவரத்திற்கு மிகவும் உரியதாய் விளங்குகின்றன.

 

115. விஜயரகுநாத சேதுபதி (கி.பி. 1711 - 1725) நாள் தோறும் குதிரையில் வந்து ராமேசுவரத்தை வழிபட்ட பிறகே இரவு உணவு உண்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

 

116. ராமேஸ்வரம் பகுதி பாண்டியர், சோழர்கள், சிங்களவர், விஜய நகரமன்னர், மதுரை நாயக்கர்கள், மறவர் சீமை அதிபதிகளான சேதுபதிகள் ஆகிய பல்வேறு அரசுகளின் ஆட்சிப் பகுதியாக இருந்தது.

 

117. ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவு முதலில் மதுரை பாண்டிய மன்னர்களது ஆட்சிப் பகுதிகளாக இருந்தது.

 

118. கி.பி.10வது நூற்றாண்டில் பாண்டிய மண்டலத்தைக் கைப்பற்றிய பராந்தக சோழன் ராமேஸ்வரம் திருக்கோவிலில் துலாபாரம் நிகழ்த்தி அவனது நிறைக்குரிய பொன்னைக் கோவிலுக்கு அளித்தான் என்று கி.பி.932-ம் ஆண்டு வேளஞ்சேரி செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

119. மூன்றாம் பிரகாரக் கட்டுமானப் பணியைத் தொடங்கியவரும் மிகச் சிறந்த சிவத்தொண்டராகவும் விளங்கிய முத்து விசய ரெகுநாத சேதுபதி (கி.பி.1713-1725) திருவாரூர் தச்சர்களைக் கொண்டு அழகிய தேர் ஒன்றை செய்து கோவிலுக்கு வழங்கினார். அதோடு அந்தத்தேர் ஓட்டத்திற்கு வடம் பிடித்து அவரே தொடக்கி வைத்தார்.

 

120. வைணவரான ராமர் சைவக் கடவுளான ஈஸ்வரனை சிவலிங்க வடிவத்தில் வழிபட்டதால் சைவர்களும் வைணவர்களும் நாடு முழுவதிலும் இருந்து வந்து வழிபடும் முக்கியத் தலமாக உள்ளது ராமேஸ்வரம்.

 

ஓம் நமசிவாய... 

x